ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2015

உங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்

உதாரணமாக நோயுடன் வேதனைப்படுகின்றார்கள். இங்கே என்னைப் பார்த்து அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகிறார்கள்.

“அட பாவமே..,” என்று பரிதாபப்பட்டு நான் உதவி செய்கிறேன்.

ஆனால், அந்த இடத்தில் பரிபக்குவம் இல்லையென்றால் என்ன ஆகும்? அந்த நோயின் தன்மையை நுகர்ந்தபின் அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் எனக்கும் அந்த நோய் வரும்.

அப்பொழுது அந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எடுத்து அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும், அவர் உடல் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

அதை விட்டுவிட்டு “ஐயோ..,” என்று அங்கே சொன்னால் பின் “ஐயோ..,” என்று அந்த வேதனை இங்கே வந்துவிடும். அந்த உணர்வின் தன்மை அவர் பட்ட வேதனையைத்தான் நமக்குள் உருவாக்கும்.

ஆக, நாம் அடுத்தவருக்கு இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று உதவி செய்தாலும் அந்தப் பக்குவ நிலை தவறினால் என்ன ஆகும்?

வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் நன்றாகச் சூடாகும் முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்?

ஒரு வடையைப் போட்டால் வேகும், இரண்டாவது போட்டால் அவ்வளவுதான் வடை வேகாது. எண்ணெய் காணாமல் போகும், எண்ணையை வடை எடுத்துக்கொள்ளும். ருசி இருக்காது.

ஆகையினால் நமது வாழ்க்கையில் ஒரு தீமை என்ற உணர்வுகளை நுகர்ந்தபின் அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தீய செயல்களைச் செய்கிறான். நமக்குள் அந்தத் தீமை வராதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்து நாம் யாரிடம் சொன்னாலும் தீமை செய்பவன் குற்றங்களிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணத்தில்தான் நாம் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்குப் பதில், பார் நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன் நீ மறுபடி மறுபடி தவறு செய்து கொண்டே இருக்கின்றாய் என்று கோபமாகப் பேசும் நிலைகள் வரும்போது, அவரும் நம்மைத் திருப்பிப் பேசும் உணர்வுகள் வந்துவிடும்.

அங்கே பக்குவம் இழக்கப்படுகிறது. அங்கே நம் மீது தான் குற்றவாளியாக்கும் நிலைகள் உருவாகின்றது.

ஏனென்றால் தீமை செய்பவர்களின் உணர்வுகள் நமக்குள் வந்து அதே சொல்லை நாம் சொல்லும்போது நம்மைக் குற்றவாளியாக்கிவிடும். அப்பொழுது அந்தப் பக்குவம் தவறினால் என்ன ஆகும்?

அந்தத் தவறு செய்பவனின் நிலைகளில் உண்மைகளை எடுத்துச் சொல்ல முடியாது.  

ஆகவே நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த உணர்வுகளை அவருக்கும் பாய்ச்சி
அவர் உண்மையை உணர வேண்டும் என்று எண்ணிவிட்டு
பக்குவமாக நீ நடந்துகொள் என்று நாம் அவரிடம் சொன்னால்
அங்கே அந்தப் பரிபக்குவ நிலை வருகிறது.

அப்பொழுது அந்தத் தீமையை நமக்குள் விடாதபடி இப்படி வாழ்க்கையில் மாற்றிப் பழக வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

ஆக, இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும்.

சும்மா சாமி செய்யும், சாமியார் செய்வார், ஜோதிடம் செய்யும் யாகம் செய்யும் கடவுள் செய்வார் என்றால் யாரும் செய்ய முடியாது.
உள் நின்று இயக்குவதே கடவுள்.
நாம் எண்ணிய உணர்வே நமக்குள் கடவுளாகிறது.
அதிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

மனிதனான பின் தீமையை நீக்கிடும் உணர்வை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.