ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2021

அடுத்தவரின் கஷ்டத்தைப் பரிவுடன் கேட்போர் அனைவரும் வேதனையைத் தான் விலைக்கு வாங்குகிறார்கள்

 

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அடுத்தவருக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். உதவி செய்த பின்... கடைசியில்

1.இந்தப் பாவிப் பயலுக்கு இப்படியெல்லாம் உதவி செய்தேனே…
2.எனக்கு அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேதனைப்பட்டவர்களுக்கு எல்லாம் முதலில் உதவி செய்திருப்போம். கஷ்டங்களை எல்லாம் பரிவுடன் கேட்டு அவர்களிடம் இருக்கும் வேதனைகளை எல்லாம் விலைக்கு வாங்கி விடுவோம்.

வேதனையாகி நோயான பின் என்ன சொல்வோம்…?

நான் இங்கே இவ்வளவு உதவி செய்தேனே... அங்கே அவர்களுக்கு அந்த உதவி செய்தேனே…! எனக்கு இப்படி வந்துவிட்டதே…! என்ற இந்தத் துன்பப்படும் உணர்வுதான் மீண்டும் மீண்டும் வரும்.

காரணம்… உதவி செய்த பின் நாம் நினைத்தவுடன் மற்றவர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் அவர்கள் ஏதாவது ஜோலியாகச் செல்வார்கள்.

அன்றைக்கு நான் எப்படி எல்லாம் உதவி செய்தேன்...! இன்று நான் கூப்பிடுகிறேன்… அவர்கள் வரவில்லையே…! என்று அவர்கள் மீதே எண்ணமே இருக்கும்.

1.உதவி செய்தேன் வரவில்லையே… உதவி செய்தேன் வரவில்லையே… என்று
2.பிறரின் உணர்வைத் தான் எண்ணி வேதனையை இங்கே வளர்த்துக் கொண்டிருப்போம்.

அவர்கள் உணர்வு பூராம் இந்த உடலில் சேர்த்து நோயாகி இறந்தபின் எங்கே செல்வோம்...?

நான் அவனுக்கு உதவி தான் செய்தேன். ஆனால் அவனோ எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தான் பாவி…! என்று எண்ணி வேதனையாகி நோயாக மாறி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு யாருக்கு உதவி செய்தோமோ அந்த உடலுக்குள்ளே தான் போவோம்.

இங்கே வேதனைப்பட்டு எரிச்சல் கொண்டு வெளியேறிய உயிரான்மா அந்த உடலுக்குள் போய் மனிதனாகவும் பிறப்பதில்லை.
1.அங்கே சென்று வேதனையை மீண்டும் உருவாக்கி நோயாக மாற்றி
2.அவனை வீழ்த்தத்தான் செய்யும்... குழந்தையாகப் பிறப்பதில்லை.

அந்த உடலிலும் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டபின் உயிரான்மாவில் விஷம் அதிகமாகி விடுகின்றது.

பாலில் விஷத்தைக் கொஞ்சம் போட்டால் குடித்தால் மயக்கம் வரும். அதிகமான விஷத்தைப் போட்டு விட்டால் சுத்தமாகவே நினைவை இழக்கச் செய்துவிடும்

அது போல் கடைசியில் மனிதனுடைய நினைவுகள் எல்லாம் இழந்த பிற்பாடு எந்த அளவிற்கு விஷத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க விஷம் கொண்ட உயிரினமாகப் பிறக்கச் செய்யும் நம் உயிர்.

புழுவிலிருந்து மிருகமாக வரும் வரையிலும் அவைகளின் உடலில் விஷம் அதிகமாக இருக்கும். பூனை விஷமான உயிரினத்தை அடித்துச் சாப்பிடுகிறது. அது போல் மற்ற உயிரினங்களும் விஷத்தைத் தாராளமாக உட்கொள்கிறது. அந்த உடலுக்குள் ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் சாதாரண ஒரு பல்லியின் எச்சம் நம் மீது பட்டாலே உடலில் கொப்புளம் ஆகிவிடும். விஷம் பட்டவுடனே நம் உடலில் இத்தனை நிலையும் ஏற்படுகிறது.

நாம் விஷத்தை நீக்கும் உடலாகப் பெற்றிருந்தாலும் விஷமான உணர்வு நமக்குள் கலந்து விட்டால் நம்மைச் செயலற்றதாக ஆக்கி விடுகிறது.

ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொண்டால் உடலிலே அது வலுவின் தன்மையாகக் கொண்டு வருகின்றது. அந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை

புழுவிலிருந்து மற்ற எல்லா உயிரினங்களுக்கும் விஷம் உண்டு. தேளுக்கு ஒரு விஷம் பாம்புக்கு ஒரு விஷம் கட்டுவிரியனுக்கு ஒரு விஷம் புலிக்கு ஒரு விஷம் பூனைக்கு ஒரு விஷம் நாய்க்கு ஒரு விஷம் இப்படி எல்லாவற்றிலும் விஷத்தின் வலிமை உண்டு.

ஆனால் மனிதன் எடுத்துக் கொண்ட குணம் அடிக்கடி யாரிடமாவது சள்... சள்... சள்... என்று பேசும் நிலைகள் வந்து விட்டால்
1.“என்னை இப்படிச் செய்து கொண்டே இருக்கின்றான்…” என்று சள்..சள்…சள்… என்று சொல்லச் சொல்ல
2.யாரைக் கண்டாலும் வெறுத்துப் பேசச் செய்யும்.

இப்படிப் பேசி வெறுக்கும் நிலைகள் வளர்ந்தால் அந்த நஞ்சின் தன்மை உடலிலே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றபின் எங்கே செல்வோம்...?

1.நாயிடம் இருக்கும் விஷமும் இந்த உயிராத்மாவில் வளர்த்துக் கொண்டே விஷமும் ஒன்றாகி
2.உயிர் நம்மை அடுத்து நாயாகப் பிறக்க வைத்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள். நாம் நினைக்கின்றோம் ஒன்றுமே செய்யவில்லை என்று…!

ஆனால் உயிரின் வேலை… நாம் சுவாசித்து எடுத்ததை எல்லாம் உடலாக உருவாக்கி உடலில் விளைந்த சத்தை உயிராத்மாவாக மாற்றி அதிலே எது வலுவோ அதற்குத் தக்க அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்தந்த உடலாக மாற்றிவிடும்.

மனிதனாக இன்று இருக்கும் நாம் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!