ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2022

வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற ஒரு தெளிவான "முன் சிந்தனை (PLAN) வேண்டும்..."

புதிதாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் ஒரு இன்ஜினியரை வைத்து அதற்குத் தேவையான பிளானைப் போடுகின்றோம். தேவையான பொருள்களை வாங்கிக் கொத்தனாரையும் மற்ற ஆட்களையும் வைத்து அந்த வீட்டைக் கட்டுகிறோம்.

ஆக... வீட்டைக் கட்டுவதற்கு முன்னாடியே எப்படி...? என்ன...? ஏது...? என்று எல்லைகளை வகுத்து விட்டுத் தான் வேலைகளை நாம் செய்யத் தொடங்குகின்றோம்.

அதே போல் ஒரு பலகாரத்தை செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே அரிசியை ஊறவைக்கின்றோம். ஊறிய பின் அதை அரைத்து மற்ற பொருள்களை அதனுடன் சேர்த்து அதைப் புளிக்க வைக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து மாவினை எடுத்து வடையாகச் சுடும் போது அதற்குத் தக்க ருசியும் சுவையும் பலகாரத்தில் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எவ்வாறு நாம் தெளிந்து செயல்படுத்துகின்றோமோ அதைப் போல் நமது வாழ்க்கையிலும்... எதை... எக்காலத்தில்... எப்படிச் செயல்படுத்த வேண்டும்...? என்ற பக்குவ முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவை அரைத்து வைத்துவிட்டுப் பத்து நாளைக்குச் சேமித்து வைத்தால் அது அதிகமாகப் புளித்துப் போய் விடுகின்றது. ஆனால் பத்து நாள் சேமித்து வைக்க வேண்டும் என்றால் அதை ஒரு ஐஸ் பெட்டியில் பத்திரமாக வைத்தால் கெடாமல் இருக்கின்றது.

விஞ்ஞான அறிவில் வாழும் நாம் இப்படிப் பக்குவப்படுத்துவது போன்று
1.அந்த மெய் ஞானிகளுடைய உணர்வு கொண்டு நமக்குள் அருள் ஒளியைப் வளர்த்து
2.அதை வைத்துப் பக்குவப்படுத்தி... நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும்.
3.சமயம் வரும் பொழுதெல்லாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

பொருள்கள் கெட்டுப் போகாது அதை பாதுகாக்க எப்படிச் செயல்படுத்துகின்றோமோ அதைப் போன்று நமக்குள் தீமையான உணர்வு வந்தால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் கொண்டு அந்தத் தீமை நமக்குள் வளராதபடி பாதுகாத்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் ஒளியை நுகர்ந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பாதுகாத்து என்றும் வேகா நிலை பெறும் தன்மையை உறுதிப்படுத்தி இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து பழகுதல் வேண்டும்.

ஆகவே குரு காட்டிய அருள் வழியில்...
1.அருள் ஒளி பெறுவோம்
2.இருளை அகற்றுவோம்
3.ஒளியான உணர்வை வளர்ப்போம்
4.ஒளியின் சரீரமாக நிலைப்போம்
5.நிலையான ஒளி சரீரத்தைப் பெற இந்த வாழ்க்கையினை அருள் வாழ்க்கையாக மாற்றி அமைப்போம்.