ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2021

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற கடமை உணர்வு நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்

 

வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்குச் சூரியனைப் போன்று நாம் ஒவ்வொருவரும் பிரகாசிக்க வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நம் உயிரே சூரியனாக இருந்து இயக்குகின்றது. அதே மாதிரி நாமும் பிறருடைய நிலைகளுக்குப் பிரகாசிக்கும் நிலையாக ஒளியின் சுடராக சூரியனாக மாற வேண்டும்.

அதாவது... சூரியனைப் போன்று
1.துருவ மகரிஷி ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக அறிவின் ஞானமாக எப்படி வளர்கின்றதோ
2.நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ மகரிஷியாக மலர வேண்டும்.
3.அந்த மகரிஷி காட்டிய நிலைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் தீமைகளை அடக்கித் தீமைகளை அகற்றிடும் உணர்வாக உடலான பிரபஞ்சத்திற்குள் நாம் வளர்த்தல் வேண்டும்.

ஆகவே நீங்கள் அனைவரும் தீமைகளை அகற்றி விடுவீர்கள் என்று நம்புகின்றேன்.

1.குரு பக்தி என்ற நிலையில்... குரு என்று நாம் எதைச் சொல்கின்றோமோ
2.நமது குருநாதர் எதைச் சொன்னாரோ அதன் வழிகளிலே நாம் கடைப்பிடித்து
3.ஒருங்கிணைந்த நிலைகளில் வழிப்படுவோம்.

நம்மைக் காப்போம்... நம்மைச் சார்ந்தவரைக் காப்போம்... உலகைக் காப்போம்...! என்ற நிலைகளில் அந்த உயர்ந்த எண்ணங்களை வளர்ப்போம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் “அந்தச் சப்தரிஷி மண்டலமே நமக்கு எல்லை...!” என்ற நிலையினை வகுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியாகத் தியானிப்போம்.

சப்தரிஷிகளின் அருள் சக்தி நாம் பார்க்கும் அனைவரும் பெற்று அவர்கள் வாழ்க்கையில் மன பலமும் மன வளமும் பெற்று தொழில் வளம் பெருகி செல்வம் செல்வாக்கு பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு நாளும் எடுத்து நாம் வளர்க்க வேண்டும்.

குரு வழியில் நாம் அனைவரும் அந்த ஞானத்தின் தொடர்பில் வளர வேண்டும். அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏககத்துடன் நாம் தியானிக்க வேண்டும்.

1.குரு நமக்கு எதை உபதேசித்தாரோ நமக்குள் ஒவ்வொரு நாளும் அதை வளர்க்க வேண்டும்
2.நம் பார்வையால் பிறருடைய தீமைகள் நீக்கப்பட வேண்டும்
3.நம் சொல்லால் பிறருடைய கஷ்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
4.குரு அருளால் அந்தச் சக்தியைப் பெற்று எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

எல்லோருடைய குடும்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் மனமகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற கடமை உணர்வுடன் நாம் செயல்பட வேண்டும்.

மற்றவர்களுக்கு அந்த அருள் உணர்வினை எடுத்துப் போதிக்கும் தன்மைகள் பெற வேண்டும். அவர்களுக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய வாழ்க்கைத் தரம் அமைதல் வேண்டும்.

1.அவர்களை நல்வழிப்படுத்தும்... மன பலம் பெறச் செய்யும்... நிலையான வளர்ச்சியாக நீங்கள் பெற வேண்டும்...
2.அந்த நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.