ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2026

ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் போது இறுமாப்பே வருகிறது…!

ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் போது இறுமாப்பே வருகிறது…!


பல சக்திகளையும் பல வித்தைகளையும் குருநாதர் எமக்குக் காட்டினாலும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எமக்கு இறுமாப்பு…” அதிகமாகவே விளைகின்றது.
 
1.காரணம்… எதையும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைகளில் பல சக்திகளை உணர்த்துகின்றார்.
2.அது வந்தவுடன் எமக்குள் இறுமாப்பு வருகின்றது.
 
இறுமாப்பு வரப்படும் பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்பொழுது அவர்கள் வன்மம் கொண்டு சில நிலைகளைச் செய்வார்கள்.
 
மந்திரவாதிகளுக்குள் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு. தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால் அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது….? அதே  மாதிரித் தான் எமது புத்தியும் செயல்பட்டது.
 
மனித வாழ்க்கையில் வந்த யாம் குருநாதர் சக்தி கொடுத்திருக்கின்றார் என்றால் இவனை ஒரு கை பார்ப்பது…!என்ற நிலையில் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எமக்குள் தோற்றுவித்தது.
 
ஆனால் அருள் ஞானியான மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் உணர்த்திய உணர்வோ
1.நமக்குள் ஈர்க்கும் அந்த உணர்வின் இயக்கங்களைக் கண்டு அறிவதற்காக
2.எத்தகைய வலு இருந்தாலும் நாம் எண்ணத்தின் வலு கொண்டு செயல்டும் பொழுது
3.நமது எண்ணம் தீமையின் வழியில் எப்படி அழைத்துச் செல்கின்றது? என்பதைத் தெளிவாக உணர்த்தினார்.
 
குருநாதர் உயர்ந்த சக்தியினை எமக்குள் கொடுத்தாலும் எமக்குள் அகந்தை என்ற நிலைகள் ஓங்கி வரப்படும் பொழுது மற்றவர்களை எளிமைப்படுத்திப் பார்ப்பதும் தான் தான் நான் தான்என்று நான் என்ற அகந்தை கூடும் நிலையே ஏற்பட்டது.
 
அப்பொழுது அந்த நல்ல உணர்வைக் காக்காதபடி இந்த ஆறாவது அறிவைச் செம்மையாகப் பயன்படுத்தாதபடி இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு குரு காட்டிய அருள் வழியில் அவர்கள் காட்டிய அறநெறியின் தன்மையை
1.வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்குப் பதில்
2.தீமையை அது தூண்டச் செய்து இரு நான் பார்க்கின்றேன்என்று அவனின் நிலைகளுக்கு
3.இந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது…? என்று பார்…!  என்று குருநாதர் உணர்த்துகின்றார்.
 
இவ்வாறு உணர்த்திக் கொண்டே இருக்கும் பொழுது நான் எங்கோ சென்று கொண்டிருக்கும் பொழுது இப்படிப் பல நிலைகளைச் செய்யும் பொழுது திடீர் என்று எம்மை அறியாதபடி ஒரு மலை மீது “கால் பாதம் வைக்க மட்டும் தான் இடம் உள்ளதில் எம்மை நிறுத்திவிட்டார்…!” உட்கார முடியவில்லை…!
 
அங்கே எப்படி வந்தோம்? என்ன செய்வது? என்று தெரியாதபடி திகைப்பின் நிலையில் இருந்தோம். எந்த மந்திரவாதி இப்படிச் செய்தானோ? என்ற இந்த எண்ணம்தான் வருகிறது.
 
யாம் மந்திரவாதிகளைத் தொட்டுப் பரிட்சை செய்ததினாலே யாரோ மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் எம்மை இப்படி அழைத்து வந்துவிட்டனர் என்று நினைத்தோம்.
 
எந்தப் பக்கம் பார்த்தாலும் தலை சுற்றியது. அந்த அளவிற்கு மோசமான இடத்தில் இருந்தோம். அந்த மலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது.
 
அப்பொழுதுதான் யாம் திகைத்து நமக்கு குரு எவ்வளவு சக்தி கொடுத்தாலும் அந்தக் குருவின் துணை நமக்கு இல்லையே,
1.யாம் அகந்தை கொண்டு செயல்பட்டதால் ஏதோ மந்திரவாதி செய்து விட்டான் என்ற எண்ணங்கள்தான் எமக்கு வந்ததே தவிர
2.குருவின் வலுவை யாம் எண்ணவில்லை.
 
எமக்குள் அகந்தையின் நிலைகள் கொண்டு, யாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்ற உணர்வே தோற்றுவித்தது. இந்த நிலைகளில் இருந்து எப்படி மீள்வது? என்று தவித்துக் கொண்டிருந்தோம்.
 
ஒரு மணி நேரம் ஆகிவிட்டது, நேரம் ஆக ஆக எமது உடல் எல்லாம் வேர்க்கின்றது. சறுக்குப் பாறைபோல் இருந்ததால் வேர்வை வியர்க்க வியர்க்க கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகின்றது. எனக்கு எதையும் எட்டிப் பிடிக்கும் நிலையே இல்லை.
 
முன் பக்கம் போனாலும் மரணம் தான்பின் பக்கம் போனாலும் மரணம் தான். குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட நேரம் இல்லை.
 
கொஞ்ச நேரம் போனால் போய்விடுவோமோ…! என்ற பய உணர்வுகள் அதிகமாக அதிகமாக உடலின் தன்மையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க உடலிலிருந்து வியர்வை கொட்டத் தொடங்கி விடுகின்றது. ஆக வலுவிழந்த நிலையில் யாம் இருந்தோம்.
 
இந்த நேரத்தில் மனமே இனியாகிலும் மயங்காதேஎன்ற குரல் வருகின்றது. அது குருவின் குரலாகத் தென்பட்டபின் எமக்குக் கொஞ்சம் ஜீவன் வந்தது.
 
நீ கொஞ்ச நேரத்தில் விழுந்து விடுகின்றாய்நீ உன் எண்ணத்தால் பல மனக் கோட்டையைக் கட்டினாயேகொஞ்ச நேரத்தில் மறையப் போகின்றது பார்…!என்றார் குருநாதர்.
 
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மனிதனும் செல்வங்கள் குவித்து வைத்து, அந்த செல்வத்தைக் காத்திடும் நிலையாக
1.தன் பந்துக்கள் தன் இனங்களையே இம்சிக்கின்றனர்.
2.கடைசி நிலையில் அந்தப் பொருளைக் காக்க முடியாத நிலையில் அவர்கள் எப்படி வேதனைப்படுகின்றனர்…?
3.சம்பாதித்து வைத்தாலும் அவர்களுக்குள் வேதனையத்தான் வளர்க்க முடிந்தது.
 
செல்வத்தைக் காத்திடும் நிலை அற்றுத் தனக்குள் வேதனை என்ற நஞ்சின் தன்மை உருப்பெறும் நிலையாக நல்ல குணங்களை அழித்திடும் நிலைகள் பட்டுச் சீர்கெட்டு இருக்கும் நிலைகளைச் “சினிமாப் படங்களைக் காட்டுவது மாதிரி ஒன்று ஒன்றாகக் காண்பித்தார்… அப்பொழுதுதான்,
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்
 
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே என்ற நிலையை உபதேசித்தார் குருநாதர்.
 
1.ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் எவ்வாறு செல்வத்தைச் சம்பாதித்தனர்…?
2.அந்தச் செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைப்பட்டனர்...?
3.அந்த வேதனை குடும்பத்திற்குள் எப்படித் தொடர்ந்தது...?
4.செல்வத்தைக் காக்க முடியாதபடி சாபங்களும் குடும்பத்தில் நலிந்த உடலாகவும் நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழ்கின்றனர்? என்று
5.அதையெல்லாம் தெளிவாக எடுத்துக் காட்டிக் குறைந்தது இரண்டு மணி நேரம் இருக்கும்அதன் பின் கீழே இறக்கி விட்டார்.
 
இனி நீ வலம் வரலாம்உலகை அறியலாம். நான் உனக்குக் கண்டுணர்த்திய அனைவரின் உண்மைகள் நீ செல்லும் பொழுது, செல்லும் பாதையில் உனக்கு உண்மையின் உணர்வுகள் வரும்.
1.நீ அங்கே சென்று பார்,
2.அவர்களின் குடும்பத்தின் நிலைகளைப் பார்,
3.ஊன்றிப் பார் அவர்களின் செயல்களின் தன்மையைப் பார்,
4.அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று சிந்தித்துப் பார் என்று பல நிலைகளை உணர்த்தினார் குருதேவர்.