ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2021

எம்முடைய உபதேசத்தை நீங்கள் கூர்ந்து கவனித்து எடுத்துக் கொள்ள வேண்டிய முறைகள்

 

ஞானிகள் காட்டிய நிலையில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்தவர் என்றோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப அதன் இயக்கமும் என்ற நிலைகள் தான் ஞானிகளால் காட்டப்பட்டது.

எங்களுக்கு ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கின்றார் என்று ஒரு மதத்தின் சாரார் சொல்கின்றார்கள். அதை அவர்கள் பதிவு செய்கின்றார்கள்.

இன்னொரு சாரார் எங்களுக்குக் கடவுள் இப்படிச் சொல்கிறார் என்று சொல்கின்றார்கள். அந்த உணர்வை எடுத்துக் கொண்டபின் இந்த உணர்வுக்கும் அந்த உணர்வுக்கும் ஒத்துக் கொள்ளாது.

கர்த்தர் வான்வீதியிலிருந்து கொண்டு வந்தார் என்று சொல்கின்றார்கள். ஞானிகள் சொன்ன உண்மையின் வழிப்படி கர்த்தர் என்றால் நமது உயிரே கர்த்தராக இருக்கின்றது. நாம் எண்ணிய வழிப்படி அது இயக்குகின்றது.

இன்னொரு சாரார் “ஆண்டவா...” என்று சொல்கின்றார்கள். நம்மை ஆள்வது யார்...?
1.எதனின் உணர்வை எடுத்தோமோ அது உடலாக மாறுகின்றது
2.அதை ஆள்வது யார்...? நம் உயிர் தான்.
3.உள் நின்று இயக்கும் சக்தி உடலை உருவாக்குவது கடவுள்.
4.உருவாக்குவதால் அவனுக்குப் பெயர் ஈஸ்வரா... என்று சொல்கின்றோம்.

உருவாக்கிய உணர்வுகள் கொண்டு நம்மை ஆளும் ஆண்டவனாக உயிர் இருக்கின்றான். அவன் தான்... நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை இறையாக்குகின்றான்.
1.இறையின் உணர்வு உடலாகின்றது
2.இந்த உணர்வின் இயக்கம் செயலாக மாறுகிறது... தெய்வம் ஆகின்றது...! என்று
3.அகஸ்தியன் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்... இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் உங்களுக்கு இடையில் இடையில் இணைத்துக் கொடுக்கின்றோம். அடுத்து உபதேசம் கொடுக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால்... தெளிவாக ஒன்று போல நீங்கள் உண்மைகளை உணர முடியும்.

உதாரணமாக காரின் உறுப்புகளைத் தனித்தனியாகச் செய்து எடுத்து வைத்திருந்தாலும் இது இன்னது தான் செய்யும்... இது இன்னதுதான் செய்யும்... என்று அது எல்லாவற்றையும் சேர்த்து இணைத்து வந்த பிற்பாடு அதனதன் வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறது. கார் முழுமையாகிறது.

அதே போன்று இங்கே நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்றால் மைக் இருக்கின்றது. அது ஒன்றோடு ஒன்று இணைத்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்கின்றது. அப்படிப்பட்ட இடத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் கரா...புரா... என்று சப்தம் போடும்.

அதைப் போன்றுதான் இயற்கையின் உண்மை நிலைகளை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம். அந்த இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்...?

1.தெய்வத்தை நாங்கள் இப்படி எல்லாம் கும்பிட்டு வந்தோம்.
2.ஆனால் இவர் இப்படிச் சொல்கிறாரே...! என்று எண்ணினால் கரா... புரா... ஆகிவிடும்.

விநாயகரை எப்படி எல்லாம் நாம் கும்பிட்டோம்...! களிமண்ணால் செய்து வைத்த விநாயகரைக் கரைத்தோமே. எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால் சாமி இப்படிச் சொல்கிறார்... என்று
1.இரண்டையும் கிராஸ் (இடைமறித்து) செய்து கொண்டிருந்தால்
2.நான் சொல்வதை நீங்கள் கிராஸ் செய்து கொண்டே இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்
3.கரா... புரா... என்று கடைசியில் எதுவுமே அர்த்தமே ஆகாது.

ஆகவே...
1.யாம் உபதேசிப்பதை முதலில் பதிவு (ரெக்கார்ட்) செய்து கொள்ள வேண்டும்
2.பதிவு செய்த பிற்பாடு அப்புறம் வாழ்க்கையில் எது எப்படி இருக்கின்றது...? என்று தெரிந்து கொள்ள முடியும்.

கரா..புரா... பண்ண விடாதபடி யாம் சொல்வதை அப்படியே கிரகித்துக் கொண்டு வாருங்கள். ரெக்கார்ட் ஆகிக் கொண்டே இருக்கும்
1.அதற்கு அப்புறம் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நிலைகள்
2.வாழ்க்கையில் ஒவ்வொன்றும் அது எப்படி வந்தது என்று எண்ணிப் பார்த்தீர்கள் என்றால்
3.இது நல்லது... இது கெட்டது... என்று அறிய முடியும்
4.உங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.

காரணம் இயற்கை எப்படி வளர்ந்தது...? நாம் எப்படி மனிதனாக வந்துள்ளோம்...? இனி அடுத்து எங்கே செல்ல வேண்டும்...? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்வது.