ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 14, 2016

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்கு எதற்காக வருகின்றீர்கள்?

நம் வாழ்க்கையில் பிறர் படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் அதிகமாக நாம் கேட்டு அந்த விஷத் தன்மைகள் ஊடுருவி விட்டால் விஷ அணுக்களாக நமக்குள் உருவாகி அது வளர்ச்சியடையப்படும் பொழுது என்ன செய்யும்?

எந்தச் சொல்லை நம்மைச் சொல்லச் செய்கிறது?

நீங்கள் எம்மிடம் இங்கே வருகிறீர்கள் என்றால்,
“சாமி என் உடலில் நோய் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது.
என் வீட்டில் கஷ்டம் எங்களை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது,
எங்கள் குடும்பத்தில் சும்மா சண்டை வந்து கொண்டே இருக்கின்றது”
இப்படித்தான் கேட்பீர்கள்.

நான் இதையெல்லாம் கேட்காதீர்கள் வேண்டாம் என்று சொன்னால் நீங்கள் கேட்கவே மாட்டீர்கள்.

எங்கள் வீட்டில் கஷ்டமாக இருப்பதை எப்படி நாங்கள் சொல்லாமல் இருப்பது என்றுதான் சொல்வீர்கள். ஏனென்றால், எந்த உணர்வுகள் இழுக்கின்றதோ அந்த உணர்வு தான் இங்கே வரும்.

அந்தக் கஷ்டம் என்ற உணர்வுகள்
உங்களுக்குள் அந்த நினைவாற்றல் வந்துவிட்டால்
உங்கள் முன்னனியில் ஆன்மாவில் இதுதான் இருக்கும்.

அப்பொழுது இந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அதனால் உங்களுக்குள் இருக்கும் மற்ற அணுக்கள் நன்மை பயக்கும் சக்தியாக வரும் நீங்கள் நலம் பெறுவீர்கள் உங்கள் குடும்பம் நலம் பெறும், உங்கள் தொழில் வளம் பெறும் என்று யாம் சொன்னாலும்
இதை உங்கள் உணர்வுகள் ஏற்றுக் கொள்ளும் சக்தியாக இருக்காது.
நான் சொல்வது அனைத்துமே விரயமாகிவிடும்.

நான் பல முறையும் சொல்லியுள்ளேன்.
பல நிலைகளையும் சொல்லியுள்ளேன்.

நீங்கள் எதற்காக இங்கே (தபோவனத்திற்கு) வருகின்றீர்கள்?
1.   மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும்.
2.   என்னில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.   மெய்ப் பொருள் காணும் சக்தி பெறவேண்டும்
4.   என் சொல்லில் இனிமை பெறவேண்டும்
5.   என் குடும்பம் நலம் பெறவேண்டும்.
6.   என் உடல் நலம் பெறவேண்டும்.
7.   என் குழந்தைகள் நற் குழந்தைகளாக வளரவேண்டும்
8.   எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவேண்டும்
9.   எங்கள் வியாபாரம் பெருக வேண்டும்.
10.  எங்கள் வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்.
11.  வாடிக்கையாளர்கள் நலம் பெறவேண்டும்.
என்று இதை ஏங்கிப் பெற்றால் அந்த உணர்வின் அணுக்கள் வளரும். உங்கள் உடல் நலம் பெற இது உதவும்.

இப்படி நீங்கள் கேட்டு ஏங்கிப் பெற்றால் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள். மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் குடும்பம் நலமாக இருக்கும். உங்கள் தொழில்கள் வளம் பெருகும். உங்கள் வாடிக்கையாளர்கள் பெருகுவர். உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்று இந்த அருள் உணர்வுகளை ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் உருவாக்கிவிடுகின்றது.

அந்த வித்தினைப் பெருக்கச் செய்வதற்குத்தான்
அந்த அருள்ஞான சத்தைப் பெருக்குவதற்குத்தான்
நீங்கள் இங்கே வருகின்றீர்களே தவிர அதை மறந்துவிட்டு
துன்பத்தைச் சொல்லிவிட்டு
துன்பத்தை நாம் கேட்போம் என்பதற்கல்ல.

 யாம் திரும்பத் திரும்பச் சொல்லிய பின்னும் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கட்டும் என்று இரண்டு தடவை சொல்லி மூன்றாவது தடவை சொன்னபின்
என் குடும்பத்தில் தொல்லை
என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று திருப்பிக் கேட்கின்றீர்கள்.

ஆகவே, இந்தப் பதிவுகள் உங்களுக்குள் நல்லதல்ல. கொடுக்கும் வாக்கினை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையோ உங்கள் உடலுக்குள் பதிவாகும் நிலையோ இல்லை.

இதை முதலில் நாம் மாற்றியமைத்துப் பழக வேண்டும். நான் பல முறை சொல்லியுள்ளேன். உங்கள் நண்பர்களுக்குச் சொன்னாலும்
1.   என் உடல் நோய் நீங்கி நான் உடல் நலம் பெறவேண்டும்.
2.   எங்கள் கஷ்டங்கள் நீங்கி மகரிஷிகள் அருள் சக்தி பெறவேண்டும்.
3.   எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
4.   அந்த அருள் சக்தி வேண்டும் என்று கேளுங்கள்.

கஷ்டமாக இருக்கின்றது என்று நிறுத்திவிட்டால் இந்த உணர்வு வந்துவிடுகின்றது. ஆகவே, இனி கஷ்டம் என்ற வார்த்தையை இங்கே சொல்லாதீர்கள்.

1.   எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
2.   எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
3.   எங்கள் தொழில்கள் பெருக வேண்டும்
4.   எங்கள் வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்
5.   எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெறவேண்டும்
6.   என் சொல் இனிமை பெறவேண்டும்
7.   என் செயல் அனைத்தும் அனைவரையும் நல்லதாக்க வேண்டும்
8.   எங்கள் விவசாயம் செழித்து வளர்ந்திட வேண்டும்
என்று நீங்கள் எண்ணிக் கேட்டீர்கள் என்றால் அதன் படி அனைத்தும் நல்லதாக வேண்டும் என்று சொல்லலாம்.

கொடுக்கும் அந்த வாக்கின்படி உங்கள் உயிர் உங்களுக்குள் அந்த உணர்வுகளைப் படைக்கும். அணுவாக உருவாக்கும்.

ஆக, வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தி நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்.

அத்தகையை நிலைகள் ஒவ்வொருவரும் பெறுவதற்கே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்.