ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2016

கடவுள் நம்மைத் தண்டிக்கின்றாரா? அந்தக் கடவுள் யார்?

இன்று உலகில் ஒரு சட்டத்தை இயற்றி இதன் வழி நாம் நடந்தால் நமக்கு "ஆண்டவன் இதைச் செய்வான்..," என்கிறார்கள். 

ஏனென்றால், நாம் எதை எண்ணி இந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்து உடலுக்குள் பதிவு செய்து கொள்கின்றோமோ இதை ஆள்பவன் யார்?

உயிர். ஆக ஆண்டவன் என்று இதற்குக் காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

ஆனால், அதே சமயத்தில் ஒரு மதம் என்ற சட்டத்தை இயற்றி அதன் உணர்வின் எண்ணத்தைத் தனக்குள் பதிவாக்கிவிட்டால் இந்த உடலுக்குள் கடவுள் உள் நின்று இயக்கும் சக்தியாக வருகின்றது.

எந்தெந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றோமோ இதை மீண்டும் எண்ணும் போது அந்த எண்ணத்திற்கு விரோதமாக வேறொன்றைக் கலந்தால் இது குற்றமாகிவிடுமோ என்ற உணர்வைச் சேர்த்து இதனை இயக்கிவிட்டால் அது "கடவுள் நமக்குத் தண்டனை கொடுப்பான்..," என்ற நிலைகளாகிறது.

எதைக் கலக்கப்பட்டு மதங்கள் கொடுக்கப்பட்ட நிலைகள் இதில் தவறு செய்துவிட்டோமோ என்ற உணர்வுகளைக் கலந்துவிட்டால் இந்த உயிர் அதையே மாற்றி இந்த உணர்வின் தன்மையை அணுவாக மாற்றிவிடுகின்றது.

மீண்டும் அந்த நினைவின் தன்மை வந்துவிட்டால் "கடவுள் என்னைத் தண்டிக்கின்றான்..," என்ற நிலைகள் வரும்.

ஆகவே, இதை நம் உடலுக்குள் நாம் எண்ணிய உணர்வுகளே நமக்குள் அந்த உணர்வின் தண்டனையை அந்த வேதனை என்ற அணுக்களைப் பெருக்கச் செய்துவிடுகின்றது.

இப்படித்தான் உலகில் அரசர்கள் மதம் என்ற நிலையில் சட்டத்தை இயற்றி மக்களைத் தன் பால் இழுத்துக் கொள்ள அந்த நிலைகளைச் செய்தார்கள்.

அரசன் காட்டிய உணர்வுகள் எந்தச் சட்டத்தை இயற்றினார்களோ அது தெய்வம் என்றும் கடவுள் என்றும் இறைவன் என்றும் காரணப் பெயரை வைத்து விடுகின்றார்கள்.

ஆகவே, கடவுள் யார்?

"ஒன்றுடன் ஒன்று இணைத்து.., ஒன்றுக்குள் இயக்கக்கூடிய நிலை தான் கடவுள்..," என்ற நிலைகளைத் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.