ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 20, 2023

குரு இல்லாத வித்தை வித்தையாகாது… ஏன்…?

குருநாதர் அன்று சூரியனைப் பார்க்கும்படி சொல்லியிருந்தார். அதைத் தான் நானும் சொல்லியிருந்தேன். காரணம் அன்று கதிரியக்கங்கள் ஜாஸ்தியாக வெளிப்படவில்லை.

ஆனால் மனிதன் செயற்கைக்காக வேண்டி அதை அதிகமாகப் பயன்படுத்தி அதனின் கசிவுகள் வெளிப்பட்ட பின்
1.அது எல்லாமே சூரியன் ஈர்ப்புக்குள் சென்றுவிட்டது… அதனால் அது கரும்புகைகளைக் கக்க (SUN SPOTS – SUN FLARES) ஆரம்பித்தது.
2.அப்படிக் கக்கும் நேரத்தில் அதைப் பார்த்தோம் என்றால் நம் உடலில் அதனின் விஷத் தன்மைகள் புகுந்துவிடும்
3.அதனால் தான் யாரும் சூரியனைப் பார்க்கக்கூடாது என்று யாம் பின்னாடி சொன்னது.

அதே சமயத்தில் அன்று ஆரம்பத்தில் 27 நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொல்லி இருந்தேன்.
1.முதலில் நான் (ஞானகுரு) நேரடியாக அதை எடுத்துக் கொள்வது… அதற்குப் பின் உங்களுக்குள் அதைப் பாய்ச்சுவது
2.நான் எடுத்து அலைகளாக அனுப்பியதை… நீங்கள் எண்ணி எடுக்கப்படும் பொழுது உங்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யாது.

ஆனால் விட்டுவிட்டு… நேரடியாக நட்சத்திரங்களின் சக்தியை நாங்கள் எடுக்கிறோம் என்றால் உடம்பெல்லாம் அரிப்பு ஆகிவிடும்… எதிர் நிலையாகிவிடும்.

ஆரம்பத்தில் நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னவுடனே “எம்மை விட்டுவிட்டு…” பவானியில் சில பேர் அதை எடுக்கப்படும் பொழுது அவர்களுக்கு உடல் எல்லாம் அரிப்பு ஆகிவிட்டது.

பவானியிலிருந்து நான் வெளியே சென்றவுடன் நிறையப் பேருக்கு அது உண்டானது. ஏனென்றால் “நாம் சொன்னோம்” என்று சொல்லிக்கொண்டு எடுக்க ஆரம்பிக்கின்றார்கள்.

1.ஆனால் நட்சத்திரங்களின் சக்தியை நான் எடுத்து அதனுடைய வீரியத்தைத் தணித்து
2.உங்களிடம் அதை வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து… அந்த உணர்வை எடுக்கும்படிதான் சொல்லிக் கொடுக்கின்றோம்.
3.அதாவது என்னிடம் விளைந்ததை நீங்கள் எடுத்தால் அது உங்களைப் பாதிக்காது
4.அந்தச் சக்தியைப் பெருக்க ஏதுவாக இருக்கும்… தொல்லை கொடுக்காது.

இப்படி எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஒத்தாசையாக அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தொடர்ந்து இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

நோயினால் அவதிப்பபடுபவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சமயத்தில் நோய்களை மாற்றிடும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து… முறைப்படி சொல்லுங்கள்… உங்கள் நோய் நீங்கிவிடும்..! என்று இதன் வழி செயல்படுத்தினால் உங்களை அந்த நோய் பாதிக்காது.

சாமி தான் சொல்லிவிட்டார் அல்லவா…! ஈஸ்வரா குருதேவா என்று எண்ணிவிட்டு
1.அடுத்தவர் உடலில் இருக்கக்கூடிய நோயெல்லாம் போக வேண்டும் என்று சொன்னால் அல்லது பிரார்த்தனை செய்தால்
2.அவர்களின் நோய் உங்களுக்கு வந்துவிடும்… தெரியாமல் அதிலே போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது
3.அதற்குத்தான் ஆயிரம் தடவை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

எதைக் கேட்டாலும் அடுத்த கணம் “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்…” என்று யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சக்தி செய்து தூய்மையாக்க வேண்டும்.

அதற்குப் பின் நோயாளியைப் பார்த்து துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி நீ பெறுவாய்…! அந்தச் சக்தியால் உனக்குள் இருக்கக்கூடிய நோயை உன்னால் நீக்க முடியும்…! என்று இப்படித்தான் அவர்களுக்குத் தெளிவாக்க வேண்டும்.

ஆனால்
1.வேதனைப்படுகின்றார் மிகவும் சிரமப்படுகின்றார் ஈஸ்வரா…! என்று நீங்கள் எண்ணி
2.அவர் நோயெல்லாம் குறைய வேண்டும் என்று “ஏங்கினால்” அவர் நோய் உடனடியாக உங்களைத் தாக்கும்.

இப்படிச் செய்யக்கூடாது…!

சில பேர் இது போன்று தெரியாமல் உள்ளே சென்று சிக்கிக் கொள்கின்றார்… அவசரத்தில் இப்படிச் செய்து விடுகின்றனர். இப்படி வரக்கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

பாசமாக இருக்கும் நண்பரோ உறவினரோ குழந்தைகளோ திடீரென்று அவர்களுக்கு எதிர்பாராது ஒரு விபத்தாகி விட்டது என்றால் உடனே
1.“நேற்றெல்லாம் நன்றாக இருந்தாரே… நல்ல மனிதருக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று தான் எண்ணுகிறார்கள்.
2.ஆத்ம சுத்தி செய்வதை மறந்து விடுகின்றார்கள்;
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவதை மறந்து விடுகின்றார்கள்.
4.அவர் அடிபட்டு விட்டாரே என்று எண்ணி அந்த உணர்வைத் தான் “நேரடியாக” எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் அது நமக்குள் வராதபடி முதலில் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்தில் அடிபட்டவரின் உணர்வு முதலில் நம்மை இயக்கி விடாதபடி இப்படித் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அடிபட்டவர் உடல் முழுவதும் படர வேண்டும். வேதனையிலிருந்து அவர் மீண்டு நல்ல உணர்வு பெறக்கூடிய தகுதி பெற வேண்டும். அவருக்குப் பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று நம்மைத் தூய்மைப்படுத்திய பின் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.இது சாதாரணமானது இல்லை…
2.உயர்ந்த சக்தியாக அவர் நுகர ஆரம்பிக்கும் பொழுது இது அவருக்குள் இயக்கச் சக்தியாக மாறும்.
3.அடிபட்டதிலிருந்து சீக்கிரமே விடுபடக்கூடிய சக்தியும் அந்த நம்பிக்கையும் அவருக்கு வரும்.

இதை நீங்கள் செய்து பார்க்க வேண்டும்.

கடினமானதாக இருந்தால்… கூட இரண்டு தடவை செய்தால் அவருடைய நோய்களையோ குறைகளையோ வேதனைகளையோ நீக்குவதற்கு நிச்சயம் இது உதவும்.

“உங்களுக்கு இந்தச் சக்தி உண்டு” என்று சொல்கின்றோம்…!

ஆனால் தவறிப் போய் அவருடைய வேதனையையும் துன்பத்தையும் நீங்கள் எண்ணி எடுத்து விடக்கூடாது ஆத்ம சக்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்; இந்தச் சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி விட்டு
1.இதே மாதிரி நீங்கள் செய்யுங்கள்
2.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கும்… உடல் நலமாகும் என்று
3.இப்படித்தான் நாம் நோயுற்றவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இது போன்ற ஒரு பழக்கத்திற்குக் கட்டாயம் நாம் வந்தே ஆக வேண்டும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையுல் பிறரின் கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டி இருக்கின்றது. அப்போது உடனே சோர்வடைந்து விடுகின்றோம்.

ஆனால் இதை மாற்றி உங்களுக்குள் திருத்தி அந்தச் சோர்வை நீக்க வேண்டும். “அந்தச் சக்தியைத் தான் யாம் இப்போது கொடுக்கின்றோம்...”

நல்லதாகக் கூடிய சக்தியை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அதைப் பெறக்கூடிய தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

இந்தப் பழக்கத்தை நீங்கள் சீர்படுத்திக் கொண்டு வருதல் வேண்டும்..