ஒவ்வொரு மாதத்திலேயும் உயர்ந்த குணங்களை வளர்ப்பதற்குண்டான நிலைகளைத்தான் அன்று
மெய்ஞானிகள் உருவாக்கினார்கள். யாரும் அதைச் செய்வதில்லை.
மார்கழி மாதம் வந்ததென்றால், “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளாம்” என்று
சொல்லிக் கொண்டு பாடலைப் பாடுகின்றோம்.
அந்தக் குளிர்ந்த காலத்தில் நம் உடலிலிருந்து வெப்பங்கள் வெளி வரும். அந்த
உயர்ந்த ஞானத்தை எடுத்து அந்த உணர்வின் எண்ணங்களை அந்த மதியை வளர்க்கக்கூடிய
நிலைக்கு வைத்தனர் ஞானியர்.
ஏனென்றால், குளிரை நீக்கிவிட்டு உடலில் வரும் வெப்பத்தின் தன்மை கொண்டு உயர்ந்த
எண்ணங்களை நமக்குள் எப்படி வளர்க்க வேண்டும்? என்பதற்காக அந்த மார்கழி மாதத்தை
அவ்வளவு தெளிவாக வைத்துள்ளார்கள்.
மார்கழி மாதம் என்ன செய்கிறார்கள்? 4 மணிக்கெல்லாம் எழுந்து பெண்கள் வாசலைத் தெளிக்கின்றார்கள்.
அப்பொழுது அந்த நேரத்தில் எதை எண்ண வேண்டும்?
இருண்ட நிலைகள் கொண்டு மேகங்கள் சூழ்ந்திருப்பினும் சூரியனை நாம் பார்க்க
முடியாது.. 4 மணியிலிருந்து 5 மணிக்குள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும்
உயர்ந்த கதிரியக்கம் அது எடுத்து மேகங்களில் முன் மறைந்திருக்கின்றது.
அந்த நேரத்தில் நாம் எண்ண வேண்டியது எது?
மதி கொண்டு அந்த அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து நம் குடும்பம் நலம்
பெறவேண்டும் என்றும் அந்த உணர்வுகள் இங்கே படரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அந்த எண்ணத்துடன் இங்கே கோலங்கள் போடுவதும் நம் வீட்டினுடைய நிலைகள் தூய்மை
அடைவதற்கும் சகோதர தத்துவம் வளர்வதற்கும் இதை எண்ணி இந்த உணர்வு கொண்டு வானை
நோக்கி எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
எடுத்துப் பழகுதல் வேண்டும்.
எங்கள் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். எங்கள்
குடும்பத்திலுள்ளோர் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். நாங்கள் மதி கொண்டு
வாழவேண்டும். மகிழ்ச்சி பெறும் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணங்களை நமக்குள்
வளர்த்துக் கொள்வதற்காக மார்கழி மாதத்தை வைத்துள்ளார்கள்.
அந்த மாதத்தில் நாம் இப்படிச் செய்கின்றோமா?
ஏனென்றால், 4 மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய இந்தச்
சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. துருவப் பகுதியின் வழியாக
நம் பூமிக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படர்கின்றது.
அந்த 4 மணிக்கெல்லாம் எல்லோரும் கோவில்களுக்குச் சென்று பஜனை பாடுவார்கள்.
ஆனால், அதை ஏன் பாடுகின்றோம்? எதற்குப் பாடுகின்றோம்? என்று தெரியாது.
அந்த அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் எங்கள்
உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்.
என் கணவருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவியும், என் மனைவிக்கு
அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவனும் எண்ணுதல் வேண்டும்
அடுத்து என் அன்னை தந்தையர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
என் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ண
வேண்டும்.
பின், எல்லோருக்கும் அந்த மதி கிடைக்க வேண்டும் எல்லோருக்கும் அந்த அருள்
ஞானம் கிடைக்க வேண்டும் என்று எண்ணி ஒவ்வொருவரும் தியானிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து உலக மக்கள் அனைவரும் வாழ்க்கையில் வந்த இருள் அகற்றி ஒளியின்
சுடராகப் பெற்றிட வேண்டும் என்று ஒருமித்த நிலையில் எல்லோரையும் எண்ணச்
செய்வதற்குத்தான் மார்கழி மாதத்தில் அவ்வாறு நம்மைச் செய்யும் படி வைத்துள்ளார்கள்
ஞானியர்.