ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 8, 2021

நாம் யாரும் பிரிந்து இல்லை

 

நாம் ஒருவருக்கொருவர் எத்தனையோ பேரிடம் பேசினாலும் அவர்களின் உணர்வுகள் நமக்குள் உண்டு. நம்முடைய உணர்வுகள் அவருக்குள் உண்டு. யாரும் பிரிந்து இல்லை.

யாரிடமும் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நாம் தப்பிக்க முடியுமா என்றால் முடியாது.
1.ஒருவர் உங்களைச் சாபமிடுகிறார்...
2.அதைப் பதிவாக்கிக் கொண்டு விட்டீர்கள் அவரிடமிருந்து நீங்கள் விலக முடியாது.

அதே போல் நீங்கள் சாபமிட்டால் அவர்களும் விலக முடியாது. இந்த உணர்வுகள் பதிவாகியிருக்கின்றது
1.உங்களை இணைத்துக் கொண்டே இருக்கும்
2.பாவிப்பயல் இப்படிச் செய்தான்... செய்தான்... செய்தான்... செய்தான்... என்று இணைத்துக் கொண்டே இருக்கும்.

நண்பனாக இருக்கும் பொழுது “எனக்கு உதவி செய்தான்” என்று எண்ணுகின்றோம் அது பதிவாகியிருக்கின்றது. அப்பொழுது இணைந்து தான் இருக்கின்றோம். அந்த நன்மையின் தன்மை வரும் பொழுது இருவருக்குமே அது நல்லதாக விளைகின்றது.

சந்தர்ப்பத்தால் பகைமையாகி... இருவருமே தீமையான உணர்வுகளைப் பதிவு செய்து விட்டால் இரண்டு பேருமே அதிலிருந்து பிரிந்து இல்லை.

இதில் எந்த அடிப்படையில் அதிகமாக அந்த நண்பரின் உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறீர்களோ அந்த உணர்வின் தன்மை வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இதை எல்லாம் மாற்றிட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிக் கொண்ட பின்
1.நாம் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
5.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று அவர்கள் குடும்பங்கள் வாழ வேண்டும்
6.நாளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
7.சாவித்திரி போன்ற இரு உயிரும் ஒன்றி இணைந்த நிலைகள் வளர வேண்டும்
8.அவர்கள் குழந்தைகள் உலக ஞானம் பெற வேண்டும்
9.அவர்கள் தொழில்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் நம் தொழிலும் சீராகிறது. அருள் ஞானிகள் உணர்வுகள் இங்கே விளைகின்றது... வளர்கின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் வலுவாக எண்ணும்போது
1.நமக்குள் பதிவான மற்றவரின் தீமையான உணர்வுகளை
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி மறைக்கின்றது.

ஆகவே... நமக்குள் பதிவான பிறருடைய நிலைகளைத் துருவ தியானத்தின் மூலம் குறைத்தல் வேண்டும்... அதைத் தூய்மைப்படுத்துதல் வேண்டும்... பகைமைகளை நிறுத்துதல் வேண்டும்.

தீமை என்ற நிலைகளை எண்ணாது அந்த மகரிஷிகள் சக்தி நாம் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று அந்த உயர்ந்த நிலைகளை எண்ண வேண்டும். நமக்குள் அது உயர்ந்த நிலைகளாக வளர்கின்றது.

ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி நமக்குள் வரும் தீவினைகளை நிறுத்துதல் வேண்டும்.

இப்படி எல்லோருமே ஏகோபித்த நிலைகள் செயல்பட்டு இந்தப் பூமியில் கலந்துள்ள தீமையின் உணர்வுகளை வளராது நிறுத்துதல் வேண்டும்.

நாம் அனைவரும் இதன் வழி கொண்டு சொல்லப்படும் பொழுது பகைமை உணர்வை உருவாக்கும் அணுக்கள் உருவாவதில்லை. அத்தகைய உணர்வைச் சுவாசிக்கும் தன்மைகளும் அடைபடுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து அதிகாலையில் ஒளியான அலைகள் வருகிறது. அந்த ஆற்றலை நமக்குள் பெருக்குகின்றோம். எல்லோரும் ஏகோபித்த நிலைகள் அதைப் பரவச் செய்யும் போது
1.பகைமையை உருவாக்கும் உணர்வுகளுக்கு... அந்த அணுக்களுக்கு ஆகாரம் இல்லாது துரத்தி விடுகின்றோம்.
2.அஞ்சி ஓடும் நிலை வருகின்றது... சூரியனின் காந்த சக்தி கவர்ந்து சென்று விடுகிறது.

மனித உடலில் எடுத்துக் கொண்ட அத்தகைய பகைமை உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்லாது. ஆனால் அந்த உணர்வின் தன்மை அதிலிருந்து தோன்றியது தான்.

பூமியின் சுழற்சியின் நிலைகள் கொண்டு கடல் அலைகள் அதை இழுத்துக் கொள்கிறது. பகைமை உணர்வுகளைத் தனக்குள் அணைத்துக் கொள்வதும் (அமிழ்த்தி) தனக்குள் மோதும் வெப்பத்தால் அதை அடக்கி இந்த உணர்வின் தன்மை ஆவியாக மாற்றிவிடும்.

காற்று மண்டலமான இந்தப் பரமாத்மா தூய்மை அடைகின்றது... நம் ஆன்மாவும் தூய்மை அடைகிறது.