ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2016

ஒளி சரீரம் பெற்ற மகரிஷிகளின் தொடர்பு கிடைத்தது தாய் கருவில் நான் பெற்ற பூர்வ புண்ணியம்தான் - ஞானகுரு

நம் உடலே பெரிய காடு.
நமக்குள் எத்தனையோ குணங்கள் உண்டு.

மனிதனுக்குள் இருக்கும் இந்த உணர்வுகளில் தீமைகளையும் பகைமைகளையும் நீக்கிய அருள்ஞானிகளின் உணர்வை நமக்குள் செலுத்தினால் அது பகைமைகளை அகற்றும்.

தீமைகளைப் பற்றற்றதாக மாற்றும். மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றச் செய்யும். பற்றுடன் பற்று பற்றற்றதாக இரு என்று நம்மை இருக்கச் செய்யும்.

வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வோ
பழி தீர்க்கும் உணர்வோ,
வெறுப்பின் உணர்வோ,
வேதனையின் உணர்வோ
எப்படி வாழ்வேன் என்ற நிலைகளைப் பற்றிடாது என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.

நமக்குள் தீமைகளைப் பற்றற்றதாக இந்த வாழ்க்கையில் மாற்றிடல் வேண்டும். எவர் அதைப் பெறுகின்றனரோ இது கடைசி எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் இன்று அழியலாம். இந்தப் பிரபஞ்சம் அழியலாம்.

ஆனால், இதிலே விளைந்தது உயிரணுக்களாகத் தோன்றி
மனிதனாகி இந்த உணர்வின் தன்மை பெற்ற பின்
இந்தப் பிரபஞ்சத்தை விட்டு அகன்று
தன்னுடைய பேரண்டப் பிரபஞ்சத்துடன்
அதில் வாழும் நிலைகளை இது பெறும்.

ஒவ்வொரு அண்டத்திலும் நமது பிரபஞ்சத்தைப் போன்று வாழ்ந்த மனிதர்களில் வந்தவர்களும் இதைப் போல ஒளிச் சரீரமாக ஒதுங்கியுள்ளார்கள்.
அதன் உணர்வின் வட்டத்தில் சேர்ந்து
ஒளியின் சரீரமாக என்றென்றும் அது வாழ்வார்கள்.

ஆனால், இந்தச் சூரியன் அழியலாம். மனிதனாகி ஒளியின் சரீரம் ஆகிவிட்டால் என்றும் அழிவில்லாத நிலை அடைந்து என்றும் பதினாறு என்ற நிலையில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலைகள் காவியத் தொகுப்புகளில் மகாபாரதத்தில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

இதனை யாம் (ஞானகுரு) அறிவதற்கு
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி
எனது தாய் கருவில் விளைந்த பூர்வ புண்ணியம்
என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், நான் படிக்காதவன்.
இதை (மெய் உணர்வை) நான் அளவு கோல் வைத்துச் சொல்ல முடியாது.
அருள் ஞானிகளின் உணர்வுகள் எனக்குக் கிட்டியது.

என் தாயின் கருவிலே வளரப்படும் பொழுது எனக்குள் பதிந்த உணர்வு தான்
இந்த வழிக்கு குருவிடம் எம்மை அழைத்து வந்தது.
அதன் வழியில் அண்டத்தையும் அறியும் தன்மை வந்தது.
எனக்குள் இதைப் பெருக்க முடிந்தது.

20 வருடம் காடு மேடெல்லாம் அலைந்து உண்மையின் உணர்வைத் தெரிந்து கொண்டபின் நீங்கள் ஒவ்வொருவரும் இயற்கையின் பேருண்மைகளை அறிய முடியும்.

தன்னையறியாது வந்த இருளைப் போக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்களுக்கு ஊட்டச் செய்கிறோம். உங்களை நீங்கள் நம்புங்கள்.