ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 8, 2021

குருநாதர் சொல்கிறார்... என்னால் முடியவில்லையே...! என்ற நிலைக்கு நீங்கள் வரக்கூடாது

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் வினையாக (அணுக்களாக) உடலிலே எப்படிச் சேர்கின்றது...? வினைக்கு நாயகனாக நம் செயலை எல்லாம் எப்படி மாற்றுகின்றது...? என்று இந்த உணர்வின் எண்ணங்களை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விளக்க உரைகளைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் இதை எல்லாம் கேட்டுவிட்டு
1.சாமி (ஞானகுரு) பிரமாதமாகச் சொல்லி விட்டார் என்ற எண்ணத்தில் வெறுமனே சென்று விடாதீர்கள்
2.ஒவ்வொன்றிலும் நீங்கள் அந்தத் தெளிவுக்கு வர வேண்டும்.

உபதேசத்தை எல்லாம் கேட்ட பின் “சாமி சொன்னார்...” நாம் இந்தத் தவறை எல்லாம் செய்யக் கூடாது என்று நினைப்பீர்கள். பிற்பாடு என்ன சொல்வீர்கள்...?

கடலில் பெருங்காயத்தைக் கொண்டு போய்க் கரைத்தால் சிறிது நேரம் கம...கம... என்று வாசனையாக இருக்கும். கடலுக்குள் பெருங்காயம் மறைந்தபின்... “ஐய்யய்யோ... வாசனையையே காணோம்...” என்று தான் சொல்ல முடியும்.

அதைப் போல இங்கே இந்த உபதேசத்தின் வாயிலாக
1.அந்த அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
2.அந்த ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் இயங்கக் கூடிய அனைத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.
3.உங்கள் நிலைகளையும் அது என்ன...? என்று உணர்கிறீர்கள்.

ஆனாலும் சிறிது நேரம் சென்றபின் கடலுக்குள் இருக்கும் உப்பின் தன்மை பெருங்காயத்தின் நறுமணத்தை மறைத்து விடுவது போன்று ஆகிவிடுகிறது.

ஏன்...?

உங்கள் வாழ்க்கையில் இதற்கு முந்தி எடுத்துக் கொண்ட விருப்பு வெறுப்பு வேதனை ஆத்திரம் என்ற அந்தக் கைப்பின் (உப்பு) தன்மைகள் அதிகமாகி உண்மையின் நிலைகளைப் புரிந்து கொள்ளாத வண்ணம் அதைத் தடைப்படுத்தும் உணர்வுகளாக வந்துவிடுகிறது.

1.பின்... “சாமி சொல்கிறார்... என்னால் முடியவில்லையே.......!” என்ற இந்த நிலைதான் வரும்.
2.அதை எப்படியும் முடிய வைக்க வேண்டும் என்று நான் உபதேச வாயிலாக வலுப்படுத்துகிறேன்.

ஆனாலும் அதை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக என்ன சொல்வீர்கள்...?

1.சாமி...! எத்தனையோ நல்லதை எல்லாம் நீங்கள் சொன்னீர்கள்... கேட்டேன்.
2.நான் திருந்தி விடலாம் என்று நினைத்தேன்...
3.ஆனால் “என்னை விட மாட்டேன் என்கிறதே...!” என்று பெரும்பகுதியானோர் சொல்கின்றார்கள்.
4.செய்ய முடியவில்லையே... செய்ய முடியவில்லையே...! என்று தான் சொல்கிறார்கள்.

செய்ய முடியவில்லை என்று சொல்வதன் காரணம் என்ன...?

கடலில் கலக்கிய பெருங்காயம் போன்றுதான் நீங்கள் எண்ணும் உணர்வுகள் அமைந்து விடுகிறது.

அதாவது நமக்கு ஏதாவது வந்தால் உடனே கோவிலுக்குச் சென்று சாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும். அதிலே மீறி விட்டால் ஜோசியரிடம் சென்று கேட்க வேண்டும். அவர்கள் விவரத்தைச் சொல்வார்கள். தப்பித்துக் கொண்டு வந்துவிடலாம்.

முருகனுக்கோ அல்லது மற்ற தெய்வங்களின் ஆலயத்திற்கோ சென்று சாந்தி செய்து விடு...! என்றும் அங்கே போ... இங்கே போ...! எல்லாம் சரியாகிவிடும்...! என்று சொல்வார்கள்.

உங்களுக்குப் பகைமைகள் நிறைய இருக்கின்றது. அது தீரவேண்டும் என்றால் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று இரண்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டு வந்து விட்டால் சரியாகிவிடும் என்று இப்படித்தான் ஆலோசனை சொல்கிறார்கள்.

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்...? என்றால் சாமியார் செய்து தருவார்... சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்... மந்திரம் செய்யும்... யாகம் செய்யும்...! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2.”நம் உயிர் தான்...!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை...!

காரணம்... ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கிவிடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறியவிடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.
5.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.