ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2015

அதிகாலையில் விழித்தவுடனும், இரவு படுக்கும் பொழுதும் உங்கள் நினைவு எங்கே இருக்கவேண்டும்?

அதிகாலையில் விழித்தவுடன் உங்கள் நினைவு எங்கே இருக்கவேண்டும்?

உங்கள் உயிருடன் ஒன்றி இருக்கவேண்டும்.

அம்மா அப்பாவை முதலில் நினையுங்கள். புருவ மத்தியில் நினைவை வைத்து உயிருடன் தொடர்பு கொண்டு துருவ நட்சத்திரத்தை எண்ணிப் பழக வேண்டும்.

கண்களைத் திறந்த நிலையிலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதும் படரவேண்டும், உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படரவேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

திருப்பித் திருப்பி 5 தடவை இதைச் சுழற்றுங்கள். பின் கண்களை மூடி உடலுக்குள் இதைக் கலந்து பழக வேண்டும். இதுதான் ஆத்ம சுத்தி.


கணவன் மனைவிக்கு அந்த சக்தி பெறவேண்டும் என்றும், மனைவி கணவனுக்குப் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் இரண்டு பேரும் செலுத்திப் பழகவேண்டும்.

எங்கள் அம்மா அப்பா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். எங்களுக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மாறவேண்டும், அவர்கள் மகிழ்ந்து வாழவேண்டும்.

அவர்கள் அருள் என்றுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் இப்படி இணைத்துப் பழகவேண்டும்.

எங்கள் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். உணமையின் உணர்வை அறியும் அருள் சக்தியும் உலக ஞானமும் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணிப் பழகவேண்டும்.

எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று ஆன்மாக்களை விண் செலுத்திப் பழகவேண்டும்.

உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று, அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெறவேண்டும் என்று தவம் செய்து பழக வேண்டும்.

இரவு படுக்கப் போகும்போதும் இதே மாதிரி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று என்ணிக் கொண்டே இருந்தீர்கள் என்றால்
அப்படியே தூக்கம் வந்துவிடும்.
ஆனந்த நிலையாக இருக்கும்.

மான் புலியைப் பார்த்து,
எப்படி மானின் உணர்வு புலியாக ஆனதோ
இதைப்போல, அருள்ஞானிகளின் உணர்வை நீங்கள் எடுத்துப் பழகிக் கொண்டால், அவர்கள் எப்படி ஒளியின் சரீரம் ஆனார்களோ 
நிச்சயம் அந்த உணர்வை வளர்த்தால் ஒளியின் சரீரம் ஆகின்றீர்கள். எமது அருளாசிகள்.

January 25, 2015

ரிஷியின் மகன் நாரதன் - அவன் கலகப்பிரியன், கலகமோ நன்மையில் முடியும்

நாராயணன் இராமனாகப் பிறக்கின்றான் என்று வான்மீகி கதை எழுதியதாக இவர்கள் சொல்கிறார்கள். இராமன் எப்பொழுது பிறந்தான்? இராமன் நவமியில் பிறந்தான் என்று காவியத்தைத் தொடர்கின்றான் வான்மீகி.

ஆனால், அதே சமயம் இன்று இராமாயணக் காவியம் எழுதியவர்களோ நாரதன் விண்ணிலிருந்து வந்து இறங்கி வேடனான வான்மீகி கடும் ஜெபமியற்றிக் கொண்டிருக்கும் பொழுது, இவன் காதிலே ஓதினான், “ராமா, ராமா, ராமா, ராமா” என்று.

அப்பொழுது நாராயணன் தன்மையை இன்னொரு பக்கம் வந்து இன்னொரு பிறவி எடுக்கப் போகிறான் என்று இவர்கள் காவியக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். இது கதை.

புராணம் என்பது மெய்தான். ஆனால், மெய்யுக்குள் உணர்வின் தன்மை உணர்த்துவதற்கு அந்த மெய்ஞானி வான்மீகி எழுதியிருந்தாலும், பிற்காலத்தில் அதைக் கதையாக எழுதிவிட்டார்கள்.

ஆக மனித வாழ்க்கைக்கு ஒத்த நிலைகளில், வான்மீகி எழுதிய தத்துவத்தை ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கைக்குத் தக்கவாறு, அரசனுக்கு ஏற்றவாறு காவியங்களைத் திருத்தி எழுதிக்கொண்டார்கள்.

நாராயணன் என்பது சூரியன். சூரியன் எவ்வாறு பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கின்றதோ, இதைப்போல ஒரு மனிதன் உடலுக்குள் பிரபஞ்சம்,

சூரியன் எப்படி ஒரு சூரியக் குடும்பமாகி ஒரு பிரபஞ்சமாகின்றதோ, இதைப்போல்தான் நம் உயிரின் தன்மை சூரியனாகி
இந்த விண்ணுலகத்தின் ஆற்றலை
தான் எடுத்துக்கொண்ட உணர்வு அனைத்துமே இந்த சரீரமாகி,
இந்தச் சரீரத்திற்குள் தான் எடுத்துக் கொண்ட
உணர்வின் அணுகொண்டு இயக்கம்,
அணுதிசுவுக்குள் இயக்கக்கூடிய அந்த அணுவின் ஒளியின் தன்மை.
அந்த ஒளியின் தன்மைகள் நட்சத்திரங்களாகி
அதனின் ஆற்றல்கொண்டு இந்த உடலே ஒரு பிரபஞ்சம்.

ஆதியிலே நாம் இப்பொழுது காணும் சூரியனோ, நட்சத்திரங்களோ, கோள்களோ இல்லாத நிலையில், ஆதிசக்தி ஆவியாக இருந்தது என்ற நிலையை, இயற்கையின் பேருண்மைகளை அந்த மெய்யைத் தனக்குள் அறிந்துணர்ந்தவன் நம் பூமியில் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன்.

அவன் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய அந்த அணுதான் நாரதன்.
ரிஷியின் மகன் நாரதன்.
நாராயணின் அபிமான புத்திரன்.

ஆக நாராயணனின் அபிமான புத்திரன். இந்தப் பிரபஞ்சத்தை இயக்கப்படும்போது ஒரு உயிரான, உயிரின் தன்மை கொண்டு உடலை இயக்கக்கூடிய அந்த ரிஷியின் தன்மை அவன் ஒளியாக மாறினாலும், அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு ஒளியும் இங்கு ஒரு பிரபஞ்சத்தை இயக்கக்கூடிய ஆற்றல் பெற்றது.

ஆக, ஒளிகொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் ஆற்றல் பெற்றது என்ற நிலையைக் காட்டினான்.

நமது உயிரும் நட்சத்திரம். ஆனால் நம் உடலுக்குள் இருப்பது சூரியன். சூரியனோ ஒரு பிரபஞ்சத்துக்கு சூரியன், பேரண்டத்திற்கு அது நட்சத்திரம். இதைப்போன்று இந்த பேருண்மையினுடைய நிலைகளை அன்று மெய்ஞானிகள் உணர்த்தினார்கள்.

மெய்யுணர்வைக் கண்ட அந்த நாரதன் அதாவது, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவந்த அந்த உணர்வின் தன்மை வான்மீகியின் ஈர்ப்பலைகளுக்குள் சிக்குகின்றது.

அதாவது ரிஷியின் மகன் நாரதன். நாரதனோ கலகப்பிரியன். அவனுடைய கலகமோ நன்மையில் முடியும்.

எந்தெந்தப் பேராசை கொண்டு தன் வாழ்க்கையில் எதையெல்லாம் செயல்படுத்த வேண்டுமென்று வான்மீகி எண்ணினானோ,
அவனுக்குள் அந்த மெய்யுணர்வின் அலைகள் வரப்படும்போது,
இவன் ஆசைகள் எல்லாம் கலகமாகின்றது.
செய்த தவறையெல்லாம் அவனுக்குள் சிந்திக்கச் செய்கின்றது.

அவ்வாறு தனக்குள் செய்த சிந்தனையின் தன்மையின் உண்மையைத்தான் அவன் உணர்ந்தறிந்தான். அதனால்தான் நாரதன் ஒரு கலகப்பிரியன் அவன் கலகமோ நன்மையில் முடியும் என்றார்கள்.

தன் உடலுக்குள் சேர்த்துக்கொண்ட உணர்வின் ஆற்றலை தான் எதைப் பதிவு செய்தானோ அதை அப்பொழுது இராமாயணமாக அந்த வான்மீகி எழுதுகின்றான்.

துருவ நட்சத்திரம் எந்த வழிகளிலே அது ஒளியாக மாறியதோ,
அந்த உண்மையின் ஆற்றல் பூராவுமே
வான்மீகியின் உடலுக்குள் நின்று அது வெளிப்படுத்தியதுதான்
இராமாயணக் காவியம்.

January 24, 2015

அருள்ஞானப் பொக்கிஷமாக உங்களுக்குள் இப்பொழுது படைக்கப்படுகின்றது - ஞானகுரு

இன்று நாம் உணவாக உட்கொள்ளும் சாப்பாட்டில் அரிசி பருப்பு என்று வரப்படும்போது சுவையாக இருக்கின்றது. ஆனால், நெல் அரிசிக்குப் பதிலாக ராகியும் சோளத்தையும், கம்பையும் சேர்த்துச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

உணவிற்கு சுவையைக் கூட்ட குழம்பைக் கூட்டி அதைச் சுவையாக மாற்றுகின்றோம். அரிசி, பருப்பு, கம்பு, சோளம் எல்லாவற்றையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்ன ஆகும்.
அரிசி வகையிலும் எத்தனையோ வகை உண்டு.
ஒன்று சீக்கிரம் வேகும். மற்றொன்று வேகாது.

இதைக் கலந்துவிட்டு நான் ருசியாக்கிவிடுவேன் என்றால் ருசியாகுமா? பகுதி வெந்திருக்கும். பகுதி வேகாதிருக்கும்.

ஆகவே, நாம் எதை எப்படிச் சமைக்க வேண்டும்.
சமைக்கும் பக்குவத்தை அறிந்துணர்ந்து செயல்படுத்த வேண்டும்.

அதைப் போன்று நமது வாழ்க்கையில் எத்தனையோ குணங்கள் கொண்ட உணர்வுகளைப் பார்க்கின்றோம், சுவாசிக்கின்றோம். அது அனைத்தும் அணுக்களாக மாறி நம் உடலாக மாறுகின்றது.

அதில் தீமை செய்யும் அணுக்களை நீக்கிவிட்டு நல்லவைகளை வளர்க்க வேண்டும்.

ஆக, தீமைகளை வேக வைத்து நீக்கிடவும்
நல்ல உணர்வுகளைக் காத்திடவும்
ஆற்றல் மிக்க சக்தியாக அருள்ஞானப் பொக்கிஷமாக
இப்பொழுது உங்களுக்குள் படைக்கப்படுகின்றது.

இந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அரும்பெரும் சக்தியாக உங்களுக்குள் உருவாக்க இது உதவும். காலம் வரும்போது இந்தப் பொக்கிஷத்தைப் பயன்படுத்துங்கள்.

செல்வத்தைச் தேடி வைத்திருந்தால் நோய் என்று வரும்போது நோயை சீக்கிரம் விரட்டிவிடலாம்.
செல்வம் இருக்கும் பொழுது தாராளமாகச் செலவழித்து விட்டால்
நோய் வரும்போது என்ன செய்வது?

கால நேரம் இல்லையென்றால் தவிக்கின்றோம். செல்வத்தைத் தேட வேண்டும் என்று நினைத்து பிறரை இம்சித்து, செல்வத்தைத் தேடினாலும் செல்வத்தை எடுத்துச் சுவைக்கும் தன்மை இழந்துவிடுகின்றது. இதையெல்லாம் நாம் சிந்தனை செய்தல் வேண்டும்.

ஆகவே, அருள் ஒளி கொண்டுதான் இந்த உடலைச் சுத்தப்படுத்த வேண்டும்.

ஆனால், செல்வத்தைக் கொண்டு நறுமணங்களை வைத்து என் உடல் சுத்தமாக இருக்கின்றது என்றால் நம் உணவாக உட்கொள்ளும் உணர்வுக்குள் மறைந்துள்ள நிலை பிறருக்குத்தான் மணமாகும்.

நமக்குள் இருக்கின்ற உணர்வு நோயாகும்.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து மீண்டிட நம் குரு காட்டிய அருள் வழிப்படி தியானத்தின் நிலை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு கண் வழி துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உள்ளே செலுத்தி தீமையை அகற்றும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆக, நாம் என்றுமே பேரருளுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும். துரித நிலை கொண்டு உங்களை உருவாக்க வேண்டுமென்றுதான் இதைச் செய்வது.

January 23, 2015

தீமைகளை அகற்றும் அழுத்தத்தின் அளவு கோல் - அருள் உணர்வுகள்

குழந்தைப் பருவத்தில் - வளரும் குழந்தையைப் பாருங்கள். 

தவறு செய்பவர்களுடைய தவறுகளை முதலில் நுகர்கின்றான். தவறு செய்யும் உணர்வுகள் வளர்ச்சியாகும் பொழுது தவறு இன்னது என்று அறிந்து தவறிலிருந்து விடுபடுகின்றான்.

குழந்தைகளில் யார் சேஷ்டை செய்கின்றார்களோ வனே குற்றத்தைச் செய்வான்.
அவன் வளர்ச்சிடையும் பொழுது
வனே குற்றத்தை அறிகின்றான்.
குற்றத்திலிருந்து விடுபடுகின்றான்.

அதே சமயத்தில் சாந்தமாக ஒருவன் இருப்பான். மற்றவர்கள் செய்கின்ற தவறுகளைக் கேட்டுக்கொண்டிருப்பான். இந்த உணர்வின் அழுத்தங்கள் அதிகமானபின் நாம் அவனை நல்லவனென்று நினைப்போம். ஆனால் அவன்தான் கெட்டவனாக இருப்பான்.

கைக்குழந்தைகள் நடமாடும் நிலை வரும்பொழுது நல்லவனாக இருப்பான்.
குழந்தையாக இருந்தபொழுது நல்லவனாக இருந்தான்,
இப்பொழுது இப்படி இருக்கின்றான் என்று சொல்லுவார்கள்.

குழந்தையாக இருந்த பொழுது சுட்டித்தனமாக இருந்தான்.
இப்பொழுது எவ்வளவு அமைதியாக இருக்கின்றான் பார் என்று
அவன் மேல் மகிழ்ச்சி வரும்.

ஏனென்றால், உணர்வால் அறிய அனுபவமாக குற்றங்களை எதிர்ப்பார்த்து அதிலிருந்து மீளும் வலிமை பெறுகின்றான். வளர்ச்சிபெறும் பொழுது அவன் வாழ்க்கையில் காக்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

இந்த இயற்கையின் உண்மைகளை நீங்கள் அறியலாம்.

யாம் உபதேசிக்கும் இந்த சந்தர்ப்பம் அருள்ஞானத்தை உங்களுக்குள் உருவாக்கும் சந்தர்ப்பம். மூலாதாரத்தில் மூண்டெழும் கலை காலம் அறிந்துதான் இந்தப் பருவத்தில் உங்களுக்குள் செலுத்துகின்றேன்.

ஏற்புடையோர் உணர்வின் தன்மை ஏற்றுக்கொள்கின்றது. அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் ஏற்கப்பட வேண்டும்.

அது உங்களுக்குள் வளர்ச்சி பெற வேண்டுமென்ற நிலைகள் கொண்டுதான் உங்கள் சிந்தனையில் தியானமாகக் கொண்டு வருகின்றேன்.
உங்கள் நினைவு எங்கும் செல்லவில்லை.
இந்த தியானம் அருள்ஞானத்திற்குள் சென்றது.

ஒரு இயந்திரத்தின் (கம்ப்யூட்டர்) துணையால் வரும்பொழுது உணர்வின் அழுத்தம் எலக்ட்ரான்.
அந்த அழுத்தத்திற்கொப்ப அதனுடன் இணை சேர்த்து
அந்த உணர்வுகள் யந்திரத்தை இயக்குகின்றது.
கால மணிகளை அளவுகோல் கொடுக்கின்றது.

அதைப் போன்று, யாம் உபதேசித்த உணர்வுகள் அடுத்து உங்களுக்குள் நினைவுக்கு வரும்பொழுது காலத்தை அறியும் அளவுகோலாக
கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலைகள்
மாற்றியமைப்பது போல் தீமைகளை மாற்றியமைக்கும்.

அதனால்தான் உங்களுக்குள் செய்யும் இந்தப் பதிவின் நினைவாற்றல் பகைமை உணர்வு புகாது தடுக்கவும், நல் உணர்வுகளைக் காக்கவும், அருள்ஞானத்தை வளர்க்கவும் உதவும்.

கால நிலை கொண்டு எதிர்நிலை கொண்ட உணர்வுகளை மாற்றியமைக்கும் திறன் உங்களுக்குள் வருகின்றது.

தீமையின் உணர்வு நமக்குள் இருந்தால் நல் உணர்வை மாற்றியமைத்துவிடும்.

ஆகவே, நமக்குள் அருள் உணர்வு கொண்டு மற்றவர்களைக் காக்க வேண்டும் என்று தியானித்து அவர்கள்படும் துயரங்களில் இருந்து மீளவேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சந்தர்ப்ப பேதத்தால் மக்களுடன் சுற்றுப்புற சூழ்நிலைகளுடன் வளர்கின்றோம்.

வேடிக்கையாகப் பார்த்திருப்பார். இந்த உணர்வின் அழுத்தம் வரும். உணர்வின் அழுத்தம் வரும் பொழுது அதன்மேல் கவனத்தின் தன்மை வரும்.

வீட்டிற்குள் இவர் ஒன்றே எதிர்பார்ப்பார். அந்த உணர்வின் அழுத்தம் எதிர்ப்பார்ப்பது நடக்கவில்லை என்றால் கோவிப்பார்.

கோபித்து அழுத்தமாகும்பொழுது பற்று வெறுப்பாக ஆகின்றது.
நல்ல ஞானத்தின் தன்மை வரும்பொழுது பற்று விரிவடைகின்றது.
ஆனால், சில சந்தர்ப்பங்கள் வரும்பொழுது அதை குறுக்கி விடுகின்றது.

பற்றுகள் இரு வகைகள் உண்டு. அவர் கொண்ட
வெறுப்பின் உணர்வுடன் பற்றுக்கொண்டால்
நல்ல மனதைச் சுருக்கி விடுகின்றது.

நல்ல மனதைக் கூட்டிவிட்டால்
தீமை என்ற மனதைக் குறுக்கி விடுகின்றது.

இதுவெல்லாம் உங்கள் சிந்தனைக்கு வரவேண்டும்.