ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 13, 2021

நம் எண்ணத்தின் கூர்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்...?

 

ரோட்டிலே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அப்போது நெடு நாள் பார்க்காத ஒரு நண்பரைப் பார்க்கின்றோம். அந்த ஆர்வத்தில் செல்கின்றோம்.

இரண்டு பேரும் சந்திக்கக்கூடிய நேரத்திலே அந்த இடம் அசுத்தமாக இருக்கின்றது.. அசூசையாக இருக்கின்றது. ஆனால் நண்பன் என்ற ஆர்வத்தில் எண்ணும் பொழுது அதை நுகர்வது இல்லை.

1.பேச்செல்லாம் முடிந்த பின்பு திரும்பிப் பார்க்கும் போதுதான்
2.ஐய்யய்யோ... இங்கே நின்று கொண்டல்லவா இவ்வளவு நேரம் பேசியிருக்கிறோம் என்று தெரிகிறது... நாற்றமும் அப்போது தான் தெரிகிறது.

அப்பொழுது எது இயக்குகின்றது...? அந்தக் கூர்மையான எண்ணங்கள் தான் அப்படி வருகின்றது.

ஒரு சிலர் என்ன செய்வார்கள்...?

எப்பொழுது பார்த்தாலும் குறைகளையே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் பார்த்தால் ஐயோ... இங்கே ஏதோ நாற்றம் அடிக்கிறது என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் நாற்றத்தை எண்ணாதவர்கள் அங்கே வந்த பின் அவர்களுக்கு அது தெரியாது. ஆனால் இவர்கள் சொன்ன பின் அப்படியா... இப்போது தான் தெரிகிறது...! என்றும் சொல்வார்கள்.

அதே உணர்வை நுகர்ந்த பின் அவர் செய்த நிலையை ஆமாம் என்று சொல்வார்கள்.

இது எல்லாம் எது இயக்குகின்றது...? கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய்...! என்பது போன்று அதனின் உணர்வு கொண்டே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே நாம் எதை எண்ண வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா... என்று சதா எண்ண வேண்டும். அது தான் தியானம்...!

எப்பொழுது கெட்டதைச் சந்திக்கின்றோமோ அந்தக் கெட்டது நமக்குள் வராதபடி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பையனுக்கு உடம்புச் சரியில்லை என்றால் உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் பையன் உடலில் படர வேண்டும். அவன் உடல் நலமாக வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சி பையனுடைய உணர்வு (உடல் நலக்குறைவான) நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும்.

அவனிடமும் இதைச் சொல்லி... “அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடு... உனக்கு நல்லதாகும்...!” என்று நினைவுபடுத்த வேண்டும். நாம் சொல்லிப் பதிவு செய்ததை அவனும் எண்ணி எடுக்கும்பொழுது அவனைப் பாதுகாத்துக் கொள்கின்றான்.

செடி கொடிகள் எப்படித் தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. அதே போல் மாடு ஆடு எல்லாம் முகர்ந்து பார்க்கிறது. தனக்கு உகந்ததாக இல்லை என்றால் விலகிச் சென்று விடுகின்றது.

ஆனால் மனிதனாக இருக்கும் நாம் கருணைக் கிழங்காக இருந்தாலும் அதை வேக வைத்து விஷத்தை நீக்கி விட்டுப் பலசரக்குகளை அதற்குள் போட்டு நமக்கு உகந்ததாகச் சுவையாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.

அதைப் போன்று தான்
1.தீமை என்ற உணர்வு வந்தாலும் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து
2.இருளை நீக்கி ஒளியான அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.

விஞ்ஞானி ஆடு மாடு மற்ற உயிரினங்களின் செல்களை எடுத்துப் புதிது புதிதாக மாற்றுகின்றான். செடி கொடிகளில் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து வீரிய விதைகளை உருவாக்குகின்றான்.

அது போல் நாமும்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்த்துத் தீய வினைகளை மாற்றி கொள்ள முடியும்.
2.தீமைகளில் இருந்து நாம் விடுபட முடியும் அருள் ஒளியை நமக்குள் பெருக்கவும் முடியும்.