ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2021

ஒன்று சேர்ந்து வாழும் தத்துவம் இல்லை என்றால் இயற்கையில் எதுவுமே வளர்ச்சி அடைய முடியாது

 

கார்த்திகை நட்சத்திரம் ஒளியின் சுடராக வளர்ந்து தனக்கென்று கோள்களை உருவாக்கிக் கொண்டு தனிச் சூரியக் குடும்பமாகும் பருவம் பெற்று விட்டது.
1.அது தனித்தன்மையாக வாழ ஆரம்பித்து விட்டது.
2.அதனால் நம் பிரபஞ்சத்திற்குக் கிடைக்க வேண்டிய அதனுடைய சக்திகள் கிடைக்காது போய் விட்டது.

ஒரு சூரியக் குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் முதிர்ந்த பின் எப்படித் தனித்துச் சூரியக் குடும்பமாகிறதோ அது போல் மனிதர்கள் குடும்பமாக வாழும் நாமும் ஒரு வெறுப்பின் தன்மையை வளர்த்துக் கொண்டால் பிரித்து வாழும் உணர்வையே நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

இதைப்போல குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் வெறுப்பும் வேதனையும் அதிகமாகி தீய வினையாக வளர்ந்து வருவதை நிறுத்த வேண்டும் அல்லவா.

தொழிலில் வரவு செலவு நடத்துகின்றோம். கடையில் நம்மிடம் வந்து வாங்கிச் செல்வார்கள். பொருளுக்குண்டான பணத்தைக் காலத்திலே வந்து கொடுப்பார்கள்.

ஆனால் ஒருவரின் சந்தர்ப்பம் அவர் குடும்பத்தில் ஏதோ சில சிக்கலாகி விட்டால் வாங்கியதற்குரிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது போய்விடுகிறது.

அது போன்ற ஒரு சந்தர்ப்பத்திலே நாம் என்ன நினைப்போம்...?

1.இதற்கு முன் அவன் யோக்கியனாக இருந்தான்... சரியான முறையிலே பணத்தைக் கொடுத்தான்.
2.இப்பொழுது வர வரக் கெட்டுப் போய்விட்டான்...! என்ற இந்த நிலை வருகின்றது.

இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் நான் அன்றைக்கெல்லாம் உனக்குச் சரியாகக் கொடுத்தேன். நீயும் பணத்தைத் திரும்பக் கொடுத்தாய். ஆனால் இப்போது இருக்க இருக்க நீ கெட்டுப் போய்க் கொண்டே இருக்கிறாய். ஆகையினால் உனக்கு இனிமேல் கடன் இல்லை... போ...! என்ற சொல் வரும்.

ஆனால் அவரோ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்பார்...! “கொடுக்க முடியாது...” என்று சொல்லி விட்டால் கொஞ்சம் முறைப்பார். அந்தச் சமயம் அவரிடமிருந்து வர வேண்டிய பாக்கியும் இருக்கும்.

சரக்கை இவர் என்ன கொடுப்பது...! சரக்கை நாம் அடுத்தவரிடம் வாங்கிச் செல்வோம்...! என்று சென்று விடுவார்.

இதைப் பார்த்தவுடனே... பார்...! அன்று கடன் கொடுத்தேன் என்னிடம் வாங்கினான். இன்று அடுத்தவரிடம் போகின்றான் பார்...! என்று இப்படித்தான் நமக்குள் பகைமை உணர்வு அதிகமாக வளர்ந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நமக்குள் பகைமையாக உருவாகிவிடுகிறது.

வியாபாரத்திலே நாம் எத்தனையோ பேரிடம் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் யாரிடமாவது வெறுப்பாகி இருப்போம். அவரை நினைக்கும் போதெல்லாம் வேதனைப்படுகின்றோம்.

1.அந்த வேதனைப்படும் உணர்வுகளை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பதிவாக்கிக் கொள்கின்றது.
2.அடுத்தாற்போல் அதை நினைக்கும் போதெல்லாம் நமக்குள் வேதனையைத் தூண்டும்.

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தின் விதையைப் பூமியிலே போட்டபின் அது அந்தத் தாய் மரம் வெளிபடுத்திய கசப்பான சத்தை எடுத்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதே போன்று தான் மனிதனுக்கு மனிதன் வெறுப்பாகி உடலில் அந்த உணர்வின் சத்து எண்ணமாக ஆனால் அது ஒரு வித்தாகி விடுகின்றது. கேட்டறிந்த பின் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

பதிந்த நிலைகள் கொண்டு அவரை நினைத்தோம் என்றால் அவர் மேலே உண்டான வெறுப்பு நம்மிடமும் வெறுப்பான உணர்வாக வளர்கின்றது. நம்மிடம் இருக்கும் நல்ல உணர்வுடன் சண்டையிடுகின்றது.

உடலுக்குள் அது சண்டையிட ஆரம்பித்த பின்...
இடுப்பு வலிக்கிறது…
மேல் வலிக்கிறது…
நெஞ்சு வலிக்கிறது…
முதுகு வலிக்கிறது…
தலை வலிக்கிறது…
கண் எரிகிறது…! என்று சொல்வதைப் பார்க்கலாம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம்முடைய சந்தர்ப்பம் நல்ல உணர்வை இயக்காதபடி தீய வினைகளாக நமக்குள் சேர்கிறது. அதை நிறுத்த வேண்டும் அல்லவா...!

ஆகவே “எப்பொழுதெல்லாம் நம் உணர்வுகள் மாறுகின்றதோ…. அப்பொழுதெல்லாம்…” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இப்படி எண்ணி அந்த உயர்ந்த சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

பின் யார் மேல் வெறுப்பு வந்ததோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதைத் தியானித்துப் பாருங்கள்.
1.உங்களிடம் கெட்டது வராது
2.மன பலம் வரும்.
3.உடல் நலம் பெறும்.
4.சொல்லில் இனிமை பெறும்.
5.உங்கள் பார்வை எல்லோரையும் நல்லதாக்கும்.