நமது உயிரணு
பல கோடி உடல்களைப் பெற்று, அவ்வுடல்களில்
உள்ள தீமைகளை நீக்கி, நீக்கி, இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளது.
சூதாடுவது, தீமை என்று தெரிகின்றது. ஆனால், சூதாடப் போகின்றோம்.
சூதாட்ட
விளையாட்டில் தோற்கத் தோற்க,
விளையாட்டில்
இழந்த பணத்தைப் பிடித்துவிடலாம் என்று
திரும்பத் திரும்ப விளையாடி
எல்லாவற்றையும் இழந்து விடுகின்றோம்.
இதற்கு
உதாரணமும் ஒன்று, குருநாதர்
எமக்கு அனுபவப்பூர்வமாகக் காண்பித்தார்.
ஒரு பால்
வியாபாரி, அடிக்கடி எம்மை வந்து
சந்திப்பார். யாம், குருநாதருடன்
சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில், அந்தப் பால்
வியாபாரி எம்மிடம் வந்து, “குருதேவரிடம்
ஏதோ சக்தி இருக்கிறது என்று, ஊரில்
பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்கின்றார்கள். சற்குருதேவர் எனக்கு ஒரு ஆசீர்வாதம்
கொடுத்தால் போதும்” என்று, யாம் தனித்து இருந்த நேரத்தில் வந்து
கூறினார்.
“என்ன
ஆசீர்வாதம் வேண்டும்?” என்று பால் வியாபாரியிடம் கேட்டோம்.
அதற்கு பால்
வியாபாரி, “நான் சீட்டு விளையாடியதில்
என்னிடம் இருந்த எல்லா பணமும் போய்விட்டது, வேறு வழி இல்லை, இந்தச் சைக்கிளை வைத்து விளையாடலாம் என்று பார்க்கின்றேன்.
இதுவும்
போய்விட்டதென்றால், பால்
எடுத்து விற்பதற்கு வழி இல்லை. ஆகவே, குருதேவரிடம் சொல்லி நான் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பதற்கு ஆசீர்வாதம் வாங்கிக்
கொடுங்கள்” என்று கூறினார்.
மறுநாள், குருநாதரின் அருகில் யாம் இருக்கும் பொழுது, பால் வியாபாரி எம்மிடம் வந்து, “அண்ணே, குருநாதரிடம்
அந்த விபரம் கூறினார்களா?” என்று
கேட்டார்.
“பால்
வியாபாரி கேட்டதை, ஏன் என்னிடம்
சொல்லவில்லை?” என்று
குருநாதர் எம்மைக் கேட்டுவிட்டு, “நீ
(பால் வியாபாரி) ஜெயித்து வா என்று ஆசீர்வாதம் கொடு” எம்மை பார்த்து, “அவனுக்கு ஆசீர்வாதம் கொடு” என்று கூறினார் குருநாதர்.
யாம்
அவ்வாறே, பால் வியாபாரியை ஆசீர்வாதித்த பின்.
அவர் சீட்டு விளையாடச் சென்றார். சீட்டு விளையாட்டில் பால் வியாபாரி
ஒரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்தார்.
சீட்டு
விளையாட்டில் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தவுடனே, பால் வியாபாரி, எமக்குப் புது வேஷ்டி, புதுச் சட்டை, பெட்ஷீட் வாங்கி வந்தார்.
குருநாதர், வெறும் கோவணத்துணிதான் கட்டியிருந்தார்.
எனவே அவருக்கு படுத்துக் கொள்ள பெட்ஷீட் இல்லையாம். அதனால், அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கி வந்திருந்தார், பால் வியாபாரி.
குருநாதர்
அதை வாங்கி தார்தாராகக் கிழித்தெறிந்தார்.
சீட்டு
விளையாட்டில், ஓரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்ததும், பால் வியாபாரிக்கு மேலும் ஆசை வந்துவிட்டது. இன்னும் பத்து நாளைக்கு
விளையாடினால், தான் பெரிய
பங்களாவே, காரே வாங்கி
விடலாம்” என்று
திட்டமிட்டார்.
பால் வியாபாரி, அன்று ரூபாய் 25,000 தான் சம்பாதிக்க முடிந்தது. அதையும் இங்கே கொண்டு வந்து
செலவழிக்கின்றார். எங்களுக்குத்
துணிமணியும், பெட்ஷீட்டும். வாங்கிக்
கொடுத்துவிட்டு, அவருடைய
நண்பர்களுக்கெல்லாம், “நீ காபி
சாப்பிடு, நீ காபி சாப்பிடு” என்று கூறி, அதில் ரூபாய் 5,000 வரை
செலவழித்தார், 20,000 ரூபாய் மிச்சம்.
பால்
வியாபாரி கொடுத்த பெட்ஷீட்டை, குருநாதர்
கிழித்து எறிந்துவிட்டு, “பால்
வியாபாரியினுடைய ஆசை எதிலே போகின்றது? ஜெயிக்க வேண்டும் என்று கேட்டான். அதைக் கொடுத்தபின்,
இவன் ஆசை எங்கே போகின்றது பார்?
ஏதோ ஜெயித்துக்
கொடுத்தால்,
இனி சீட்டு
விளையாடப் போகமாட்டேன் என்று தானே
கூறினான்.
இழந்த
பணத்தைச் சம்பாதித்தான், ஜெயித்த
பணத்தை அனாவசியமாகச்
செலவழிக்கின்றான், உனக்கும்
எனக்கும் வேறு வாங்கிக் கொடுத்திருக்கின்றான். நாளை எப்படி
வருவான் பார்?” என்று கூறினார்.
மறு நாள், பால் வியாபாரி சீட்டு விளையாடி, தன்னிடம் இருந்த சைக்கிளும் போய்விட்டது. பால் வியாபாரி
எங்களிடம் வந்து, “என்ன சாமி
இப்படி ஆகிவிட்டது” என்று
கேட்டார். முதலில் ஆசி கொடுத்து ஜெயித்த பின், அவரின் ஆசை சீட்டு விளையாட்டின் மீதுதான் போகின்றது.
இப்படி
சமுதாயத்தில் மனிதர் சூதுகளில் ஆசையை வளர்த்துக் கொள்ளும் பொழுது, “போதும்” எனும் மனம்
வருவதில்லை.
நம்முடைய
தொழிலை முன்னேற்றி
பொருளைச்
சம்பாதிக்கலாம் என்ற நிலையும் இல்லை.
இப்படி, சந்தர்ப்பங்கள் எப்படி வருகின்றது என்று
அந்த இடத்தில் குருநாதர் காண்பித்தார்.
குருநாதர் சாதாரணமாக விடவில்லை. ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள்
எப்படி இயங்குகின்றது? அதிலிருந்து நீ
எப்படித் தப்புவது? என்று அங்கு அனுபவபூர்வமாகக் காட்டினார்.