ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2015

நாம் இயங்குகிறோமா? நாம் நுகரும் (பிறிதொரு) உணர்வு நம்மை இயக்குகிறதா?

ரொம்பவும் வாடிப் போயிருக்கின்றீர்கள். தீடீரென்று ஒரு இலட்சம் ரூபாய் லாட்டரிச் சீட்டில் பரிசு விழுந்தால் உங்களை எத்தனை குதி குதிக்க வைக்கின்றது.

நீங்கள் குதிக்கின்றீர்களா, அது குதிக்க வைக்கின்றதா?

அதே சமயத்தில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளீர்கள். உங்களுக்குப் பரிசு விழுகவில்லை, பக்கத்துக்கு நம்பருக்குப் பரிசு விழுந்திருக்கிறது அப்பொழுது என்ன செய்வீர்கள்?

“ஒரு நம்பரில் போய்விட்டதே.., ஒரு நம்பரில் போய்விட்டதே..,” என்று உங்களை அறியாமல் எத்தனை வேதனைப்படுகின்றீர்கள்?

நான் (ஞானகுரு) மில்லில் வேலை பார்க்கும்போது லாட்டரி சீட்டுகளையெல்லாம் கூப்பன் மாதிரி கொடுத்தார்கள்.

நான் மில்லில் மேஸ்திரியாக வேலை பார்த்ததால் எனக்கு ஒரு (அந்தக் கூப்பன்) புஸ்தகத்தைக் கொடுத்து வேண்டியவர்களுக்கெல்லாம் கொடு என்று அங்கே உள்ள கேஷியர் கொடுத்தார்.

நான் வாங்கி என்ன செய்தேன்? நான் ஒரு மூன்று பேருக்கு வரிசையாக ஒவ்வொரு சீட்டாகக் கொடுத்தேன். அப்பொழுது என்ன ஆகிவிட்டது?

மத்தியில் உள்ள நம்பர் சீட்டு வைத்திருந்தவருக்கு பத்தாயிரம் பரிசு விழுந்துவிட்டது. அவருக்கு “குஷி” தாங்க முடியவில்லை.

பரிசு விழுகாதவருக்கு (முந்தின நம்பர்) என்ன ஆனது? இரவு முழுவதும் தூக்கம் போய்விட்டது. ஒரு நம்பர் போய்விட்டதே.., ஒரு நம்பர் போய்விட்டதே.., ஒரு நம்பர் போய்விட்டதே என்று அவர் வேலைக்கே வரவில்லை.

இன்னொருவர் (அடுத்த நம்பர்) என்ன செய்கிறார்? “எனக்கும் ஒரு நம்பர் போய்விட்டதே.., ஒரு நம்பர் போய்விட்டதே.., என் அதிர்ஷ்டம் பாருங்கள் ஒரு நம்பர் போய்விட்டதே..,”  என்று இதைச் சொல்லிக் கொண்டு அந்த நிலையிலே தான் இருக்கின்றார். 

அப்பொழுது அந்த உணர்வுகள் என்ன செய்கின்றது? எந்த உணர்வை நுகர்கின்றோமோ அதன் வழி தான் இயக்குகின்றது.

சந்தோஷமாக இருக்கும்போது சீதாலட்சுமி அந்தக் குணத்தை வளர்க்கக்கூடியதாக இருக்கின்றது.  

அதனால் தான் அந்த உணர்வுகளை நுகர்ந்தபின் நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான். எந்தச் சுவையோ அந்த எண்ணங்களாகத் தோன்றுகின்றான்.

அதாவது திரேதா என்றால் சரீரம். சூரியனின் காந்த சக்தி பூமி வெளிப்படுத்தும் ஒவ்வொரு மணத்தையும் கவர்ந்து சீதாலட்சுமியாக இருக்கின்றது. சீதா என்றால் சுவை, ராமன் என்றால் எண்ணங்கள்.

ஆகவே ஒரு உடலுக்குள் நுகரப்படும்போது சீதாராமனாக சுவையின் உணர்ச்சியை ஊட்டி அந்த எண்ணங்களாகத் தோன்றுகின்றது.

ஒருவர் கோபப்படுவோரின் உணர்வும் அதுவும் சுவைதான். சீதா. அதன் வழிப்படி கோபபடுவோரின் உணர்வைக் கண்ணில் பார்க்கின்றீர்கள்.
கண்களில் உள்ள கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது.
கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் ஆன்மாவாக மாற்றுகின்றது,
உயிரில் படுகின்றது, “சுரீர்..,” என்று கோபம் வருகிறது.

அவன் கோபப்படுகின்றான் என்பதை கண் தெரியப்படுத்துகின்றது. ஆனால், உயிரில் பட்டவுடன் அந்த உணர்வுகள் அந்தக் கார உணர்ச்சிகள் நரம்பெல்லாம் “டைட்” ஆகிவிடுகின்றது.

நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள். கோபப்படுவர்களைப் பார்த்தவுடன் உங்கள் நரம்புகளெல்லாம் “டைட்” ஆகின்றது. நீங்கள் “டைட்” செய்கின்றீர்களா? அல்லது நீங்கள் நுகர்ந்த உணர்வு அந்த மாதிரி மாற்றுகிறதா?

அப்பொழுது நம் வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகளே உணர்ச்சிகளைத் தூண்டி இரத்த நாளங்களில் கலந்துவிடுகின்றது. அதிக நேரம் கோப உணர்வை எடுத்துவிட்டோம் என்றால் அந்த எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடுகிறது.

ஆக அந்தக் கார உணர்வு வரும்போது அதைத்தான் நமக்குள் அதிகமாக எடுக்க நேருகிறது.
யாரைப் பார்த்தாலும் நமக்குத் திடீரென்று கோபம் வரும்.
எதைச் சொன்னாலும் இந்த உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவோம்.

சில பேரைப் பாருங்கள் எதை எடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். சொல்வதற்கு முன்னாடி முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக் கொண்டு அதைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அந்த உணர்ச்சிகள் இதைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்.  அப்பொழுது எது இயக்குகின்றது?

நாம் நுகரும் உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது. இதையெல்லாம் நாம் நமது வாழ்க்கையில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.