தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் துணை கொண்டு ஒளியான உணர்வுகளைக் காணுவதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.
1.அதை எடுக்க எடுக்க இந்த வாழ்க்கையில் பொருள் காணும் நிலைகள் வரும்… சிந்திக்கும் ஆற்றல் வரும்
2.நமக்குள் சுதாரித்து… ஒவ்வொன்றையும் எவ்வாறு செய்ய வேண்டும்…? என்ற அதற்குண்டான ஞானங்கள் வரும்
3.அந்த உணர்வு உண்டு எதையுமே சீர்படுத்திக் கொள்ளலாம்.
விஞஞான அறிவுப்படி… எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இன்று ஏவுகணைகளை இராக்கெட்டின் மூலம் இயக்குகின்றார்கள்.
அதாவது ஆள் இல்லாதபடி கம்ப்யூட்டர் என்ற இயந்திரத்தின் துணை கொண்டு தன்னிச்சையாக இங்கிருந்து (தரையிலிருந்து) இயங்கும்படி செய்து வைத்திருக்கின்றார்கள்.
உதாரணமாக எதிரி விமானங்களில் இருந்து குண்டு வீசினால்
1.அந்த நுண்ணிய ஒலி அலைகளை ஈர்த்து… முகப்பிலேயே காணும் நிலைகளாக வைத்து இது விலகிச் செல்லும்படியாக வைத்திருக்கின்றார்கள்.
2.வெகு தூரத்திலிருந்தாலும் இது தன்னுடைய மோப்பத்தால் வானிலே இவ்வளவு மைல் வேகத்தில் இத்தனை டிகிரியில் வருகிறது என்று உணர்ந்து
3.அதை எதிர்த்துத் தாக்கும் நிலைகளை இது செயல்படுத்துகின்றது.
இப்படி எத்தனையோ நுண்ணிய நிலைகளை இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள்.
இதே மாதிரித் தான் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கப் பெருக்க
1.தீமை நம்மைத் தாக்குவதற்கு முன் அதை நாம் விலக்கி தள்ளும் நிலையாக
2.அது நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
அத்தகைய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்.
ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறுவதற்கு… நமது குரு அருளும்; அவரின் துணை கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்; அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வுகளையும் பதிவு செய்கின்றோம்.
நீங்கள் குறைகளை நினைக்கவே கூடாது… நிறைவு பெற வேண்டும்… நல்லது நடக்க வேண்டும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்றே எண்ணிப் பழக வேண்டும்.
எங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் குடும்பத்தினர் அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் சிந்தித்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்
இதைக் குழந்தைகளுக்கும் ஞாபகப்படுத்தி அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும்படி கற்றுக் கொடுக்க வேண்டும்.
யாம் கொடுத்த அருள் ஞான்ச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து இதை எல்லாம் எண்ணும் ஒரு பழக்கமாக நீங்கள் வளர்த்துக் கொண்டே வந்தால்
1.அதிலிருந்து ஒளிக் கற்றைகள் வரும்.
2.இரவில் படுத்திருக்கும் போது உங்கள் உடலிலிருந்து வெளிச்சத்தையும் காண முடியும் - அது தீமைகளை நீக்கும்.
ஆனால் காண முடியும் என்று சொன்னதைக் கேட்டு “எனக்கு வெளிச்சம் வரவில்லையே… வரவில்லையே…!” என்று எண்ண வேண்டியதில்லை.
ஏனென்றால் இப்படிச் சில பேர் தவறான நிலைகளில் கொண்டு சென்று விடுகின்றனர். ஐயோ… எனக்கு அந்தச் சக்தி இல்லை போலிருக்கிறது…! என்று எண்ணிவிடுகிறார்கள்.
ஆனால் அத்தகைய எண்ணமே வரக்கூடாது.
உங்கள் உடலில் “அந்தச் சக்திகள் பாய்ந்து கொண்டிருக்கின்றது…” அதை வளர்ப்பதற்குத் தான் இப்பொழுது வாக்காகக் கொடுத்துப் யாம் பதிவு செய்கின்றோம்.
வளர்ந்தால் தானே தெரியும். ஆகவே
1.காணாத உணர்வுகளை நாம் வளர்க்க கூடாது
2.காண வேண்டும் என்ற உணர்வைத் தான் வளர்க்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் இணையும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.