ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2015

“வேதனை.., வேதனை..,” என்று வேதனையைச் சுவாசித்தீர்கள் என்றால் சிந்திக்கும் திறனை இழந்துவிடுவீர்கள்

ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நம் உயிர் இயக்குகின்றது.

எதை ஆசைப்படுகின்றோமோ அந்த ஆசையின் உணர்ச்சிகள் அந்த ஆசை நிறைவேறவில்லை என்றால் வேதனை என்ற நிலைகள் வருகின்றது.

அன்றாட வாழ்க்கையில் நம் சக்திக்கு மீறிய நிலைகள் ஒரு செயலைச் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வோம்?

உதாரணமாக ஒரு இடத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். பெரிய தங்கக்கட்டி கிடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் விட்டுவிட்டுச் சென்றால் அடுத்தவர்கள் எடுத்துச் சென்றுவிடுவார்களே என்று எடுக்க ஆசைப்படுகின்றோம்.

ஆனால், எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் எப்படித் தூக்கிக் கொண்டு செல்வது? நம்மால் சுமக்க முடியவில்லையே என்ற நிலை வருகிறது.

அப்பொழுது சுமக்க முடியவில்லை என்று எண்ணும்போது “ஐய்யய்யோ.., விட்டுவிட்டுப் போகின்றோமே..,” என்ற வேதனை வருகின்றது.

தங்கம் இங்கே இருக்கின்றது, ஆனால் எடுத்துக் கொண்டு போகமுடியவில்லை என்று எண்ணும்போது வேதனை வருகின்றது. அப்பொழுது என்ன ஆகின்றது? நம் சிந்திக்கும் திறன் குறைந்துவிடுகின்றது.

அந்த நேரத்தில் அதை மூடி வைக்க வேண்டும் என்ற நிலை கூட வருவதில்லை. ஆக, அதை மூடி வைக்காமல் வேறு ஒரு பொருளை எடுத்து வருவதற்காக அடுத்தவர்களிடத்தில் போய்ச் சொல்வோம்.

அடுத்தவர்களிடத்தில் சொன்னவுடன், அவர்கள் “அப்படியா..,” என்று கேட்பார்கள்.

நாம் அந்தத் தங்கக் கட்டியை எடுக்கலாம் என்று திரும்பிப் போவதற்கு முன் அவர்கள் ஆளை வைத்து எடுத்துச் சென்றுவிடுவார்கள். அப்பொழுது என்ன ஆகிறது?

“ஐய்யய்யோ நாம் பார்த்தோமே.., எடுத்துச் செல்லாமல் விட்டுவிட்டோமே” என்ற நிலை வருகிறது. இதுவெல்லாம் சந்தர்ப்பத்தால் வரக்கூடிய நிலைகள்.

நம் ஆசையின் நிலைகளில் வாழ்க்கையில் செல்லும்போது இதைப் போன்று நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்து நம்மை மோதுகின்றது.

இதிலிருந்தெல்லாம் மனிதன் விடுபட வேண்டுமா இல்லையா..?

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது? நம்மையறியாமல் தீமைகள் எப்படி வருகிறது?

அந்தத் தீமைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ளும் வழிகள் என்ன? என்பதை அறிவதற்குத்தான் அனுபவம் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதிக்குள் குறைந்தது 20 வருடம் செல்லச் செய்தார்.

அதே மாதிரி நாட்டுக்குள் வந்து கண்டுணர்ந்த அனுபவத்தால் பெற்ற தீமைகளை வென்ற பேராற்றல்களையும் பேருண்மைகளையும் உங்களுக்குள் அந்த அருள் ஞான வித்துக்களை பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றேன்.

மகரிஷிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளையும் அந்த அகஸ்தியன் நஞ்சினை வென்று துருவனாகி, துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அத்தனை நிலைகளையும் சொல்லியுள்ளேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நுகர்ந்து எடுக்க்கூடிய வழிமுறைகளையும் சொல்லியுள்ளேன்.

வேதனைகளை நீக்கிடும் ஆற்றல்மிக்க நிலைகளை 20-30 வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். நீங்கள் எத்தனை பேர் தயார் ஆகியிருக்கின்றீர்கள், அருள் வழியில் வளர்ந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

உங்கள் கஷ்டத்தை உங்களால்தான் (உங்கள் எண்ணத்தால்தான்) போக்கிக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.

உங்கள் உயிர் கடவுள், உயிரால் உருவாக்கப்பட்ட உடல் ஆலயம், நீங்கள் எதை எண்ணுகின்றீகளோ அதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குகின்றது.

வாழ்க்கையில் வேதனை வேதனை என்று அதை எண்ணிக் கொண்டிருந்தால் வேதனைப்பட்டு வாழும் விஷப் பிராணிகளாகத் தான் இந்த உடலுக்குப் பின் நம் உயிர் நம்மை உருவாக்கிவிடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆகவே, வேதனை வரும்போது அதை எண்ணாமல் எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீங்கள் நுகர்ந்தால்
அந்த்த் துருவ நட்சத்திரத்தின் மேல் இச்சைப்பட்டால்
உங்கள் உயிர் அதை உருவாக்கி
அதன் ஈர்ப்பு வட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.