ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 2, 2015

இந்த உடல் பற்றைப் பிடிக்காதவன், அருள் உணர்வுடன் பைத்தியமாகின்றேன் – ஈஸ்வராய குருதேவர்

நமது குரு காட்டிய அருள் வழி - அவர் வேகா நிலை என்ற நிலையை இந்த உடலில் சாகாக்கலையாக மாற்றினார்.

ரோட்டிலே செல்லும்போது பைத்தியக்காரர் மாதிரி போஸ்ட் கம்பியில் தட்டுவார்.

போஸ்ட் கம்பியில் தட்டும்போது “என் சாமி தட்டுகிறீர்கள்..,” என்று கேட்டேன்.

நீ தான்டா.., கேட்கிறாய், வேறு எவன் கேட்கிறான்? என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள். நீ ஏன் என்று கேட்பதால் உனக்கு விளக்கம் சொல்கிறேன் என்பார் குருநாதர்.

இந்த உலகம் பைத்தியக்கார உலகமாக இருக்கின்றது. அவன் ஆசை எதுவோ, அதன் ஆசை கொண்டு அவன் பைத்தியமாகின்றான், மற்றதைச் சிந்திப்பதில்லை.

இப்பொழுது என் ஆசை இந்த உடலின் மீது பற்று இல்லை.
அருள் ஒளி என்ற பற்றுக்கு வருகிறது.
அதன் உணர்வை நான் பெறச் செய்யப் போகும்போது இதன் நிலையில் எவருமே என்னைப் பற்றிடாது நான் செல்கிறேன் என்று சொல்கிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

பைத்தியக்காரன் போல் இருந்தால்
“பைத்தியக்காரன்” என்று என்னை ஒதுக்கிவிடுவான்.

ஆக, அதே சமயத்தில் சில உண்மையின் உணர்வுகளை நான் செய்தாலும், “சாமி செய்தார்..,” என்று என் மீது பற்று வரும். இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி என்னை இழுத்துவிடுவான்.

ஆகையினால், இழுத்தாலும் நான் பைத்தியக்காரனாகத் தான் இருப்பேன்.

ஆக, நான் பைத்தியம் என்ன? இந்த உடலின் நிலையில் பிடிப்பதில்லை. இந்த உடலுக்குப்பின் அருள் என்ற உணர்வை நான் எடுத்துக் கொள்கிறேன்.

அவனுக்கு என்னைப் பார்த்தால் பைத்தியமாகத் தெரிகிறது. ஆனால், அவன் பைத்தியக்காரன் என்று அவன் உணர்வதில்லை.

இன்று மக்களின் நிலைகள் எப்படி இருக்கிறது? அவர்கள் பைத்தியம் என்று நான் சொல்லும்போது அவர்கள் பைத்தியக்காரர்கள் ஆகிறார்களே தவிர
நான் இந்த உடல் பற்றைப் பிடிக்காதவன்
அருள் உணர்வுடன் நான் பைத்தியமாகின்றேன்
என்று இப்படி விளக்கங்களைச் சொல்வார்.

ஒவ்வொரு நிமிடத்திலும், நமது நிலைகளில் பிறருடைய தீமைகளின் நிலைகளைக் கேட்காது விட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

ஒருவர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போது நமக்கு எதற்கு இந்த வம்பு என்று சென்றுவிட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

வாழ்க்கையில் நீங்கள் இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். எதாவது ஒரு பொருளை சரி என்று சொல்லி “அவன் ஆசைப்படி அவனே வைத்துக் கொள்ளட்டும்..,” என்று நாம் ஒதுங்கிச் சென்றால் “சரியான பைத்தியம்.., இது” என்று நம்மைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

அதே சமயத்தில் அவன் திட்டும்போது நாம் காது கொடுத்துக் கேட்காது சென்றால் பைத்தியம் என்று நம்மைச் சொல்வார்கள்.

தியான வழியில் இருக்கும்போது சொல்வார்கள். யாராவது சொன்னாலும் கூட கொஞ்சம் கூட ரோசம் இல்லை, அவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள். ஒருவரை சரி இல்லை என்று கேட்டவுடனே அவனை உதைத்தோம் என்றால் அப்பொழுது மனிதன் என்று சொல்வார்கள்.

இந்தத் தியானவழியில் நீங்கள் சென்றால் மற்றவர்கள் சுத்தமாகவே பைத்தியம் என்று சொல்வார்கள். அடுத்தவர்கள்.., ஏதாவது சொன்னாலும் பாருங்கள், இவன் ஒன்றுமே சொல்ல மாட்டான் என்று சொல்லிவிட்டு,
சூடு சுரணை எதுவும் இல்லை,
இவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.

ஆனால், அவன் பைத்தியம் என்று அவன் உணர்வதில்லை. தான் நுகரும் உணர்வின் தன்மை தன்னை ஒரு பைத்தியக்காரனாக ஆக்குகின்றது. தன்னையறியாமலே அந்த உணர்வுகள் அவனுக்குள் செயல்படுகிறது என்று அவன் உணர்வதில்லை.

ஆனால், நம்மைப் பைத்தியக்காரன் என்பார். இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிதல் வேண்டும்.