ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 8, 2016

தர்மத்தையும் நீதியையும் செய்தேன், எனக்குப் பாவங்கள் வருமா..? என்று கேட்பார்கள்

ஒருவர் கடுமையாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார். நாம் இரக்கம் கொண்டு அவரை உற்றுப் பார்த்தோம் என்றால்
அவருக்குள் விளைந்த அந்த வித்து
நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.

நாம் இரக்கத்துடன் அவருக்கு உதவி செய்தோம் என்றால் அதிலிருந்து வந்த உயிரான்மா அவருடைய வேதனையின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது.

நாம் நல்ல எண்ணம் கொண்டு அவருக்கு உதவி செய்தாலும்
அந்த நல்ல எண்ணத்திற்கு அவர் உடலிலே வலு இல்லை.
ஆனால், அவருக்கு எண்ணங்கள் வரும்.

இருந்தாலும் உதவி செய்த நன்றிக்கு யார் உதவி செய்தாரோ அவரின் எண்ணம் கொண்டு இந்த உயிரான்மா வெளி வந்தது என்றால்
யாருடைய உணர்வு தன் உடலில் அதிகமாக இருக்கின்றதோ
அந்த ஆன்மா உதவி செய்தவர் உடலுக்குள் வந்து
அந்த உடலில் வந்த நோயும்
அவர் குடும்பத்தில் வந்த கலக்கங்களையும் உண்டாக்கிவிடும்.

பரிணாம வளர்ச்சியில் வளரப்படும் பொழுது தன்னைக் காட்டிலும் கொடூர மிருகங்களின் உடல்களுக்கு மாறுகின்றது.

மனிதனானபின் ஒரு மனிதன் உடலில் நோயாகி விட்டால் அந்த நோயின் உணர்வுகள் அது எண்ண வித்தாக இந்த மனித உடலில் உருவாகி அந்த நோயாளி உடலை விட்டு வந்தபின், உதவி செய்த உடலுக்குள் வந்து அதே நோயை உருவாக்குகின்றது.

இயற்கையின் நியதிகள் இது.

ஆகவே, மனிதன் நாம் தர்மத்தையும் நீதியையும் செய்யலாம்.
நான் தர்மத்தைச் செய்தேன்
எனக்கு எப்படிப் பாவம் வரும்? என்று கேட்கலாம்.

வேதனைப்படுவதை கண்ணால் தனக்குள் பதிவு செய்யும் போது
ஊழ்வினை என்ற வித்தாக உருவாகிவிடுகின்றது.

எந்த எண்ணத்தைக் கொண்டு அந்த உடலில் நோய் வந்ததோ அதே உணர்வு காற்றிலே படர்கின்றது. மனிதனான உடலுக்குள் இது பதிவான பின் அதை இழுத்து நமக்குள் அந்த நோயின் தன்மை விளைகின்றது.

பின் நமக்கும் இதைப் போன்று பிறர் மேல் அதிக அளவில் அன்பையோ பாசத்தையோ வைத்திருந்தால் அந்த உணர்வுகளை நமக்குள் அதிகமாக விளைய வைத்துவிட்டால் என்ன ஆகும்?

இன்று நம் குழந்தையைப் பாசமாக வளர்க்கின்றோம்.

அவன் நாம் சொன்னபடி கேட்கவில்லை என்றால்
அந்தப் பாசத்தின் உணர்வுகள் உச்சக்கட்டம் அடைந்து
அவன் எதிர்காலம் என்ன ஆகும்?
என்ற வேதனையை எடுக்க நேருகின்றது.

வேதனை என்ற இந்த உணர்வுகள் விஷமாக மாறுகின்றது. வேதனை என்பதே விஷம்.

இப்படி அவனை எண்ணி வேதனையை உருவாக்கி உருவாக்கித் தன் உடலுக்குள்
அவனைக் காத்தருளிய அந்த உடலுக்குள் பட்டபின்
கை கால் குடைச்சல், இருதய நோய் பட படப்பு
இத்தகைய நோய்கள் உருவாகிவிடுகின்றது.

அவ்வாறு உருவாகிவிட்டால் கடைசியில் நமது முதுமையின் காரணமாக அவனின் நினைவு கொண்டே இந்த உடலை விட்டுச் செல்கிறோம்

அவ்வாறு உடலை விட்டுப் பிரிந்து சென்றால் அவன் உடலுக்குள் சென்று அவனைக் காப்பதற்குப் பதில்
அவனில் அவனால் விளைந்த
நமது உடலில் விளைந்த இந்த நஞ்சினை
அவன் உடலுக்குள் பாய்ச்சி
அவனைத் துரித நிலைகள் கொண்டு வீழ்த்திவிடுவோம்.

அப்பொழுது சொல்வார்கள். அப்பா அம்மா இருந்த வரையில் அவனைக் காப்பாற்றினார்கள்.

அவன் அப்பா அம்மா இறந்துவிட்டார்கள்.
இவன் உடலில் இத்தனை நோய்கள் வந்துவிட்டது
இதைக் கேட்போர் யாரும் இல்லை
மடியும் தருணத்திற்கு அவன் வந்துவிட்டான் என்பார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்..