உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.
தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி...!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.
அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.அது சக்திச் சுடரால் காக்கப் பெறும் என்ற சூட்சமத்தையும் காட்டினார்.
அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு...” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி...” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.
நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால் அது நல் வினைப் பயனாகப் பெற்று
1.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
2.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.
அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.
சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்...
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்...?
நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ அதுவே ஆன்ம சக்தியாகச் சரீரத்தையும்
1.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
3.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.
ஆசை என்ற சிறு தொடரில் இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது “மோகம்” என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.
ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவாகப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது...! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.
அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.
நம் ஆத்மாவைக் காக்கும்... காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்...! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.
ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.
அந்த ஜடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.
மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனையோ கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.
பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்றுத் தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையில் உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
1.அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
2.நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.