ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2023

“நான் இறந்துவிடுவேன்…!” என்ற பய உணர்ச்சி நமக்கு வரக் காரணம் என்ன…?

பாசத்தால் பண்பால் குடும்பத்திலோ நண்பர்களிடமோ உறவினர்களிடமோ நாம் மற்றவருடன் பிரியமாகப் பழகி இருக்கப்படும் பொழுது… உடலை விட்டு அவர்கள் திடீரென்று பிரிய நேர்ந்தால் அதைக் கேள்விப்பட்ட பின் “போய்விட்டார்களே என்று ஏங்கினால்” நமக்குள் அந்த ஆன்மா வந்து நம்மை அறியாமலே எத்தனையோ பாடுபடுத்துகின்றது (முதலில் எதுவும் தெரியாது).

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்…
1.எனக்குள் இருந்து அந்த ஆன்மா பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற
2.இந்த உணர்வை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் அந்த ஆன்மாவினால் முடியாததை நாம் அந்த உயர்ந்த சக்தியை எடுத்து ஊட்டும் பொழுது நம் இரத்தத்திலே கலந்து
1.அந்த ஆன்மாக்களும் நமக்கு ஒத்த நிலையாகி தொல்லை கொடுப்பதை மறந்து
2.உடலை விட்டுப் பிரியும் போது அதுவும் நம்மிலிருந்தே புனித நிலை (பெறும் தகுதி) பெறுகின்றது.

இது நம்முடைய சாஸ்திரங்கள் காட்டிய பேருண்மைகள்.

இதை விடுத்து விட்டு உடலிலே புகுந்த ஆன்மாக்களை உடுக்கை அடித்தோ கோடாங்கி அடித்தோ மந்திரங்களைச் சொல்லியோ “நான் பேய் ஓட்டுகிறேன்…!” என்று அப்படி யாராலும் ஓட்ட முடியாது.

உடலில் இருக்கக்கூடிய அந்த ஆன்மாக்களுக்கு அருள் உணர்வின் சத்தைக் கொடுத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தால் “அது நமக்குள் இருந்து நன்மை செய்யும்…”

இல்லையென்றால்… இரத்தத்தில் அது சுற்றி வரும் போது
1.உயிரிலே (புருவ மத்தியில்) வந்து மோதப்படும் பொழுது அது பட்ட வேதனை உணர்ச்சிகள் நமக்குள்ளும் வரும்.
2.ட்ரான்சாக்ஷன் என்ற உயிர் அருகிலே சென்றபின் அதே உணர்ச்சிகளைத் தான் ஊட்டும்.

கிராமஃபோன் பெட்டியில் ஒரு இசைத் தட்டைச் சுழலச் செய்து ஊசியை உராயச் செய்தால் அந்தப் பாகம் வந்த பின் அதனதன் இசைகளை வரிசயாக எப்படிக் கொண்டு வருகின்றதோ… அதைப் போன்று நமது உயிர்
1.இரத்தத்தில் கலந்த அனைத்து நிலைகளுக்கும் (ஆன்மாக்கள்) இவ்வாறு செயல்படுத்தப்படும் பொழுது
2.அந்தப் பாகம் சென்ற உடனே அந்த ஆன்மா என்னவெல்லாம் சங்கடப்பட்டதோ அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.கை கால் குடைச்சல் மற்றும் எத்தனையோ உடல் உபாதைகளைக் (தொல்லைகளை) கொடுக்கும்.

அதைக் கடந்து உடலுக்குள் அந்த ஆன்மாக்கள் போகிற பக்கம் எல்லாம்… இரத்தத்தின் வழி எங்கெல்லாம் செல்கின்றதோ
1.இருதயத்திலே சென்றால் இருதய வலி
2.கல்லீரலுக்குள் சென்றால் கல்லீரல் வலி
3.நுரையீரலுக்குள் சென்றால் நுரையீரல் வலி
4.அந்த ஆவியின் நிலைகளால் நம் உடலுக்குள் பல விதமான வலிகளைத் தோற்றுவிக்கின்றது.

இதையெல்லாம் வைத்தியம் செய்து ஒன்றும் சீர்படுத்த முடியாது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உடலில் இரத்தத்தில் வலுப்பெறச் செய்தால் அதனுடைய வீரியம் தணியும்.

அறியாது வரும் இப்படிப்பட்ட தீமைகளை நீக்க அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செருகேற்றினால் தீமைகள் புகாது ஞானத்தின் தன்மை பெறலாம்.

அதற்காக வேண்டித் தான்
1.இந்த உபதேச வாயிலாக அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

தியானித்து அதை வலுப்பெறச் செய்து கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்த நம் முன்னோர்களின் ஆன்மாக்களை நாம் விண் செலுத்த வேண்டும்.

எத்தனை பேரை விண் செலுத்துகின்றோமோ அத்தனை பேரின் ஆற்றலும் நமக்குக் கிடைக்கின்றது. அவர்கள் முன் செல்ல பின்னாடி நாமும் அந்த நிலையை அடைய முடியும்.

ஏனென்றால் மீண்டும் இந்த உடல் பெற்றால் அது நரகலோகம் தான் அது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுவோம். பேயாகவோ நோயாகவோ நாம் உருவா(க்)க வேண்டாம்…!