பத்திரிக்கைகளைப் படிக்கும் போது “எங்கெங்கோ அசம்பாவிதங்கள் நடக்கிறது...” என்று பார்க்கின்றோம்.
பட்டப்பகலில் கொள்ளை அடித்தனர். ஆட்கள் நடமாட்டம் இருந்த இடத்திலேயே நடந்தது. கைகளில் ஆயுதங்களை ஏந்தி அதைச் செயல்ப்படுத்தும் போது மற்றவர்கள் சிதறி ஓடினர். இருக்கும் பணத்தை எல்லாம் பறித்துச் சென்றார்கள்.
அவ்வளவு கூட்டத்திலே இது நடந்தது. போலீஸ் இருந்தும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பத்திரிக்கை வாயிலாகப் படிக்கும் பொழுது பய உணர்வுகள் ஊடுருவி நமக்குள் அதிகமாகப் பதிவாகி விடுகிறது.
உதாரணமாக... அந்த நேரம் நாம் பஸ்ஸிலே பிராயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் செல்லும் பொழுது ஒரு பத்துப் பேர் இது சம்பந்தமாகப் படித்து அந்தப் பய உணர்வுடன் பஸ்ஸிலே பயணம் செய்தால் போதும்.
1.டிரைவர் அங்கே ஓட்டிக் கொண்டிருந்தாலும் இந்தப் பய உணர்வலைகள் அவருக்குள்ளும் பாயப்பட்டு
2.அவரையும் சிந்தனையற்றதாக்கி விபத்தாக வைத்துவிடும்.
காரணம் நாம் படித்த இந்த உணர்வுகள் அடுத்தவர்களுக்குச் சொல்லாகச் சொல்லப்படும்போது சொல்லின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து படரச் செய்கிறது. அது டிரைவரையும் இயக்கிவிடுகிறது.
ஆக... நாம் வண்டிக்குள் அமர்ந்து சாதாரணமாகச் சென்று கொண்டிருந்தாலும் அங்கே நமக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையாக உருவாக்கி விடுகின்றது.
இவ்வாறு தான் மனித வாழ்க்கையில் பத்திரிக்கையைப் பார்த்த உணர்வுகள்...
1.எங்கோ நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிப்போமேயானால்
2.அந்த உணர்வின் தன்மை எங்கே படர்ந்திருந்தாலும் அது நம் ஈப்பிற்குள் வந்து
3.நமக்குள் பய உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்றது.
அதே போல் வீட்டிற்குள் படுத்திருக்கும் பொழுது கொள்ளையன் கதவை உடைத்து நொறுக்கி விட்டுப் பணத்தை எடுத்துச் சென்றான் என்று பத்திரிக்கை வாயிலாகப் படித்து அதைப் பதிவாக்கினால் போதும்.
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி நம் ஆறாவது அறிவில் உள்ள வலுவை இழக்கச் செய்து
2.நாம் தூங்கும் போது காற்றுக்கு ஒரு கதவு டப்... டப்... என்று அடித்தாலோ
3.அல்லது பகலிலேயே டம்... என்று ஒரு கதவின் சப்தம் கேட்டாலோ
4.”உடனே எவனோ கதவை உடைக்கின்றான்...” என்று திடுக்கிடச் செய்து நாம் திரும்பிப் பார்க்கும் நிலை வருகின்றது
அப்படித் திரும்பிப் பார்க்கும் நிலை வரும் போது நம்மை அறியாமலேயே காற்றிலே மறைந்துள்ள இந்த பயமான உணர்வை நுகர நேர்கிறது.
பத்திரிக்கை வாயிலாக அதைப் படிக்கப்படும் போது...
1.எங்கே அசம்பாவிதமாக வெளியிடப்பட்டதோ
2.அந்தச் சம்பவம் நடந்ததை யார் அதைக் கண்ணுற்று வெளிப்ப்படுத்துகின்றனரோ
3.அதே உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.
ரேடியோ டிவி.யில் ஒலி/ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் அந்தந்த ஸ்டசனைத் திருப்பி வைக்கும் போது அதனதன் நிலைகளை நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி ஈர்க்கிறது... நாம் பார்க்கின்றோம்... கேட்கின்றோம்.
இயற்கையிலே ஒரு வேப்பமரம் தன் கசப்பான சத்தினை மணமாக வெளிப்படுத்துகிறது. அதே சமயத்தில் அதிலே விளைந்த வித்தினை எடுத்துப் பல நூறு மைல்களுக்கு அந்தப் பக்கம் நாம் பதியச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
இங்கே பதிவான வித்து பூமியின் ஈர்ப்புக்குள் நின்று அது சரியான பருவத்தில் முளைக்கத் தொடங்கினால்
1.தாய் வேப்ப மரம் வெளிப்படுத்தும் அந்தக் கசப்பான சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்
2.நூறு மைலுக்கு அப்பால் இருந்து அதை இழுத்துக் கவர்ந்து அதே இனமாகத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.
இதைப் போன்றுதான் நாம் பத்திரிக்கையைப் படிக்கிறோம் என்று இருந்தாலும் அதிலே சம்பந்தப்பட்ட மனிதனின் எண்ண அலைகள் நம் உணர்வுடன் கலந்து உடலுடன் இணைக்கப்பட்டு நம் உடலிலே ஊழ்வினையாகப் பதிவாகி ஒரு வித்தின் தன்மை அடைந்து விடுகின்றது.
வித்தின் தன்மை அடைந்த பின் அது தன் இனத்தைப் பெருக்கி நம்மை அறியாமல் அதே தீமையின் விளைவுகளையே இயக்கிவிடுகிறது. விபத்தினால் வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.
மனிதனின் வாழ்க்கையில் அடிக்கடி வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதனின் செயலாக்கமாக அந்த உணர்வுகள் நம்மை வேதனைப்படும் செயலுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.
நமது உயிருடைய வேலை என்ன?
1.நாம் கவர்ந்த உணர்வினை நமக்குள் ஆழப்பதியச் செய்வதும்
2.பதிந்த உணர்வுகள் கவரும் நிலைகள் ஆன்மாவாக மாற்றுவதும்
3.ஆன்மாவிலிருந்து நுகர்ந்தறிந்து இயக்கிக் காட்டுவதும் தான் உயிரின் வேலை.
இயக்கிக் காட்டிய உணர்வின் அலைகள் கண்ணின் புலனறிவிலே படப்படும் பொழுது
1.நேர்முகமாக இருப்பதை அறிந்து விடுகின்றோம்.
2.மறைமுகமாக சூட்சமத்தில் இருப்பதை அறியமுடிவதில்லை.
சூட்சமமாக இருப்பதை நாம் எப்படி அறிய முடிகின்றது..?
அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து அதன் வழியில் இந்த உடலை அழைத்துச் செல்வதும் அங்கு நடக்கும் நிகழ்ச்சி “உடலிலே அனுபவித்தபின் தான்… அதை அறிய முடியும்”.
ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்திருந்தால்
1.எதிர் கொண்டு அலைகள் வந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக
2.நம்மைக் காத்திடும் “ரிமோட் கன்ட்ரோல்…” போன்று செயல்படும்.
ஆகவே நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தியானிக்க வேண்டும், தவமிருக்க வேண்டும்.
1.இந்த உணர்வுகள் வலுப் பெறும் பொழுது
2.விபத்துக்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து “நம்மைக் காத்திடும் சந்தர்ப்பங்கள்” உண்டு.