ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2015

வெறும் கல்வி ஏட்டுச் சுரைக்காய் தான் – மெய்ஞானத்துடன் ஒன்றி வாழ்க்கையைச் சீர்படுத்த வேண்டும்

நாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. கற்கும் கல்வியில் நாம் எதைக் கற்றாலும் கல்வி நமக்கு இந்த உலகை அறிந்திட உதவும். இந்த ஆறாவது அறிவல்ல.
மெய்ஞானத்தின் உணர்வு கொண்டுதான்
கற்ற கல்வியையும் சீராக்க முடியும்.

கல்வி கற்றுணர்ந்தோர் அனைவரும் கரையேறியது இல்லை. அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலையும் இல்லை. கற்றவர்கள் அனைவருமே பெரும்பகுதி மனக் குழப்பம் என்ற இந்த நிலையில்தான் இருக்கின்றனர்.

உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதும்
அதனால் பொருள் தேடும் நிலைகளுக்குத்தான்
கற்கும் கல்வியைப் பயன்படுத்துகிறார்கள்.

அதே சமயத்தில், அந்தக் கல்வியின் நிலைகளில் தேடிய செல்வம் செழிப்பாக இருப்பினும் பக்குவத்துடன் பற்று கொண்ட நிலைகளில் குடும்பத்தில் வாழாது வேதனை கொண்ட நிலையில் வாழ்கின்றனர்.

ஏனென்றால், சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் தீமையான உணர்வுகளை அறிந்திடும் நிலையும், அதை நீக்கிடும் அருள் ஞானமும் அங்கில்லை.

தனக்குள் தீமைகள் விளையாது நல்ல உணர்வுகளை வளர்க்கச் செய்யும் ஆற்றலைப் பெறவேண்டும். அதற்கு அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து
பகைமை என்ற உணர்வு நம் உடலுக்குள் சேராது
ஒற்றுமையுடன் இணைந்து வாழும்
இணைந்து வாழச் செய்யும் அருள் உணர்வுகளை
நாம் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வெறும் கல்வி ஏட்டுச் சுரைக்காய் தான். ஆகவே, கல்வி கற்றாலும் மெய்ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.

ஏனென்றால், மனிதனாக ஆக்கியது உயிர் தான்.
மனிதனான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் உயிர் தான்.

இந்த ஆறாவது அறிவின் தன்மைதான் உயிரைப் போல உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக நாம் வளர்க்கும் நிலை பெற்றது.

நாளை வரும் எதிர்காலத்தில் நம்மைக் காக்க நமது குழந்தைகளை அருள் உணர்வு பெறும்படி செய்தல் வேண்டும். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் இதைப் போன்றே அறிவுரைகளைக் கூறிடல் வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய்
நீ தெளிந்த மனம் பெறுவாய்
நீ தெளிவான வாழ்க்கை வாழ்வாய்
கல்வியில் உயர்வு பெறுவாய்
உலக ஞானம் பெறுவாய் உலகைக் காத்திடுவாய்
காத்திடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வுகளை நம் குழந்தைகளுக்குப் பாய்ச்சிட வேண்டும்.

ஆகவே, நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் வழி செல்வோம். அன்றைய மெய் ஞானிகள் எப்படி வாழ்ந்தார்களோ அவர்களைப் போன்றே மெய் ஞான வாழ்க்கையை நாம் அனைவரும் வாழ்ந்திடும் நிலையாக இதனைச் சீராகப் பயன்படுத்துவோம்.