ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2023

எம்முடைய ஒரு உபதேசத்தை மட்டும் கேட்டால் போதாது… எல்லாவற்றையும் கேட்டால் தான் முழுமை வரும்

ஞானிகள் கண்ட பேருண்மைகளை உங்களுக்கு எத்தனையோ உபதேசங்கள் வாயிலாகக் கொடுத்து (சுமார் 30 வருடங்கள்) அதைத் தெளிவாகவே உணர்த்திக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இருக்கக்கூடியவர்களுக்கு… ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு… உபதேசங்களைக் கொடுத்துள்ளோம்.

இதையெல்லாம் ஒலிப் பதிவு செய்து வைத்துள்ளார்கள்
1.அது எல்லாவற்றையும் நீங்கள் சேகரித்து ஒவ்வொன்றாகக் கேட்டு…
2.உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் அந்த முழுமை கிடைக்கும்.

எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மொத்தமாகச் சொல்ல முடியுமோ…?

ஆகையினால் அந்தந்தப் பகுதிகளிலே உபதேசமாக யாம் கொடுத்ததை நீங்கள் எடுத்து… ஒவ்வொருத்தருக்கும் யாம் சொன்னதை நீங்கள் திரும்பக் கேட்டால் முழுமை கிடைக்கும்.

ஏனென்றால் எம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு
1.அந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும்
2.இப்பொழுது உங்களுக்கு கொடுக்கும் பொழுது சில வித்தியாசங்கள் இருக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் இணைந்து அங்கே மாறும். எதெனதன் தொடரில் எது எது மாறுகின்றது…? என்பதைத் தான் நினைவுபடுத்தி அந்த ஞானிகள் உணர்வை எப்படி அதிலே இணை சேர்த்துக் கொண்டு வர வேண்டும் என்று இப்போது தெளிவாகவே சொல்லி வருகின்றோம்.

இதையெல்லாம் கேட்டு…
1.சாமி அவருக்கு ஒரு விதமாகச் சொல்லி இருக்கின்றார்…
2.நமக்கு வேறு விதமாகச் சொல்லி இருக்கின்றாரே…! என்று நீங்கள் எண்ண வேண்டியது இல்லை.

ஆனால் அதற்காக வேண்டி எல்லோரையும் கூப்பிட்டு ஒரே இடத்தில் எத்தனை பேரை… எவ்வளவு நேரம் உட்கார வைத்து… எத்தனை நாள் இதைச் சொல்வது…?

அது சாத்தியமல்ல…!

அந்தந்தச் சந்தர்ப்பத்தில் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்து உணர்வுகள் ஒலி அலைகளாக மாற்றி அலைகளாகப் பரவச் செய்கிறோம்.

உங்களுக்குள் பதிவானதன் மூலமாக மெய் ஞானிகள் உணர்வுகளைப் பருக வேண்டிய பக்குவ முறைகளையும் தெளிவாகக் கொடுக்கின்றோம்
1.அப்பொழுதுதான் அதை உங்களுக்குள் ஏற்கும் பருவமும்
2.அதனை வழி நடத்திச் செல்லும் பக்குவ முறைகளும் வளரும்.

எனக்கு குருநாதர் இப்படித்தான் ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டு வந்தார். காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று செடியைக் காண்பித்து “இந்தப் பச்சிலை பேசுமாடா…?’ என்று கேட்பார்…!

“பேசும்…” என்று நான் சொன்னால் அது எப்படிடா பேசும்…? என்று என்னை திரும்பப் பிடிப்பார். வினாக்களை எழுப்பி எழுப்பி… எல்லாவற்றிலும் எல்லா வகைகளிலும் உண்மையை நான் அறியும்படி செய்வார்.

ஒரு இடத்தில் புலி செத்து கிடக்கின்றது. அதைப் பார்த்து “இது என்னடா செய்யும்…?” என்று கேட்பார்.

இந்தப் புலி எதைக் கொன்று தின்றதோ அங்கே போய்ப் பிறக்கும் என்று சொல்வேன்.

அது எப்படி…? நீ சொல்…! என்பார். புலி செத்து விட்டது… இந்த உடலில் சேர்த்த சத்தெல்லாம் எங்கே போனது…? என்பார்.

காற்றிலே சென்று விட்டது என்று சொல்வேன்.

காற்றிலே போன பிற்பாடு என்ன ஆகின்றது…? என்று விளக்கம் கேட்பார்.

இரண்டு பேருக்குமே இந்தப் பேச்சு வார்த்தை இப்படியே வளர்ந்து கொண்டே போகும். முழுமையாக அறியும் வரை விடமாட்டார்.

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றாலும் அங்கே சரியான உணவு இல்லை… குடிப்பதற்கு நீர் இல்லை… சில நேரம் நடந்து செல்லக் கூட முடியாது.

இப்படி…
1.எத்தனையோ எதிர்மறையான சிக்கல்களில் குருநாதர் என்னைக் கொண்டு மாட்ட வைத்து
2.அதிலிருந்து மீண்டு வருவதற்கு உண்டான உபாயங்களைக் காட்டி
3.அவர் சொன்ன வழியில் நான் அதைப் பின்பற்றி நடந்து
4.அதிலே அனுபவ வாயிலாகப் பெற்ற பேருண்மைகளைத் தான்
5.அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு உபதேசமாக வெளிப்படுத்தியது.

ஆகையினால் அவ்வப்பொழுது வெளிப்பட்ட அந்த உபதேசக் கருத்துக்களை - எல்லாவற்றையும் நீங்கள் முழுமையாகக் கேட்க வேண்டும். குருநாதர் எனக்குள் முழுமையாகக் கொடுத்தது போன்று நீங்களும் அந்த முழுமை பெற வேண்டும்.

எல்லா உபதேசங்களையும் நீங்கள் கேட்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.