ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2015

நல்லதைப் பெறவேண்டும் என்று கேட்பது உங்களுக்கு ஒரு கஷ்டமா?

தியானவழி அன்பர்களும் சரி, புதிதாக தியானத்திற்கு வருபவர்களும் சரி எம்மிடம் சொல்லும்போது கஷ்டம் கஷ்டம் என்றுதான் சொல்லிக் கேட்டு வருகின்றார்கள்.

எம்மிடம் கேட்கும் போது எப்படிக் கேட்க வேண்டும் என்று நானும் பல தடவை சொல்லிவிட்டேன்.

என் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும்,
என் குழந்தைள் நன்றாக இருக்க வேண்டும்,
என் வியாபாரம் பெருக வேண்டும்,
என் விவசாயம் செழிக்க வேண்டும்
நான் பார்ப்போர் அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்று
இப்படிக் கேட்பது உங்களுக்கு ஒரு கஷ்டமா?

தபோவனத்திற்கு எதற்கு வருகின்றீர்கள்? உங்களால் நல்லதைக் கேட்கவே முடியாதா?

எனக்கு நல்லதாக வேண்டும் என்று வாக்கைக் கேட்டால் அந்த நல்லதாக வேண்டும் என்று வாக்கைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

சாக்கடைய முன்னாடி வைத்துக் கொண்டு நல்ல மணத்தைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? நல்ல மணம் வருமோ? சாக்கடையின் மணம்தான் ஜாஸ்தி தெரியும்.

இதைப் போல நம் உடலில் முதலில் நல்லதைச் செய்யவேண்டும், நல்லதைப் பெறவேண்டும், நல்ல நிலை வேண்டும், அந்த அருள் சக்தி எனக்குக் கிடைக்க வேண்டும்.
அந்த அருள் சக்தி வேண்டும் என்று ஏங்கியிருந்தீர்கள் என்றால்
நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று
ஒரு வாக்கைக் கொடுத்தாலே அது பதிவாகும்.

என் குடும்பத்தில் ஒரே கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி சிலர் வந்தவுடனே அழுகத் தொடங்குகின்றார்கள். சாமியிடம் சென்றால் சரியாகிவிடும் என்று வந்துவிடுகின்றார்கள்.

நான் நல்ல வாக்குகளைக் கொடுக்கும்போது அதை எடுத்தால் தானே சரியாகும்.

அப்பொழுது கஷ்டத்தையே எண்ணிக் கொண்டிருந்தால் நல்லதைப் பெற முடியாதபடி அங்கே தடையாகின்றது. அப்புறம் உங்கள் உடலுக்குள் நல்லது எப்படிப் போகும்?

நீங்கள் கேட்கும் உணர்வு என் உடலுக்குள் வந்து எனக்கே எரிச்சல்தான் வரும். எரிச்சல் கலந்த உணர்வைத்தான் உங்களுக்குக் கொடுக்க நேரும்.

நீங்கள் ஒருவரிடம் அடிக்கடி இதே மாதிரி கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டேயிருங்கள். அதைக் கேட்டு அவர்களுக்கு எப்படி எரிச்சல் வருகின்றது என்று பாருங்கள்.

அப்பொழுது நீங்கள் சொல்வதை அங்கே அவரால் எடுக்க முடியுமோ? முடியாது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் என்ன செய்யவேண்டும்? தபோவனத்திற்கு எதற்காக வருகின்றீர்கள்?

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,
எங்கள் உடல் நலம் பெறவேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்,
எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படரவேண்டும், என்னிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர்கள் குடும்பம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்று பொருள் எடுத்துக் கொடுக்கும்போது இவ்வாறு பிரார்த்தனை பண்ணிக் கொடுங்கள்.

இப்படிச் செய்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிடம் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் வாழ்க்கையே தியானம். நல்லதே உங்கள் வாழ்க்கையில் தியானமாகின்றது.

என்னை இப்படிப் பேசினானே, இப்படிப் பேசினானே என்று வேதனைப்படும்போது வெறுப்பும் வேதனையும்தான் விளையும் இதுவும் தியானம்தான்.

வீட்டில் பையனை எண்ணி அவன் சேட்டைக்காரனாக இருக்கின்றான், குறும்புத்தனம் செய்து கொண்டேயிருக்கின்றான் என்று இப்படிச் சொல்லக் கூடாது.
அவன் அறிவுள்ளவனாக வருவான்,
தெளிந்தவனாக வருவான், உலகை அறிவான்
அந்த நிலை பெறுவான் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

ஏனென்றால், சிறு வயதில் அவனுடைய பதிவுகள் அவன் எதன் மேல் ஆசைப்படுகின்றானோ அதன் நிலையே இயக்கும். அப்பொழுது அந்த ஆசையைத் திருப்ப வேண்டும் என்றால் நாம் இது மாதிரிச் செய்யவேண்டும்.

அடிக்கடி இதை அவன் செவிகளில் படும்படி இதைச் சொன்னால் அவனுக்குள் பதிவாகின்றது. அதன் வழி அவன் அருள் வழியில் வளர்ந்து வருவான்.

வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிலையிலும் இப்படி நல்லதாக வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழகவேண்டும். நமக்குள் வரும் பல கோடி உணர்வுகள் ஒன்றாகி ஒளி என்ற உணர்வானால் தனுசுகோடி.

இந்த உடலுக்குப்பின் யாருடையந் ஈர்ப்பிலும் சிக்காது ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலை அடைய முடியும். அழியா ஒளிச் சரீரம் பெறமுடியும். இதுதான் “கல்கி”.


அந்த நிலை பெற்றதுதான் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்ட்த்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும். உங்களை அந்த எல்லைக்குத்தான் அழைத்துச் செல்கிறோம். அதற்கே இந்த உபதேசம்.