இயற்கையில் வளரும் தாவர இன வளர்ச்சியில் அதன் பலனின் தரவல்ல வித்துக்களும் மற்றைய கனிகளும் அதன் சுவை மணம் அழகு எல்லாமே அதற்கு உண்டு.
அது அல்லாமல் நாம் பயிர் செய்யும் தானியங்களில் அவை பலன் தரவல்ல காலங்களில் உதாரணமாக நெல் மணியில் அதன் சத்து நிலை தரவல்ல காலங்களில் பூத்து பின் நெல் மணிகள் அழகு பெற்று வளர்ந்து குலுங்குகின்றது.
அந்தந்தக் காலங்களில் இவைகளின் மணத்தைக் கொண்டு உணவைத் தேடி வரும் பட்சிகளின் ரோமத்தின் மிருதுத் தன்மையும் அவற்றின் வண்ண அழகுகளும் எத்தனையோ உள்ளது.
1.அது அது எடுத்து வளரத்தக்க அமில வார்ப்பின் வளர்ப்பின் வளர் நிலையில்
2.அதன் பலன் தரும் வளர்ச்சி அழகை இயற்கை என்ற நியதியுடன் கண்ணுற்றுப் பார்க்கும்
3.செயற்கையுடன் ஒன்றி வாழும் நாம் அது வளரும் உண்மையை அறியாமல்
4.ஆனந்த ரசிப்பில் இயற்கையாக எண்ணித்தான் அதனைக் காண்கின்றோம்.
ஆனால் ஒவ்வொரு வளர்ப்பிலுமே “அதன் பலன் ஒன்று…” வளரும் தன்மையில்தான் சகல சக்திகளும் வளர்கின்றன.
கடல் வழியில் பல கோடி வளர்ப்புகள் கடல் நீரில் சத்தெடுக்கின்றன. நீரின் நிலைகளில் ஆற்றுப்படுகைகளில் நீர் நிலை உருளும் தனமையிலேயே பல வளர்ச்சி நிலைகள் நிறைந்துள்ளன.
1.எல்லாவற்றிலும் மோதுண்டு மோதுண்டு பல வளர்ச்சியில் முலாம் கொண்ட உயிரணு
2.மோதுண்ட வளர்ச்சி நிலைக்கொப்ப ஆத்ம நிலை கொண்டு
3.சக்தி நிலை பெறவல்ல எண்ணச் செயல் பூண்டு
4.ஜீவ ஆத்மாவாகக் கரு தோன்றி கரு வளரும் அமில முலாமாக
5.எண்ணத்தின் ஞானத்தால் ஞானப்பாலின் சத்தெடுத்து
6.ஆத்ம முலாம் மனித வித்தின் ஜீவிதத்தில் வளர்ச்சியுறும் காலத் தன்மையில்
7.ஆத்மாவின் ஒளி நிலை பெறும் வளர் நிலை தான் மனித வித்தின் ஜீவ வளர்ச்சியின் அடுத்த நிலை.
மாமரம் மாங்கனிகளைத் தன்னுடைய சத்தாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் மனிதன் தன்னுடைய பிறப்பின் வளர்ச்சி என்பது… “தான் பெறும் மக்கள் செல்வம்தான்…” என்ற எண்ணத்திலேயே உள்ளான்.
ஆக…
1.தன் பெயர் சொல்லும் வாரிசு நிலையைத்தான் உயர்வு கண்டு வாழ்கின்றனரேயன்றி
2.தான் பெறவேண்டிய முதிர்வு நிலையைப் பற்றி எண்ணவில்லை.
அன்றைய போகமகரிஷிக்கும் கொங்கண தேவருக்கும் கோலமாமகரிஷிக்கும் கிடைத்த வாரிசு நிலை அவர்களின் நிலையுணர்ந்த ஞானவான்களுக்குத் தெரியும்.
1.பிறவியுடன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் செல்வம் மட்டும் தான் செல்வம். என்று எண்ணாமல்
2.”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை….!
இன்றைய கால நிலையில் இத்தகைய ஆத்ம ஞானத்தால் பெறும் தியான வழி முறையையோ தன்னுள் உள்ள தெய்வச் செயலையோ அறிய விரும்புவோர் அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்.