வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும்… எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை மாற்றுவதற்கு முதலில் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அந்தத் தீமைகளை நாம் தூக்கி எறிந்து விட வேண்டும்.
காரணம்… நாம் (எதையுமே) கண்களிலே பார்க்கின்றோம்… நினைக்கின்றோம்… இழுத்து மூக்கின் வழி சுவாசிக்கப்பட்டு உயிரிலே படுகின்றது… அதனின் உணர்வாக நம்மை இயக்குகிறது.
ஆகவே…
1.அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றோம்.
2.இழுத்தவுடனே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே இணைகின்றது
3.இணைத்தவுடன் துருவ நட்சத்திரத்தின் சக்தி அங்கே வலுப்பெறுகின்றது.
நாம் சங்கடப்பட்டது வெறுப்புபட்டது அது எல்லாம் ஏற்கனவே உடலுக்குள் பதிவாகி இருந்தாலும்… அதற்கு உணவு கிடைக்காதபடி இங்கே தடையாகிறது.
இப்படித் தான் தீமைகளை நிறுத்திப் பழக வேண்டும். ஏனென்றால் பிறிதொரு தீமை நம்மை இயக்கி விடக்கூடாது… சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”
நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே எச்சரிக்கை செய்து ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளையும் வென்றது அதை வைத்து நாம் தூய்மைப்படுத்துகிறோம். உடல் உறுப்புகள் இரத்தத்திலிருந்து தோல் மண்டலம் வரை இப்படி வலு ஏற்றும் பொழுது “காற்றிலிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பிரித்து இழுத்து” நமது ஆன்மாவாக மாற்றி விடுகின்றது.
இது பழக்கத்திற்கு வந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்…!
1.சிரமப்பட்டு (அர்த்தம் புரியாத) மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
2.ஆயிரம் தடவை இரண்டாயிரம் தடவை இலட்சம் தடவை என்று சொல்ல வேண்டும்
3.மந்திரத்தை மறந்து விட்டாலோ… தப்பாகச் சொல்லி விட்டாலோ எல்லாமே போய்விடும் என்ற நிலை இல்லை.
உடனுக்குடன் நம்முடைய நினைவைச் செலுத்தி
1.“எது நல்லதாக வேண்டுமோ அதை எண்ணி” அந்த ரெக்கார்டை (பதிவை)
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
“துருவ நட்சத்திரத்தின் கணக்குகளை” இப்படி கூட்டிக் கொண்டே வர வேண்டும். உடலில் இருக்கும் அணு செல்களிலும் இந்த பதிவுகள் கூடிக் கொண்டே வருகின்றது… எல்லா அணுக்களிலும் இந்தச் சக்தி கூடி கூடுகின்றது.
இப்படிக் கூடும் பொழுது உயிரைப் போன்றே உடலில் இருக்கும் ஜீவ அணுக்களை ஒளியாக மாறிக் கொண்டே வருகிறது.
வயலிலே விதைக்கின்றோம் என்றால் முளைத்த பின் அந்தந்தக் காலகட்டத்திற்கு உரத்தையோ மற்ற மருந்துகளையோ இட்டோம் என்றால் நல்ல தரமான மகசூல் கொடுக்கும்.
இது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளுக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தியை உரமாக… சத்தாக… நாம் ஏற்றிக் கொடுக்க வேண்டும்.
இப்போது… சொல்லாக யாம் சொல்லப்படும் பொழுது இது சாதாரணமாகத் தெரியலாம் ஆனால் இந்த உண்மைகளை நான் அனுபவித்து உங்களிடம் சொல்கிறேன்..
சொல்கிறேன் என்றால் என்னிலே அது விளைந்தது… சொல்லும் போது நீங்கள் அதைக் கேட்கின்றீர்கள்… உங்களுக்குள் பதிவாகிறது. நினைவு மீண்டும் அதை இழுக்கும் சக்தியாக வருகின்றது
1.இவ்வளவு தான்… இதில் வேறு சிரமம் ஒன்றுமில்லை
2.பெரிய அதிசயமும் இல்லை.
திட்டியவனைப் பதிவு செய்தால் அவனை நினைக்கும் போதெல்லாம் குழப்பம் வருகிறது. வியாபாரத்தில் ஒருவன் நம்மை ஏமாற்றி விட்டான் என்றால் உடனே நமக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது.
இது போன்று தான்… எல்லாமே அந்தப் பதிவின் தொடர் வைத்துத் தான் நினைவாகி இயங்குகிறது.
ஆகையினால்…
1.மிக மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்… இதை எண்ணி நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தாலே போதுமானது…!