இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
1.ஒரு கஷ்டமான நிலைகளைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.உடனே இதைத்தான் நான் தியானிக்க வேண்டும்.
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இரண்டு பேர் ஒருவருக்கொருவர் கோபத்துடன் சண்டையிடுவதைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… அவர்கள் சண்டையிடும் உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருள் சக்தியை உள்ளே செலுத்தி வலுவாக்க வேண்டும்.
சண்டை போட்டார்கள் அல்லவா… அவர்கள் இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தத் திறன் பெற வேண்டும்; என்று அவருடைய உணர்வுகளை நாம் நமக்குள் மாற்றி விட வேண்டும்.
அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று “நாம் எண்ணுகின்றோம்…” அவர்கள் அப்படி எண்ணினால் அவருக்கும் நல்லதாகும். ஆனால்
1.அவர்களிடம் போய்ப் புத்தி சொன்னால் கேட்பார்களா…? இல்லை
2.இரண்டு பேர் சண்டையிடுகின்றார்கள் என்றாலும் ஒருவரைப் பார்த்து “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…!” என்று நாம் சொன்னால்
3.நீ அவனுக்குச் சாதகமாகப் பேசுகின்றாய்… எனக்கு நீ உதவியாக இல்லை…! என்று சண்டைக்கு வருவார்கள்
4.இருவரில் யாரிடம் சொன்னாலும் இருவருமே இப்படித்தான் சொல்வார்கள்… சமாதானப்படுத்த முடியுமா…!
5.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் வரவில்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.
ஆகையினால் அதை நாம் நுகர வேண்டியதில்லை. யாம் சொல்லிக் கொடுத்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
அதைஸ் செய்து… சண்டையிட்ட அந்த இருவருமே மகரிஷிகளின் அருள் சக்தியால் சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் அது தீமையைத் தடுக்கும் சக்தியாக மாறுகின்றது.
அடுத்து சாந்தமான பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…? அவர்களிடமிருந்து சமைத்த உணர்வு நம்மிடம் இருக்கிறது
1.நீங்கள் இந்த மாதிரிச் செய்தீர்கள் அதனால் தான் உங்களுக்குக் கஷ்டம் வந்தது
2.அதற்குப் பதிலாக மகரிஷிகளின் அருள் சக்திகளை இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள் நன்றாகிவிடும்…! என்று சொல்லலாம்.
அவர்கள் அமைதியாக இருக்கும் போது நாம் சொல்வதைக் கேட்க வைத்து உண்மைகளைச் சொன்னால் அவர்கள் நல்லதை எடுப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது.
அட என்ன…? நீதானப்பா முதலில் அவனிடம் சண்டை போட்டாய்…! என்று சொல்லக் கூடாது. சந்தர்ப்பத்தினால் உணர்ச்சி வசப்பட்டீர்கள்… சண்டையிட்டுக் கொண்டீர்கள்.. அதனால் அன்பை இப்படிக் கெடுத்துக் கொண்டீர்கள்…! சற்று சிந்தியுங்கள் என்று இந்த ஞானத்தோடு சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வருகின்றது.
ஈர்க்கும் சக்தி அங்கு இல்லை என்றால்…
1.என்னப்பா இப்படி எல்லாம் செய்கின்றாய் என்று புத்திமதி சொல்வது போல் சொன்னால்
2.எல்லாம் தெரிந்த மாதிரி… இவர் பெரிதாகச் சொல்ல வந்து விட்டார் என்பார்கள்.
3.சொன்னாலும் கேட்க மாட்டார்கள்… நமக்கு எதிர்ப்பதமாக வரும்.
ஆகவே அருள் உணர்வுகளை நாம் வளர்த்து அந்தப் பண்போடு சொல்லிப் பழகுதல் வேண்டும். எப்படி…? இருவரும் சண்டை இட்டீர்கள். அதனால் உடலில் நோயாக மாறியது… சிந்திக்கும் தன்மையும் இழக்கிறது. அதனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் பொறுப்பாக இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இருவருமே பெறுங்கள் உங்கள் உடலில் அதை வளர்த்துக் கொள்ளுங்கள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் அந்த தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.
இது அவர்களுக்குள் ஏற்றுக் கொள்ளும் பருவமாக மாறுகின்றது… கொஞ்சமாவது கேட்பார்கள்… “கேட்டால் தானே உள்ளே செல்லும்…” சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.
இப்படிப்பட்ட உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர் சண்டையிட்ட உணர்வோ வெறுப்படைந்த உணர்வோ நமக்குள் வருவதில்லை. அவர்களும் ஒன்றுபட்டு வாழும் நிலைக்கு வருகின்றார்கள்… பகைமைகளை அகற்ற முடிகிறது.
இப்படித்தான் நாம் மாற்றிக் கொண்டு வர வேண்டும்… இதைச் செயல்படுத்த வேண்டும்
தியானம் என்பது…
1.அந்த ஞானிகளின் அருள் சக்தியை எடுத்துச் சமைத்து ஞானத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.தீமை நமக்குள் வராதபடி எல்லாம் தெளிந்த மனமாக வளர்கின்றது
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.
கோடிக்கரையில் (கடைசி மனித உடல்) இருக்கும் நாம் இதையே செய்து கொண்டு வந்தால் தனுசு கோடி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாறுகின்றோம். இது தான் இராமேஸ்வரத்தின் தத்துவம்
இராமன் என்றால் எண்ணம்... நாம் நுகர்ந்தது எண்ணத்தால் உருவா(க்கு)கின்றது. எதை உருவாக்கினோமோ அதுவே ஈசனாக இயக்குகிறது. அது தான் இராமேஸ்வரம்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமலிங்கம்…
2.உயிருடன் ஒன்றி ஒவ்வொருவரும் நாம் ஒளியாக மாற வேண்டும்…!