ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2021

தியானத்தில் பெற்ற அனுபவம் – ஈஸ்வரபட்டர்

 

ஈஸ்வரபட்டர்:-
“ஆத்மாவின் இயக்கம் தான்… சரீரச் செயல் வழித் தொடர்…!” என்பதனை நான் போதனை நிலையில் உணர்த்தியதற்கு ஒப்ப ஆத்ம வளர்ச்சியால் தியானத்தில் கண்ட உண்மைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.

அன்பரின் அனுபவம்:-
கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்ததும் உபதேசம் செய்யும் ஞானகுருவை நினைத்தேன். ஞானகுரு கையை உயர்த்தி என்னை ஆசீர்வதித்தார். ஞானகுருவின் உள்ளங்கையிலிருந்து குருதேவரின் முகம் மட்டும் என்னை நோக்கி வருவதாக உணர்ந்தேன்.

வந்த முகம் பிறகு முழு உருவமாகவும் கையில் ஒரு தடியுடனும் அவரைச் சுற்றி ஆட்டுக் கூட்டம் இருப்பது போலவும் தெரிகின்றது. பிறகு வெண்மையான முகிலைப் போன்று படர்ந்த ஒளியாகத் தெரிந்தது.

இன்னொரு அன்பரின் அனுபவம்:-
உடல் முழுவதையும் சுற்றி ஓர் ஒலி சுழல்வதைப் போலவும்… செவியில் “உய்…ய்ய்ய்…” என்ற ஒலி நாதம் கேட்டது.

உடல் முழுவதுமே அந்த ஒலியுடன் ஒளியும் சேர்த்து இயக்கக்கூடிய இழுப்பு நிலை போன்று… உடலே ஜிவ்…வ்வ்.. என்று மேல் நோக்கி உச்சந்தலையிலிருந்து இழுப்பதைப் போன்று “ஆனந்தமான நிலை” ஏற்பட்டது.

உடலோ மற்ற உணர்வுகளோ எதுவுமே தெரியாத நிலையில் நான் இருப்பது தெரிகின்றது. ஆனால் உடலின் எண்ண ஓட்டங்கள் இயங்குவது தெரிகின்றது. உடல் கனமோ உடலுக்குகந்த மற்ற உறுப்புகளின் நிலையோ மறந்து “எண்ணம் மட்டும்” ஓடுவது தெரிந்தது.

1.பிறகு ஒரு மிளகைப் போன்ற அளவில்
2.மிகவும் பிரகாசமான நீல நிற ஒளி
3.நெற்றியின் புருவத்திற்கு இடையில் (ஆத்ம ஜோதி) தெரிந்தது.

பின் மஞ்சள் நிறமான பெரிய சூரியனைப் போன்று ஒளி தெரிகின்றது. அந்த ஒளி சுழன்று ஓடுகின்றது. அப்படிச் சுழலும் பொழுது அதிலிருந்து வானவில்லில் காணும் ஒளியைக் காட்டிலும் மிக மிகப் பிரகாசமாகச் சில ஒளிகளும் அந்த ஒளிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து அதிலிருந்து பல ஒளிகளும் தெரிந்தது.

வான மண்டலம் மஞ்சள் நிறமான பிரகாசமான ஒளி நிலைக்கு அது சுழன்று ஓடும் ஓட்டத்துடன் செல்வதைப் போன்றும் சில இடங்களில் உஷ்ணமாகவும் குளிராகவும் நெருப்பும் மற்றும் விவரிக்க முடியாத பஞ்சைப் போன்று தெரிந்தது…!

மேலும்… அதை எப்படிச் சொல்வது என்றே புரியாத நிலையில்
1.வெண்மை முகிலுமல்லாமல் கனத்த தன்மையும் இல்லாமல் சொல்லால் உணர்த்த முடியாத சிலவும்
2.இதே தொடரில் அவ் ஒளி வட்டத்துடனே செல்லப்படும் பொழுது
3.மனித உருவத்தைப் போன்றும் ஆனால் உருவமல்லா ஒளியைப் போன்றும்
4.பிரகாசத் தன்மையுடன் வரிசையாக உள்ளனர்….
5.ஒருவர் முதுகில் மட்டும் ஏதோ ஒரு மிருகம் உள்ளதைப் போன்று தெரிகின்றது.

அவர்களை எல்லாம் பார்த்தவுடன் “ஆசீர்வாதம்…” வாங்கும் எண்ணம் வந்தது. உங்கள் உயர்வைப் போன்று… நானும் உயர வேண்டும்…! என்று வணங்கச் செல்லும் பொழுது அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள்.

ஜீவ சரீர பிம்ப வாழ்க்கையில்…
1.உங்களை ஒத்தவர்கள் பெறும் ஞானத்தைக் கொண்டு தான் எங்கள் வளர்ச்சி நிலையே உள்ளது
2.உங்களைக் கொண்டு தான் எங்கள் உயர்வே
3.நீ அவரிடம் ஆசி பெறு…! என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
4.அவ்விடம் ஒன்றுமே இல்லா பால்வெளி வான மண்டலத்தைப் போல் கண்ணுக்கு எட்டியவரை எதுவுமே இல்லாமல் தெரிகிறது.

பிறகு முகிலைப் போன்று படர்ந்த திட்டுத் திட்டாகத் தெரிகின்றது. வார்த்தையிலும் இது வரைக்கும் கண்ணிலும் கண்டிராத ஒளிகள் மிக மிகப் பிரகாசமாகப் பல வண்ணத்தில் நாட்டியமாடுவதைப் போன்று மிகவும் துரிதமாகச் சுழன்று “ஓர் உயர்ந்த முப்பது நாற்பது அடி உயரத்திற்குப் பெண்ணின் உருவம் போன்று… ஒளியிலேயே… ஆனதைப் போன்று…” தெரிகின்றது.

ஊன்றிப் பார்க்கும் பொழுது ஆணின் உருவமாகவும் பெண்ணின் உருவமாகவும் மாறி மாறித் தெரிந்தது. பின் சாதாரணப் பெண்ணை ஒத்த உருவமாக ஒளி வண்ணங்களாகத் தெரிந்தது.

ஆசீர்வாதம் வாங்கும் நோக்கத்தில் காலில் விழுந்து வணங்கியவுடன்
1.என் செயலை வளர்ப்பாயா..? என்ற குரல் கேட்டது…!
2.அங்கே ஞானகுருவும் ஈஸ்வரபட்டரும் நிற்பதும் தெரிகின்றது.