அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று எவ்வளவோ ஆர்வத்தில் இங்கே வருகின்றார்கள். ஆனால் இங்கே நானா... நீயா...? என்ற நிலைகளில் ஒரு சிலர் செயல்படுகின்றனர்.
ஞானம் பெற வேண்டும் என்று இங்கே எந்தப் பக்குவத்துடன் வருகின்றார்களோ அவர்கள் மனம் புண்பட்டால் அதனுடைய விளைவுகள் நம்முடைய வளர்ச்சியைக் குன்றச் செய்ததுவிடும்.
ஒரு மனிதன் எந்த ஏக்கத்துடன் வருகின்றானோ... அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் வரும் பொழுது... அதற்குத் தடையாக நாம் இருந்தால் அவன் எண்ணங்கள் எவ்வளவு பெரிய நிலையை நமக்கு உருவாக்கும்...! என்று உங்களுக்கே தெரியாது.
இதையெல்லாம் நாம் நம்மிடம் இருந்து அப்புறப்படுத்துதல் வேண்டும். பிறரை நாம் வாழ்த்த வேண்டும்.
1.பிறரை மதித்துத் தான் பழக வேண்டுமே தவிர
2.அவர்களை நாம் தாழ்த்திப் பழகவே கூடாது
குருநாதர் இதைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். தாயாகவும் நீ இரு... சேயாகவும் நீ இரு...! என்றார்.
1.குழந்தை தாயை ஏசிவிட்டாலும் அந்தத் தாய் “தன் குழந்தை” என்று அரவணைத்துத் தான் செயல்படும்
2.அதே சமயத்தில் குழந்தையைத் தாய் அடித்து விட்டாலும் மீண்டும் அந்தக் குழந்தை தாயை அணுகியே தான் வரும்.
தாயாகவும் சேயாகவும் நாம் ஒருங்கிணைந்த நிலையில் கொண்டு வாழ வேண்டும் என்று குருநாதர் எனக்கு இதைத்தான் முதலில் கொடுத்தார்.
எத்தனையோ பேர் உன்னை ஏசுவார்கள் பேசுவார்கள். ஆனால் தாயாக இருந்து அதை நீ ஏற்று... அவர்களுக்கு... சேய்க்கு உபதேசிப்பது போன்று ஒவ்வொரு நிலைகளிலும் நீ காத்தருள வேண்டும். தாய் தன் குழந்தையை எப்படிக் காக்கின்றதோ அதைப் போல நீ வரவேண்டும்.
ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் தாயாக மாற வேண்டும். சேயை எப்படி வளர்க்கின்றோமோ அது போலச் செயல்பட வேண்டும்.
குழந்தையிடம் யார் எதைப் பேசினாலும் அல்லது குழந்தையைத் திட்டிவிட்டு அடுத்து ஒரு பிஸ்கட்டைக் கையில் கொடுத்தால் அது வாங்கிக் கொள்ளும்.
1.அந்தக் குழந்தையின் செயலைப் போல
2.நாமும் பகைமையை மறத்தல் வேண்டும்
அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் உயர்த்த வேண்டும். இதைப் போன்ற நிலைகளை நாம் பின்பற்றுதலே நலம்.
அதற்குத்தான் இந்தக் கூட்டமைப்பை... ஸ்தாபனத்தை அமைத்திருக்கின்றோம். குருவின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்துள்ள நாம் அனைவரும் அதைச் செம்மையான முறையில் கடைப்பிடித்து வழி நடத்துதல் வேண்டும்.
பல்லாயிரக் கணக்கானோர் நல்வழியினை விரும்ப... இதற்குள் இரு நூறு பேர் தடைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்ற நிலையில் நானும் (ஞானகுரு) காட்டிற்குள் சென்று இதைச் செயல்படுத்த முடியும்.
ஏனென்றால் அந்த இடைஞ்சலான இடத்தில் போய் உட்கார்ந்தாலும் அங்கே வருபவர்கள் எத்தனையோ கஷ்டம் என்று ஒரு நான்கு பேர் அந்த “நல்லதைப் பெற வேண்டும்...” என்ற எண்ணத்தில் வருவார்கள்.
அவர்களுக்கு மட்டும் நான் அருள் ஞானத்தைப் பெறச் செய்ய முடியும். கஷ்டப்பட்டு எபப்டியும் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைகளில் வருவோர் நிச்சயம் அதைப் பெறுவார்கள்.
ஆனால் கஷ்டமில்லாமல் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது எப்படி இருக்கும்...? அது இலேசாகத் தான் தெரியும்.
அது போன்று நீங்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்லி எச்சரிக்கை செய்கிறேன் (ஞானகுரு).