ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2022

நெஞ்சுக் குழியில் இருக்கும் “தாய் மூச்சு நாடி”

கோப குணத்தின் உந்துதலால் அந்த நேரத்தில் நாம் ஈர்த்துக் கொள்ளும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இருபாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி...! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்... அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி... இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது...எது.. எப்பொழுது செயல்படுகிறது...? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி... மோகம்.. தாகம்...” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்... சுவாசமும்... செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்...!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்... மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்... ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி...
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்...!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே...
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்...!