ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2021

இயற்கையின் படைப்பு

 

உதாரணமாக ஒரு கண்ணில்லாத புழுவை குளவி கூட்டிலே எடுத்துக் கொண்டு வைக்கின்றது. இதை எல்லாம் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் கூட்டிலே எடுத்து வைப்பதற்கு முன் முதலிலே குளவி மண்ணைப் பிசைகின்றது. எதை வைத்து…?

குளவிக்குள் உமிழ் நீர் ஊறும். உமிழ் நீர் ஊறும் ஊற்றுக்குத் தக்கவாறு அது மண்ணை நோண்டுகின்றது. தன் உமிழ் நீரை அதற்குள் கொட்டி மண்ணைப் பிசையும்போது கொய்ங்…கொய்ங்… டுங்...டுங்... என்று அதிலே இரைச்சலைக் கொடுக்கின்றது.

தன் உணர்வின் தன்மை கொண்டு இரைச்சலைக் கொடுக்கின்றது. இறக்கையாலும் இந்த நாதத்தைக் கொடுக்கின்றது. நாதத்தைக் கொடுத்து மண்ணை உருண்டையாகச் சேர்க்கின்றது,

அந்த மண்ணிற்குள் கலந்திருக்கக் கூடிய காந்த ஈர்ப்பிற்குள் குளவியின் நாதங்கள் இணைகிறது. ஏனென்றால் மண்ணும் அது ஒன்றோடு ஒன்று இணைந்து தான் அது வளர்ச்சியின் தன்மை பெற்றது.

தன் ஒலிகளைச் செருகி உருட்டி எடுத்து வந்த மண்ணை வைத்து கூட்டைக் கட்டுகிறது. கூடு கட்டிய பின் ஒரு புழுவைத் தேடிச் செல்கின்றது. புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து கூட்டிற்குள் வைத்த பின் புழுவை இலேசாகக் கொட்டுகின்றது.

கொட்டிய பின்
1.குளவியின் பால் புழுவினுடைய நினைவுகள் அனைத்தும் திரும்புகின்றது.
2.அதே சமயத்தில் புழுவின் உயிரின் துடிப்பின் வேகம் அதிகமாகக் கூடுகின்றது. அதாவது இயக்கச் சக்தி அதிகமாகிறது.

தேள் கொட்டியவுடன் நாம் துடிக்கின்றோம் அல்லவா…! அல்லது விஷமான குளவி கொட்டி விட்டாலும் நாம் துடிக்கின்றோம் அல்லவா…!

அதைப் போல அந்தப் புழுவை குளவி கொட்டிய பின் இந்த உணர்வுகள் தூண்டி எழுந்து அது உற்சாகத்துடன் வருகிறது. வேகத்தின் நிலைகள் அதிகமாகின்றது.

குளவி கொட்டிய விஷத்தின் தன்மை அந்தப் புழுவின் தோலைச் சீக்கிரம் கருகச் செய்துவிடுகின்றது. கருகிய பின் சருகு போல் ஆகிறது. சருகு போல் ஆகும்போது அடுத்து இரண்டாம் தடவை குளவி கொட்டுகிறது. புழுவின் துடிப்பு இன்னும் அதிகமாகின்றது.

குளவி கொட்டிய வேகத்தில் புழுவின் மேல் தோல் சருகு போல ஆகும் பொழுது
1.கோழி முட்டைக்கு எப்படி ஓடு உருவாகின்றதோ
2.அதைப்போல புழுவின் தசைகளுக்குள் விஷங்கள் ஊடுருவி
3.அந்தத் தசைகள் அனைத்தும் அழுகி சருகு போல ஆகி ஒரு கருவாக உருவாகின்றது.

ஆனால் புழு உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் இந்த துடிக்கும் நிலைகள் பெறுகின்றது. அப்போது மண்ணை வைத்து அந்தப் புழுவைக் குளவி மூடி விடுகின்றது.

குளவி கொட்டியதால் கருவிற்குள் அடங்கிய இந்த புழுவின் உயிர் துடிப்பு துரிதம் ஆகிறது. குளவியையே அப்போது எண்ணி எங்குகிறது.

ஆனால் அடைப்பட்ட மண் கூட்டிலே
1.குளவி உமிழ் நீருடன் கலந்து விஷத்தைக் கொட்டியிருப்பதால்
2.புழுவிற்குள் இருக்கக்கூடிய காந்தம் வேகத் துடிப்பாகும்போது
3.கூட்டிற்கு வெளியில் இருக்கக்கூடிய காந்த அலைகளைத் தனக்குள் ஈர்க்கும் நிலைகள் வருகின்றது.

அவ்வாறு ஈர்க்கப்படும் போது இந்த உயிரின் துடிப்பு வேகும் போது காந்தப் புலன்கள் அதிகமாகிச் சூடாகிறது. சூட்டினால் உடலுக்குள் இருக்கும் அழுகிய புழுவின் தசையை ஆவியாக மாற்றித் தன் உயிரின் துடிப்பிற்குள் கொண்டு வருகிறது.

தீபாவளிக் காலங்களில்…
1.மத்தாப்பை நெருப்பை வைத்துக் கொளுத்தினால் அது எப்படிப் பல ரூபங்கள் ஆகின்றதோ
2.அதைப் போல குளவியினுடைய உணர்வலைகளை… கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளாகச் சேர்த்து
3.புழுவின் தன்மை குளவியாக மாறுகின்றது.

இப்படிக் குளவியாக மாறி வந்த பின் அந்தக் குளவிக்கும் உமிழ் நீர் வருகின்றது. அப்பொழுது அந்த கூட்டிற்குள் உமிழ் நீரைக் கொட்டுகின்றது. அது ஈரமானபின் கூட்டிலே துவாரமிட்டுத் தன்னிச்சையாக வெளியே வருகின்றது.

ஆனால் முதலில் கூட்டை அடைத்து வைத்த அந்தக் குளவி வந்து இந்தக் கூட்டைத் திறப்பதில்லை. புழு குளவியான பின் அதற்குள் உமிழ் நீர் சுரந்து அந்த உமிழ் நீரைக் கொட்டித்தான் உருவான குளவி வெளியே வருகின்றது.

குளவியாக வெளியே வந்தபின் முதலில் உருவான குளவி எதைச் செய்ததோ… அதே போல் இதுவும் புழுவைத் தூக்கி வந்து மீண்டும் தன் இனத்தை உருவாக்குகிறது.