ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2021

குருநாதர் எனக்குக் கொடுத்த ஞானத்தின் விளக்கவுரைகள்

 

குருநாதர் காட்டிய வழியில் இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே உபதேசிப்பது.
1.ஒவ்வொரு முறை சொல்லும் போதும் ஒவ்வொரு விளக்கவுரையைக் கொடுத்து
2.உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம் (ஞானகுரு)

குருநாதர் முதலிலே இப்படித்தான் எனக்கும் சொல்வார். பின் ஒவ்வொன்றும் விளக்கவுரையாகக் கொடுத்து என்னைத் தெளிவாக்கிக் கொண்டு வருவார்.

எதையோ ஒன்றைச் சொல்வார். நான் அவர் சொன்ன இடத்திற்குப் போவேன். என்ன…? என்று எனக்கு அர்த்தம் தெரியாது. நான் அவர் சொன்னதைப் பார்த்துவிட்டு நான் திரும்ப வந்தவுடன்…
1.நீ பார்த்தது எல்லாம் என்ன…? என்ற நிலையில் கேள்விகளைக் கேட்பார்
2.அவர் கேட்டதற்குண்டான விடைகளைச் சொல்லத் தெரியவில்லை என்றால்
3.அதன் உணர்வுகளை நீ இவ்வாறு பார்…! இண்னென்னெ வழிகளிலே அது தெரியும்…! என்பார்.

இப்படித்தான் நான் கண்டுணர்ந்தது. குருநாதர் என்னைக் காட்டிற்குள் செல்லச் செய்ததும் இதற்குத் தான். ஆனால் நீங்கள் இங்கே அமர்ந்துள்ள நிலையிலே இதைக் கேட்டுக் கொண்டுள்ளீர்கள்.

அருள் ஞான வித்தாக குருநாதர் எமக்குள் விளைவித்ததை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் போது இந்த உணர்வினைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் அதை நீங்கள் கவர முடியும்.

1.விண்ணுலக ஆற்றலை அறிய முடியும்.
2.அந்த அருள் ஞானிகள் பெற்றதை நீங்களும் பார்க்க முடியும்.

ஒரு வெளிச்சத்தைப் போட்டால் அங்கே இருக்கும் பொருள்கள் நீங்குகிறது. இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் கவரப்படும் போது உங்களை அறியாது வந்த இருளை மாய்க்க முடிகிறது…. “உங்களை நீங்கள் அறியும் ஆற்றல்கள் பெருகுகின்றது…” அதனின் உணர்வின் வலிமை கொண்டு இந்தக் காற்று மண்டலத்திற்குள் மறைந்துள்ள தீமைகளை அகற்றவும் முடியும்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சிகரமாக மாற்றிய அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து கவரும்படிச் செய்வதற்கு அந்த அருள் ஞான வித்தாக இந்த உபதேச வாயிலாகப் பதியச் செய்கிறேன்.

குருநாதர் எனக்குள் எவ்வாறு அந்த ஞான வித்தைப் பதிவு செய்தாரோ… அந்த அருள் ஞானிகளின் வித்தை விளைவித்தாரோ… அதை நினைவு கொண்டு வளர்க்கப்படும் போது அதை நான் காண முடிந்தது.

1.முதலில் வெறும் வித்தாக இருக்கும் போது புரியவில்லை
2.பின்னால் அவர் உபதேசித்த உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உருவாக்கப்பட்டு அதை நானும் காண முடிகின்றது.
3.கண்ட உணர்வுகளை எனக்குள்ளும் விளைவிக்க முடிகிறது.
4.அதைச் சொல்லாகச் சொல்லும் போது அந்தச் சொல்லின் தன்மை வினையாகிறது.
5.அதை நீங்கள் நுகர்ந்து வரப்படும் போது வினையாக உங்களுக்குள் பதிவாகிறது.
6.மீண்டும் அதை நீங்கள் நினைக்கப்படும் போது வினைக்கு நாயகனாகவும்
7.உங்களுக்குள் இருக்கும் இருளைப் போக்கிடும் நிலையாகவும் ஆற்றலும் பெருகுகிறது.

உதாரணமாக வைத்தீய ரீதியில் ஒரு மருந்தினைச் செய்தால் இந்த நோயைப் போக்கும் என்று எப்படிச் செய்கிறோமோ இதைப் போல் மெய்ப் பொருளை உணர்ந்த அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை எம்மைக் கவரச் செய்தார் குருநாதர்.

அவருக்குள் அருள் ஞான வித்தாக விளைவித்தார். அதே வித்தினை எனக்குள் பதியச் செய்தார். அந்த மெய்ப் பொருளைக் குருநாதர் வழிகளில் காண முடிகிறது.

அதே போன்று குருநாதர் கொடுத்த அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள் பதியச் செய்யப்படும் போது உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்… என்றுமே ஒளியாக வாழ முடியும்.