ஆதியிலே உருவான விஷம்…
1.மற்ற விஷமற்றதைத் தாக்கும் போது அது நகர்ந்து ஓடுகிறது.
2.தாக்கும் போது வெப்பமும்… நகர்ந்து ஓடும் போது ஈர்க்கும் காந்தமும் உருவாகிறது.
அந்த உணர்வின் சக்தியால் அது எதைத் தனக்குள் இணைத்ததோ அதை உருவாக்கச் செய்கின்றது. இதற்கெல்லாம் மூலம் ஆதியிலே உருவான விஷம் தான்.
அந்த விஷத்தின் அளவுகோல் எதுவோ அதனின் இயக்கமாக இயக்கும். அதற்குக் காரணப் பெயர் ஆதிசக்தி. ஆகவே ஆதிசக்தி என்பது கடுமையான விஷம்.
ஆரம்பத்திலே ஈர்க்கும் சக்தியாக வந்தது ஆதிலட்சுமி. ஆதியிலே உருவான அந்த வெப்பம் ஆதிபராசக்தி. சர்வத்தையும் உருவாக்கும் வெப்பமாகின்றது.
1.ஒன்று இயக்கும் சக்தி
2.ஒன்று உருவாக்கும் சக்தி
3,ஒன்று கவரும் சக்தி
விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவாகிறது. அதைப் போன்று தான் நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எதிர்நிலையான உணர்வுகள் மோதலானால் உடலிலே வெப்பமாகிறது.
அடுத்தவர் செய்யும் தவறான உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கி அதை எடுத்துக் கொண்டால் நமக்குள் கோப உணர்வின் தன்மை அதிகமாகிறது. அவர்கள் செயல்படுத்தும் வேதனை என்ற நஞ்சான உணர்வுகள் நம் மீது மோதுகிறது.
அப்படி மோதும்போது நமக்குள் அந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி அணுவின் தன்மை நம் உடலிலே பெருக்கம் ஆகின்றது… இரத்தக் கொதிப்பு என்று சொல்வார்கள்.
1.நம் உணர்வை இயக்கும் அந்தக் கொதிகலனான சுடு நீர் உடலுக்குள் சென்று
2.கவன நரம்புகளில் தாக்கப்பட்ட பின் அது தாங்காது வெப்பம் அதிகமாகின்றது.
உதாரணமாக ஒரு குக்கரில் கேஸ் அதிகமாக உருவானால் அந்தப் பாத்திரம் எப்படி வெடிக்கின்றதோ அதைப் போன்றுதான் இந்தக் கொதிகலனாகும் விஷத்தின் அழுத்தத்தின் தன்மைகள் நாம் கவன நரம்புகளிலே ஊடுருவுகிறது.
எந்த உணர்வாக இருந்தாலும் சிறு மூளை வழியாகச் சென்றுதான் நம் உடல் உறுப்புகளை இயக்கும். நரம்புகளுக்குள் அமிலமாக (ACID) மாற்றும் தன்மைகளும் வரும்.
1.எந்தப் பாகத்தின் தன்மையிலே இந்தக் கோபமும் விஷமும் கலந்து அதிகமாகச் செல்கிறதோ…
2.அந்த அழுத்த நிலைகள் அங்கே ஏற்படும் பொழுது அந்த இடம் விரிந்துவிடும்.
3.விரியும் தன்மை வரப்படும் போது மனிதனுக்கு மயக்க நிலை (தலை சுற்றல்) வருகின்றது.
ஆனாலும் மயக்கம் வருவதற்கு முன் சிறிதளவு நினைவு இருக்கும் போது எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற எண்ணம் வந்தால் வெடித்துவிடும்.
அதே போன்று
1.“மயக்க நிலைகள் வருகிறதே…!” என்ற எண்ணத்தை மீண்டும் அதிகரித்து விட்டாலும்
2.இந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி சிறு நாளங்கள் வெடித்து இரத்தங்கள் கசிவாகிவிடும்…
3.அடுத்த கணம் மரணம் தான்.
ஏனென்றால் இதை போன்ற உணர்வின் இயக்கங்கள் நம் உடலுக்குள் மோதலாகும் போது போராட்டங்கள் அதிகமாகிக் கொதிகலனாக எப்படி வருகிறது…? என்று ஞானிகள் அன்றே அதைச் சொல்லியுள்ளார்கள்.
சாதாரண மனிதனும் இதை அறிவதற்காக வேண்டி தெய்வச் சிலைகளை உருவம் அமைத்து 1008 குணங்களையும் தனித் தனியாகக் காட்டியுள்ளார்கள்.
பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் வளர் பிறையாகி மனிதனாக வளர்வதற்கு மூலம் எது…? என்றும்… மனிதனாக ஆன பின் அவன் எடுத்துக் கொண்ட குணநலன்களின் இயக்கத்தையும்… அதனின் பின் விளைவுகளையும் உணர்த்துவதற்குத் தெய்வச்சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி வாகனத்தையும் கொடுத்துள்ளார்கள்.
எதனின்று நல்ல உணர்வுகளைச் சுவாசித்து… அதுவே வாகனமாக அமைந்து வளர்பிறையாக மனிதனாக எப்படி வந்தோம் என்றும்… மனிதனான பின்
1.கோபம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களச் சுவாசிக்கும் பொழுது தேய் பிறையாகி
2.மனிதனல்லாத உடல்களுக்கு எப்படிச் செல்கிறோம்…? என்றும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நாம் மீண்டும் இன்னொரு பிறவிக்கு வர மாட்டோம்… அழியாத ஒளி உடல் பெறலாம்.
சற்று சிந்தித்துப் பாருங்கள்…!