ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2021

ஞானகுருவின் புத்தாண்டு வாழ்த்தும் அருளாசியும்

 

ஞானிகள் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மை நிலைகளை யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது “சாமி என்னமோ சொல்கிறார்...” என்று விட்டு விடாதீர்கள்.

காரணம் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்யவே இதைச் சொல்கிறேன். பதிவானதை மீண்டும் நீங்கள் நினைவு கூறும் பொழுது நிச்சயம் அது உங்களுக்குள் இயங்கத் தொடங்கும்.

ஒருவன் கடுமையாத் திட்டி விட்டால் நீங்கள் அதைக் கூர்மையாகப் பதிவு செய்து கொள்கிறீர்கள்.
1.அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பன்மடங்கு ஆத்திரமூட்டும் செயலாகவும்
2.அறிவை இழக்கச் செய்யும் செயலாகவும் உங்களுக்குள் கொடூரத் தன்மைகளையும் விளைவிக்கச் செய்கிறது.

அப்படி விளைந்து விட்டால் சகோதர உணர்வுடன் நீங்கள் இருந்தாலும் இந்தச் சொல்லின் தன்மை கடும் சொல்லாக வெளிப்படும். நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வலைகள் உடல் நோயாக மாறும் நிலையும் வந்து விடுகிறது.

ஒருவன் செய்த கொடூரத் தன்மையின் நிலைகள் இங்கே ஊடுருவி நல்ல பண்பை இழக்கச் செய்து தீமை செய்யும் உணர்வின் தன்மையாக நம்மை இயக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுப் பழக வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தாண்டு
1.மகிழ்ச்சி பெறும் நன்னாளாக அது வளர வேண்டும்
2.மகிழ்ச்சி பெறும் செய்தியாக நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்
3.மகிழ்ச்சி பெறும் செயலாக அனைவரும் பெற வேண்டும்
4.நீங்கள் விடும் மூச்சலகள் அனைவரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாகப் படர வேண்டும்
5.உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருள்கள் அனைத்தும் நீங்கிட வேண்டும்
6.அந்த மெய்ப்பொருள் காணும் மெய் வழிகள்… மெய் ஒளிகள் நீங்கள் பெற வேண்டும்
7.குருநாதர் காட்டிய வழியில் அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். என்று பிரார்த்திக்கின்றேன்.

எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும்... மக்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்... என்ற நிலையில் ஞானிகளும் மகரிஷிகளும் எதை ஆசைப்பட்டார்களோ அந்த நிலையை ஒவ்வொருவரும் நீங்கள் பெற வேண்டும்.

உதாரணமாக மாங்கனியாக இருக்கும் பொழுது அது சுவையாகவும் பிஞ்சாக இருக்கும் பொழுது துவர்ப்பாகவும் காயாக இருக்கும்போது புளிப்பாகவும் இருக்கிறது.

மனிதர்களாக இருக்கும் நாம் காயின் தன்மையில் இருக்கின்றோம். அந்த ஞானிகளோ கனியின் தன்மை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியாக முழுமை பெற்றவர்கள்.

அவர்கள் உணர்வை நாம் பெற்று நம் ஒவ்வொரு உணர்வையும் இனிமை கொண்டதாக மாற்றி அந்தக் கனியின் தன்மை அடைந்த அந்த ஞானிகள் சென்ற வழியில் நாம் அனைவரும் நிச்சயம் செல்ல முடியும். உங்களை நம்பிப் பாருங்கள்.

எப்படித்தான் இன்று இருந்தாலும் நாம் எண்ணியதற்குத் தகுந்த மாதிரி அடுத்த உடலாக மாற்றி விடுகிறது நம் உயிர். அதே போல்
1.நாம் அருள் உனர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.இந்த உடலை ஒளிச் சரீரமாக மாற்றுவதும் இதே உயிர் தான்.

ஆகவே...
1.ஒளியாக மாற்றி விண் சென்ற அந்த மெய் ஞானிகளின் அருளப் பெறுவோம்.
2.நமக்குள் அறியாது வந்த இருளைப் போக்குவோம்
3.நம் சொல்லும் செயலும் கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கச் செய்து பொருள் காணும் சக்தியைப் பெறச் செய்வோம்.
4.நம் பேச்சும் மூச்சும் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்யட்டும்
5.உலகம் முழுவதும் சகோதர உணர்வுகளை வளர்க்கச் செய்வோம்.

மனிதனுக்கு மனிதன் ஒருவருக்கொருவர் துன்பத்தை நீக்கும் நிலையாக உண்மையை உணரச் செய்யும் சக்தியாகப் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்... தவமிருப்போம்.

உலகில் சுழன்று கொண்டிருக்கும் அசுர உணர்வுகளிலிருந்து அனைவரும் மீண்டு மெய் ஒளிகள் மெய் உணர்வின் தன்மை இங்கே படர வேண்டும் என்ற நமது குருவின் ஆசைகள் உங்களுக்குள் பதிவாகி அது ஓங்கி வளரட்டும்.

1.குருவின் ஆற்றல் மிக்க அந்தச் சக்தி உங்களுக்குள் விளைந்து
2.நீங்கள் இடக்கூடிய மூச்சலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
3.உலகில் வரும் இருளைப் போக்கி மெய்ப் பொருள் காணும் சக்தியாக இந்தப் புத்தாண்டில் மலரட்டும்.