நல் உணர்வுடைய நற்செல்வங்களை (குழந்தைகளை) நாம் பெற்றே சமமான நிலையில் வாழ்ந்திட்டாலும்… வாழும் நிலையில் சூழ்ந்துள்ள அசுத்தத் தன்மை வாய்ந்த மூச்சுக் காற்றுகளும் நல் நிலையில் வாழ்பவரையும் வந்து தாக்குகின்றது. ஆரோக்கிய நிலையும் மாறுபடுகின்றது.
1.இக்காற்றில் கலந்துள்ள சக்தியில் நச்சுத்தன்மையின் வீரியம் தான் இப்பொழுதுள்ள நிலையில் ஓங்கி நிற்கின்றது
2.இதிலிருந்து மீண்டு ஜெப நிலை பெற்றே வாழ்ந்திட வேண்டும்.
சில உபாதைகள் இக்காற்றிலிருந்து நாம் ஈர்க்கும் சுவாசத்துடன் நம்மை வந்து அணுகத்தான் செய்கின்றன. அந்நிலையிலிருந்து நாம் மீள… சில வைத்திய முறைகளை ஏற்க வேண்டியுள்ளது.
இக்காலநிலை மாறும் தன்மையிலும் இவ்வுடல் நிலை மாறும் தன்மையிலும் சில நிலை கொண்ட மாற்றங்கள் உடல் நிலைக்கும் வரத்தான் செய்கின்றன.
இந்நிலையில் இருந்தெல்லாம் நம் உடல் ஆரோக்கியம் பெறச் சாதாரண வாழ்க்கை நிலையிலுள்ள நாம் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.
சித்தர்களும் முனிவர்களும்… ஞானிகளும் ரிஷிகளும் போல் இக்காற்றிலிருந்தே உடலில் ஏற்படும் பிணிகளை மாற்றும் சக்தி கொண்ட காற்றினை ஈர்த்து வாழும் பக்குவ நிலை பெற்றவர்கள். அத்தகைய நிலையை நாமும் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.
சிறு குழந்தைகளுக்கும் சரி… பிறந்த சிசுவுக்கும் சரி.. தாயின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகில் வாழ வந்த நாட்களில் அதைப் பேணிப் பாதுகாக்க…
1.பிறந்த நாளிலிருந்தே சில மருந்துகளை நம் முன்னோர்கள் அதற்கு ஊட்டித்தான்
2.வளரும் பக்குவத்தை நமக்கும் வழிகாட்டித் தந்தார்கள்.
ஆனால் இன்று வாழும் மனிதர்களோ… “உணவைப் போலவே மருந்தையும்” உட்கொண்டே வாழும் நிலையில் உள்ளார்கள்.
ஏனென்றால் இக்காற்றின் அசுத்தத் தன்மையினால் வளரும் பயிரின் செழிப்பும் குறைந்து விட்டது. மக்கள் தொகையும் பெருகி விட்டது.
நாம் உண்ணும் உணவுத் தானியங்களைப் பெருக்கிட வேண்டும் என்றால்… இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல இரசாயன நிலை கொண்ட உரங்களைச் செலுத்தியே உணவுத் தானியங்களின் உற்பத்தியை வளரச் செய்து நாம் அதை உண்ண முடிகின்றது.
1.இயற்கையின் உரங்கள் செலுத்தி வளரச் செய்த காலங்கள் மாறி
2.செயற்கையான உரங்கள் செலுத்தித்தான் இன்றைய உணவு உற்பத்தி நிலையை நாம் பெற முடிகின்றது.
இந்த இரசாயன உரங்களை ஈர்த்து வளர்ந்த பயிர்களில் இருந்து நாம் பெற்று உண்ணும் தானியங்களின் மூலம் நம்மையும் அந்நிலை கொண்ட சத்து நிலை (இரசாயணங்கள்) வந்து தாக்குகின்றது.
இயற்கையில் வளரும் தன்மை இன்றுள்ள இக்கால நிலையில் முடியாததினால் இச்செயற்கையின் வளர்ச்சியில் வந்த செயற்கையான தானியத்தையே உட்கொள்ள வேண்டியுள்ளது.
ஆகவே செயற்கையுடன் ஒன்றி நாம் வாழ்வதால் இவ்வுடல் மாற்றத்திற்கு இன்று புதிய புதிய மருத்துவத்தைச் செயல்படுத்தி நமக்கு ஏற்கத்தான் வேண்டியுள்ளது.
1.நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிய பல மூலிகைகளை இன்று இக்கால நிலையில் தவற விட்டுவிட்டோம்
2.மூலிகையில் உள்ள மகத்துவத்தை நாம் எடுக்கும் நிலையில் இல்லை
3.அதை ஏற்கும் மனோ நிலையும் நம்மிடம் இல்லை.
சித்தர்கள் நமக்கு உணர்த்திய பல மூலிகைகளை நாம் பெறுவதற்கும்… இன்றைய மனிதனின் மன வளர்ச்சியில் எதையும் துரித நிலை கொண்டு செயலாக்கும் மன வளர்ச்சியில்… “இன்றைய மனிதனுக்குப் பொறுமை நிலையும் இல்லை…!”
இதில் வந்த வினைச் செயலால் தான் இன்று இத்தேசத்தில் அன்று உணர்த்திய பல உன்னத மூலிகைகளின் பொக்கிஷமெல்லாம் மறைந்து சிதைந்து விட்டதின் நிலை.
ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் “விஞ்ஞானம்…” என்னும் துரித நிலையில் சென்று கொண்டுள்ளான் இன்றைய மனிதன்.
அன்றன்று தேவையை மட்டும் உணர்ந்து வாழும் மனிதன் தன் ஆத்மா என்ற ஆண்டவனை எண்ணி வாழ்வதில்லை.
துரிதமுடன் செயற்கைக்கு அடிமைப்பட்ட இன்றைய மனிதனால்
1.இவ்வாத்மீக வழியும் ஜெப வழியும் அறிந்து வாழ்ந்திட்டால்
2.தன் வாழ்க்கையின் முழுமை எங்குள்ளது…? என்பதனையே அறிந்திடலாம்
3.காற்று மண்டல நஞ்சிலிருந்து விடுபடவும் செய்யலாம்…!