சாமி (ஞானகுரு) எனக்கு அருள் வாக்கு கொடுத்தார்… நடக்கவில்லையே…! என்று சிலர் எண்ணுவார்கள்.
காரணம் என்ன…?
1.நீங்கள் இதைச் செய்யுங்கள்… உங்களுக்கு நடக்கும்…! என்று யாம் வாக்காகச் சொல்கின்றோம்
2.ஆனால்… தான் எதை எண்ணிக் கேட்டார்களோ அது மேலே மட்டுமே எண்ணம் இருக்கும்… அதே உணர்வுகள் வரும்…
3.யாம் சொல்லும் உபாயத்தை எடுத்து அதைப் பாய்ச்ச வேண்டுமென்றால் அது வராது.
அந்த நேரத்தில் வேதனை உணர்வுகள் அதிகமான பிற்பாடு “நடக்கவில்லையே…. சாமி..! இப்படி இருக்கின்றதே…!” என்ற வேதனையை எடுத்து எனக்குள் பாய்ச்ச முடிகிறது.
1.அந்த வேதனை உணர்வு நல்ல உணர்வுகளை உங்களுக்குள் அழித்துவிடும்.
2.நான் கொடுத்த வாக்கை அங்கேயே மடியச் செய்து விடுகின்றது.
கடும் நோயாக இருந்தாலும் சரி…
1.உங்களுக்கு நோயில்லை போ…! என்ற வித்தைத் தான் யாம் விதைக்கின்றோம்
2.அதை எடுத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெருகுகிறது
3.மகரிஷிகள் அருள் சக்தி உள்ளே சென்றால் நோய் நீங்குகிறது
4.இதையே திரும்ப எண்ணுங்கள் என்று சொல்கிறோம்
யார் செய்கின்றார்கள்…? இல்லை…!
சாமி நீங்கள் வாக்கு கொடுத்தீர்களே…! அது எங்கே சென்று விட்டது…? இன்று இப்படி என்னைத் தான் (ஞானகுரு) நம்ப முடிகின்றதே தவிர உங்களை நம்புவதே இல்லை.
1.ஆனால் நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ
2.அதை உங்கள் உயிர் உணர்வின் அணுவாக மாற்றும்…!
விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் தீமைகளையும்… தீய வினைகளையும் நிறுத்துதல் வேண்டும். ஆனால் ஆசை நிலைகளில் தான் நாம் இன்று அலைந்து கொண்டிருக்கின்றோம்.
தீமைகளை நிறுத்தும் ஆற்றல் “அங்குசபாசவா” என்ற நிலையில் ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம். தீமையைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்து வந்த நிலையின் வல்லமையைக் காட்டுவதற்குத் தான் விநாயகர் கையிலே அங்குசத்தைக் கொடுத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
மனிதன் எதனையுமே அடக்கி ஆளும் சக்தி பெற்றவன் என்ற நிலையில் ஏன் இதைச் செய்ய முடியவில்லை…!
எவ்வளவு பெரிய யானையாக இருந்தாலும் சிறு அங்குசத்தை வைத்துதான் அதை அடக்குகிறார்கள். அதே போல் தான்
1.கடும் நிலையாக வாழ்க்கையில் வந்தாலும்
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வை வைத்து அடக்க முடியும்… அடக்குவீர்கள்.
குறுகிய காலமே மனித உடலில் வாழ்கின்றோம் என்பதை உணர்ந்து வரும் தீமைகள் அனைத்தையும் மகரிஷிகள் உணர்வை வைத்து அடக்கப் பழகவேண்டும். அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.
அது அல்லாது…
1.மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று இந்த உடலையே நாம் பெரிதாக மதித்தால்
2.இந்த உடல் நமக்குச் சொந்தமானது அல்ல...!
3.இதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே யாம் பதிவு செய்யும் அருள் ஞானத்தை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து எத்தகைய தீய வினைகள் வந்தாலும் அதை நிறுத்தும் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்தல் வேண்டும்.