ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 25, 2014

பேயை ஒட்டுவதாகச் சொல்லி எப்படி ஏமாற்றுகின்றார்கள்?

1. ஆடு கோழிகளை வாங்கிக் கொள்கின்றனர்
ஒரு மந்திரவாதி, அவன் என்ன செய்தான்? நான் பேயோடு பேசுகின்றேன் என்று சொல்லிக் கொண்டு ஆடு, கோழி எல்லாம் காவு கொடுத்து சுடுகாட்டில் போய் “பேயை அடக்குகிறேன்., பாருங்கள்” என்றான்.

அப்படிச் சொல்லி குழியைத் தோண்டச் செய்தான். இரவு நேரத்தில் பெட்ரமாஸ் லைட் கொண்டு வைத்து, கோழி, ஆடு எல்லாம் கொண்டு வரச் சொல்லிவிட்டான்.

குழியைத் தோண்டும் பொழுது, “அது கேட்கும்”. அப்பொழுது உடனே நீங்கள் கோழியைக் கொடுத்துவிட வேண்டும் என்றான்.

குழியைத் தோண்டுகின்றார்கள்.

திடீரென்று, மந்திரவாதி பேய் மாதிரி கத்துகிறான். “ம்.., அடக்கிப்புடும், அய்யய்யோ.., என் கழுத்தை நெரிக்கிறதே… ஒரு ஆடு கொண்டாங்க, ஆட்டை வெட்டுங்கள்” என்று கத்துகின்றான்.

வெட்டியவுடனே, “உட்டுரும், போயிரும்” என்கிறான்.

இதெல்லாம் என்ன? எந்த வகையிலே என்ன செய்கின்றான் என்று பார்ப்பதற்காக நான் அங்கே போனேன்.
போய் அங்கே மறைந்திருந்தேன்.
முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மந்திரவாதி என்ன செய்கின்றான்? திரும்பத் திரும்ப ஆட்டைக் கொண்டு வா, கோழியைக் கொண்டு வா என்கிறான். இதெல்லாம் நடந்த பிற்பாடு, “ஆகிவிட்டது” என்று சொல்லிவிட்டு “இதைப் பகைத்துக் கொண்டேன்” என்கிறான்.
2. பாஸ்பரசைக் காண்பித்து, பேய் ஓடிவிட்டதாகக் காண்பிக்கின்றான்
அடுத்து என்ன செய்கின்றான் தெரியுமா! ஒடைக்காய் இருக்கிறது அல்லவா! அதற்குள் பாஸ்பரஸ் (WHITE PHOSPHORUS) போட்டு வைத்திருக்கின்றான் (மற்றவர்களுக்குத் தெரியாமல்).

அதை எடுத்துப் போட்டவுடனே, “போகுது பார், போகுது பார்” என்று காண்பிக்கின்றான். ஏனென்றால், பாஸ்பரஸ் போட்டால் அதிலிருந்து வெண்புகையாக வெளிச்சமாக வரும்.
 
அதைக் காண்பித்து, ஓடியே போய்விட்டது, தப்பித்து ஓடியே போய்விட்டது, பேய் ஓடுது பார்..!” என்கிறான் மந்திரவாதி.

ஆக, இந்த மாதிரி சமுதாயத்தில் மேஜிக் வேலை பார்த்து காசுக்காக வேண்டி இப்படி நாட்டுக்குள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால், மக்களுக்குக் கஷ்டம் வந்தது என்றால்,
“அங்கே போ, இங்கே போ
அதைச் செய், இதைச் செய்” என்று சொல்லி
ஏமாற்றித்தான் காசை வாங்குகின்றார்களே தவிர,

அந்த உண்மையின் நிலையில் ஏதாவது செய்கின்றார்களா என்றால் ஒன்றுமே இல்லை.