அன்றாட வாழ்க்கையில் எந்த நிமிடமாக இருந்தாலும் சரி… யாராவது நம்மிடம் சங்கடமாகப் பேசினாலும் சரி… யாம் (ஞானகுரு) சொல்லிக் கொடுத்த ஆத்ம சக்தியை நீங்கள் கடைப்பிடியுங்கள்.
1.ஈஸ்வரா...! என்று வானை நோக்கி எண்ணுங்கள்
2.அந்தச் சங்கடமான உணர்வுகளை அதை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள்.
“ஈஸ்வரா...’ என்று அதை மறைக்கச் சொல்வது என்ன...?
மனிதனுடைய உணர்வின் அலைகள் “இங்கே இழுக்கின்றது...” கடிகாரம் போன்று இருக்கின்றது. உடல் முழுவதற்கும் இருப்பதை இது முன்னாடி குவித்துக் கொடுக்கும்.
அப்பொழுது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி... அந்த நினைவை மகரிஷியின் அருள் சக்தி பெற... வானை நோக்கி அங்கே கூட்ட வேண்டும். இல்லை என்றால் இதுவும் கலந்துவிடும். (நல்ல உணர்வுடன் பிறரின் உணர்வும் கலந்துவிடும்)
ஆகையினால் எண்ணத்தை வானிலே செலுத்தி
1.அங்கிருந்து எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் நம் கையிலேயும் பாய்கின்றது.
2.ஈஸ்வரா... என்று ஏங்கி எடுக்கப்படும் போது தீமைகள் இங்கே அமுங்கிவிடுகிறது.
3.ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை “ஈஸ்வரா...” என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
காரம் மிளகாய் உப்பு கசப்பு இதையெல்லாம் தனித்தனியாக உட்கொண்டால் சுவையற்றதாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் சமமாக இணைத்துச் சுவையாக ஆக்கும் பொழுது நாம் ரசித்துச் சாப்பிடும் நிலை வருகின்றது.
அதைப் போல் தான் எத்தனை பேர்... எவ்வளவு சங்கடமாகப் பேசினாலும்… எதிர்த்துப் பேசினாலும் கூட
1.நிச்சயம் அவர்கள் நல்லது பெறுவார்கள்… நல்லது செய்வார்கள்…
2.என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும் என்று இந்த உணர்வை ஊட்டிக் கொண்டே வாருங்கள்.
என் கடையில் வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை…! என்று சொல்லாதீர்கள்.
என்னிடம் சரக்கு வாங்குவோர் அனைவரும் நலம் பெற வேண்டும்.. அவர்கள் வளம் பெறுவார்கள்... மகரிஷியின் அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்கும். என்னிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வாருங்கள்.
உங்கள் வியாபாரம் நன்றாக ஆகிக்கொண்டே இருக்கும்.
ஒரு தொழிலே புதிதாகச் செய்கிறோம் என்றால் அங்கே தொழில் செய்பவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும். அவர்கள் எதை உற்பத்தி செய்கின்றார்களோ அதைப் பயன்படுத்துபவர் எல்லோருக்கும் நல்லதாக வேண்டுமென்று இதைத் தியானம் செய்யுங்கள்.
இன்று ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு அழகாகக் கட்டுகின்றோம். நம் ஆறாவது அறிவின் தன்மை அழகான கட்டிடங்களைக் கட்டச் செய்கிறது.
ஆகவே அந்த ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கக்கூடிய பிற உணர்வுகளைத் தடைப்படுத்த அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வை உடலுக்குள் செலுத்துங்கள்.
1.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி
2.அந்த ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
நமது குருநாதர் காட்டிய மேல் நோக்கிய சுவாசம் இது தான். அதன் மூலம் நாம் விண்ணின் ஆற்றலைப் பெறலாம் அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.