நம் குருநாதர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தன்மையைத் தன்னுள் கண்டுணர்ந்தார்.
1.இந்த மண்ணுலகை வென்று எப்படி விண்ணுலகிற்குச் செல்ல வேண்டும்…? என்று முழுமை பெற்றார்.
2.தான் முழுமை பெறுவதற்குண்டான பாதையைக் கற்றார்.
3.முழுமை பெறுவதற்குத் தனக்குத் துணை வேண்டுமென்று எண்ணினார்.
விண்ணுலகம் செல்ல வேண்டும் என்றால் உயிராத்மாவை விண்ணிற்கு உந்தி தள்ளத் தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.
1.விழுதுகள் இல்லாது எந்த மரமும் வளர்ந்திடாது.
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.
தான் பெற்ற சக்திகளை “ஒவ்வொரு உயிரும் பெற வேண்டும்” என்ற நிலையினை அவர் தான் இங்கே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் இந்த உணர்வலைகள் கொண்டு எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் நமது குரு காட்டிய வழியில் தியானத்து அதைச் செயல்படுத்துவோம்.
1.உங்களுக்கு நான் விழுது… எனக்கு நீங்கள் விழுது…! என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.
2.ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வளர முடியும். ஒன்றில்லாது ஒன்று விளையாது
அனைத்தையும் வெறுத்தேன்… நான் தனித்துச் சக்தி பெறுவேன் என்றால் அது சாத்தியம் இல்லை
அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் தனக்குள் அனைத்தையும் இணைத்துத் தான் ஒளியாக்கினான். தனக்குள் அரவணைத்தான்… எதற்கும் தீங்கு செய்யாது அடக்கினான்.
ஆகவே தான் எதனையும் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான். அவன் பெற்ற அந்த உணர்வுகளைத் தியானத்தின் மூலம் நமக்குள் கவரப்படும்போது நிச்சயம் நாமும் அதைப் பெறலாம்.
துணுக்குத் துணுக்காகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். இதை இப்போது உங்களுக்குள் பதிவு செய்கிறேன். சந்தர்ப்பத்தில் நினைவாக்கித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.
குருநாதர் எனக்கு எப்படி கற்றுக் கொடுத்தாரோ… பெறும்படி செய்தாரோ… அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்களும் பெற வேண்டும்… உங்களால் அதைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையில் சொல்கின்றேன்.
ஆகவே… உங்களுடைய நினைவுகள் கூர்மையாக இருத்தல் வேண்டும்.யாம் உபதேசிப்பதை ஆழமாகப் பதிவு செய்தல் வேண்டும். பதிந்ததை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அந்த நினைவின் ஆற்றல்… அதுவே உங்களை வளர்க்கும். அதாவது
1.முதலில் அதனை நீங்கள் எடுத்து வளர்க்க வேண்டும்
2.பின் அது உங்களை வளர்க்கும்
3.இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
4.உங்களை அருள் வழியிலே என்றுமே அழைத்துச் செல்லும்.