ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2014

இறந்தவர்களின் மரபணுக்கள் உடலுக்குள் வந்து இயங்கும் நிலைகள்

ஒரு ஆவியின் தன்மை வெறுப்பின் தன்மை கொண்டு வரும் பொழுது, பழி தீர்க்கும் உணர்வாக “பார்., செத்தாலும் உன்னை நான் விட மாட்டேன்” என்ற எண்ணத்தில் ஒரு உடலுக்குள் வருகின்றது.

ஆனால், பழி தீர்த்தாலும்
அந்தக் கஷ்டத்தைத்தான் அதுவும் படுகின்றது.

இதைப் போன்றுதான் ஒரு சாப அலையின் உணர்வு அங்கே தொடர்ந்தால், அந்தக் குடும்பத்தில் இரண்டாவது, மூன்றாவது தலைமுறைக்குக்கூட இந்த மரபணுக்கள் வந்து வேலை செய்கின்றது.

ஆனால், இவர்கள் தவறு செய்யவில்லை. அந்த மரபணுக்களை மாற்றவேண்டும் என்றால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து, என் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அதைப் பெறவேண்டும் என்று செய்தால்தான் இந்த சாப அலைகளைத் தடுக்க முடியும்.

ஏனென்றால், மந்திரம் சொல்லியோ,
தந்திரம் செய்தோ யாகத்தைச் செய்தோ
பாவத்தைப் போக்க முடியாது.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துத்தான் அதை மாற்றமுடியும்.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில் ஒருவர் இரத்தக் கொதிப்பால் இறந்து போயிருப்பார். அந்த மரபணுக்கள் அடுத்து அவர் வீட்டில் உள்ள வாரிசுகளுக்கும் இரத்தக் கொதிப்பு வருவதைப் பார்க்கலாம்.

இதே மாதிரி சில குழந்தைகளுக்குச் சர்க்கரைச் சத்து வருகின்றது. குழந்தை தவறு செய்யவில்லை. பிறப்பிலிருந்தே இப்படி வருகின்றது. இதே மாதிரி காக்காய் வலிப்பு நோயும் வருகின்றது. இதெல்லாம் அந்த மரபணுக்களின் தொடர் வரிசை தான்.

ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தை ஊமையாகிவிடுகின்றது. அந்த மரபணுக்கள் எந்தக் குடும்பத்திலிருந்து சேர்கின்றதோ, அதே மாதிரி ஊமையான குழந்தைகளே பிறக்கின்றன.

சில சாப அலைகள் அதாவது, உன் குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என்று விட்டிருந்தால், பிறக்கும் குழந்தை பேச முடியாது. ஆனால், எச்சில் ஒழுகிக் கொண்டேயிருக்கும். கை கால் வராது. சிந்தனை இருக்காது.

இதன் உணர்வுகள் அங்கே எடுத்துக் கொண்டால், அந்த மரபணுக்கள் அந்தக் குடும்பத்தில் யாராவது ஒருவர் வீட்டில் வந்து கொண்டேயிருக்கும்.

ஒரு சில குடும்பத்தில் இந்த சாப அலைகளால் இனம் புரியாதபடி வீட்டில் தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும்.
செல்வம் இருக்கும்
ஆனால், நிம்மதி என்பது இருக்காது.

ஆகவே, இதைப் போன்ற மரபணுக்களின் இயக்கங்களிலிருந்து நாம் மீளவேண்டுமென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

இதையெல்லாம் வென்றவன் அகஸ்தியன். அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, ஒளி சரீரமாக துருவ நட்சத்திரமாக உள்ளான்.  

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வை நாம் நுகர்ந்து, நம் உடல் முழுவதும் படரச் செய்து, நம் உடலுக்குள் அதை விளையச் செய்ய வேண்டும்

இப்படிச் செய்து பழகிக்கொண்டால்,
வாழ்க்கையில் வரும் தீமைகளை
உடனே அகற்ற இது பயன்படும்.
அந்த நிலையை நீங்கள் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம்.