ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2023

மகரிஷிகளின் அருள் ஞானம் நாம் பெற வேண்டும்

தியானத்தில் சக்தி பெற்றாலும் அடிக்கடி மகரிஷிகளை நினைவுபடுத்தி அருள் ஞான சக்திகளை நாம் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஞானம் பெருகினால்
1.வாழ்க்கையில் ஓரளவுக்கு நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தீமையான உணர்வு நமக்குள் வளராதபடி தடுக்கவும்…
2.மீண்டும் இன்னொரு பிறவிக்கு வராதபடி தடைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்திற்கே நேரடியாக உயிர் நம்மை அழைத்துச் சென்றுவிடும்… இதை பார்க்கலாம்.

ஏன் இதைச் சொல்கிறோம் என்றால் இறந்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று எண்ணுவார்கள்…? ஆனால் வாழ்ந்த காலத்தில் யார் மீது அதிகப் பற்று கொண்டார்களோ இறந்த பின் அவர் உடலுக்குள் இந்த ஆன்மா சென்றுவிடும்.

அங்கே சென்று அவர்களை ஆட்டிப் படைத்து தன் உடலில் பெற்ற அவஸ்தைகளை எல்லாம் அங்கே புகுந்த உடலில் வளர்த்து அதைப் பெருக்கிக் கொண்டே வரும்.

வேதனை என்ற விஷத்தை அதிகமாகச் சேர்த்ததால் அந்த உடல் மடிந்து வெளியே வந்த பின் அடுத்து பாம்பாகத்தான் உயிர் உருவாக்கும்.

அதே போல் தொழிலிலோ குடும்பத்திலோ கோபமாகப் பேசி வெறித்தனமாகச் செயல்பட்டிருந்தால் உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இதே உணர்ச்சிகளைத் தூண்டி அதை அங்கே முழுமையாக்கி வெளி வந்த பின் புலி உடலுக்குள் சென்று புலியாகத் தான் அடுத்து பிறக்க நேரும்..

ஆகவே இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் கெட்டது என்று பார்த்தாலும்… அறிய நேர்ந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமது ஆறாவது அறிவுக்கு உண்டு.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஒவ்வொரு நொடிப்பொழுதும்
2.நல்லதாக மாற்றி அமைத்துக் கொண்டே வரவேண்டும்.

குடும்பங்களில் பார்த்தால் பெண் குழந்தைகளை வளர்த்திருப்பவர்கள் என் பிள்ளைக்குக் கல்யாணமாகவில்லை… கல்யாணமாகவில்லை… என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
1.“அந்த மாதிரி வார்த்தையே நமக்கு வரக்கூடாது…!”
2.பெண்ணைப் பார்க்க வந்தார்கள்… சென்று விட்டார்கள்… ஒன்றும் சொல்லவில்லை… அடுத்து என்ன ஆகுமோ…?
3.வந்து எல்லாம் பார்க்கிறார்கள்… ஆனால் போய் விடுகிறார்கள் என்ற இந்த எண்ணமே வரக்கூடாது.

என் பிள்ளைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… பிள்ளை உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். திருமணம் ஆகி எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.

அவர்களை நலம் பெறச் செய்யக்கூடிய சக்தி பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்படி எண்ணினாலே போதுமானது.
1.இந்த உணர்வுகள் பிள்ளையின் உடலிலே பதியும்.
2.குழந்தையை எண்ணி நாம் இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்.

மாறாக… பெண்ணைப் பார்க்க வருபவர்கள் வருகின்றார்கள் போகின்றார்கள்… ஒன்றும் முடியவில்லை…! என்று வேதனைப்பட்டு… அடிக்கடி குழந்தையை எண்ணி இதே வேதனையை அங்கே பாய்ச்சினால் என்ன ஆகும்…?

ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…! அதாவது “திருமணம் ஆகவில்லையே…” என்ற உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து… இதே உணர்வுகளைக் குழந்தைக்குப் பாய்ச்சும் பொழுது சலிப்படைந்த உணர்வுகள் தான் அங்கேயும் வளரத் தொடங்குகிறது.

1.அடுத்து நம் பெண்ணைப் பார்க்க யார் வந்தாலும்
2.இந்தச் சலிப்புக்குத் தக்கவாறு அவர்கள் குடும்பத்திலும் இதே உணர்வாக
3.பெண் கிடைக்கவில்லை… கல்யாணம் ஆகவில்லையே… என்ற சலித்த உணர்வுடன் வரக்கூடியவர்கள் இங்கே வந்து இணைந்து
4.இந்த இரு மனமும் ஒரு மனமாகித் திருமணம் ஆன பின் வருத்தமே மேலோங்கி
5.”கணவன் மனைவி குடும்பத்தில்” சந்தோஷத்தை இழக்கத்தான் நேரும்
6.இரண்டு பேரும் வெறுக்கும் உணர்வைத் தான் வளர்க்க முடியுமே தவிர ஒன்று சேர்ந்து வாழும் தன்மை இருக்காது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே எந்த நிலையாக இருந்தாலும் நம் பிள்ளைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; திருமணம் ஆகிச் செல்லும் பொழுது அங்கே மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்; செழித்த உணர்வுடன் வாழ வேண்டும்; வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்; அந்த சக்தி என் பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் இப்படி எண்ணித்தான் நாம் திருமணம் நடத்த வேண்டும்.

நாம் எண்ணி எடுக்கும் இந்த உணர்வு… மூச்சலைகளாக வெளிப்படுத்துவது… சொல்லக்கூடிய வாக்குகள்… இவை அனைத்து நம் பிள்ளை உடலில் பதிந்து வளர்ந்து… திருமணமாகிச் செல்லும் போது “அங்கே ஒன்று சேர்ந்து வாழும் உணர்வாக… மகிழ்ந்து வாழும் சக்தியாக அமையும்…”

இதே போன்று… திருமணமாகக் கூடிய தம்பதிகளும் தங்கள் தாய் தந்தையரை எண்ணி
1.எங்களுடைய தாய் தந்தையின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.திருமணம் ஆகிச் செல்லும் இந்தக் குடும்பம் மகிழ்ந்து வாழ வேண்டும் நலமாக இருக்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்
4.என் பார்வை அந்தக் குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
5.அந்த சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் சஞ்சலமோ சலிப்போ சோர்வோ உடலிலே விளையாது…!

இதே மாதிரி… குழந்தைகள் பிறந்த பின் கல்வியிலே சிறிது குறைபாடுகள் இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்து அந்த உணர்வைக் குழந்தைக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

குழந்தை கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும்; அவனுக்கு நல்ல ஞாபக சக்தி கிடைக்க வேண்டும்… நன்றாகப் படிக்க வேண்டும்… என்று இதைத் திரும்பத் திரும்ப எண்ணிச் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை சரியாகப் படிக்கவில்லையே என்று
1.அவனுடைய சிந்தனையற்ற உணர்வை நாம் எண்ணாதபடி குழந்தை சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.அவனிடம் - நீ நன்றாகப் படிப்பாய்… நீ சிந்தித்துச் செயல்படுவாய்… ஞாபக சக்தி உனக்குக் கிடைக்கும் என்று
3.இப்படித் தான் குழந்தையிடம் சொல்லிப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் கல்வியில் தேர்ச்சி இல்லை என்கிற போது “எப்போது பார்த்தாலும் நீ தோற்றுக் கொண்டே போகின்றாய்… இப்படியே சென்றால் எல்லாவற்றிலும் நீ தோற்றுத்தான் போவாய்…!” என்று இதைச் சொல்லிச் சொல்லி நாம் பேசிக் கொண்டிருந்தால்
1.இந்த உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்து நம்முடைய எண்ணங்களைப் பலவீனப்படுத்தி
2.நாம் எண்ணியபடி குழந்தையையும் செயலற்றதாகத் தான் அது மாற்றும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம் குடும்பமே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்யும் அந்தப் பக்குவ நிலைக்கு வளர வேண்டும்.

நம்மால் அது முடியும்