ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2022

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து வாழ்வோம்

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் இருளை அகற்றி ஒளியாக மாற்றிடும் அருள் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து வெளிப்படுத்தும் போது எல்லோருக்குள்ளும் அது ஓங்கி வளர்கின்றது.
1.இப்படி ஒருவருக்கொருவர் நாம் தொடர்பு கொண்டு பதிவான உணர்வுகளின் துணை கொண்டு
2.அடுத்து நாம் எங்கிருந்து தியானித்தாலும் அந்த அருள் உணர்வுகள் நமக்குள் ஒன்றாக இணைகிறது.

இப்படி வலுக் கொண்ட உணர்வின் துணை கொண்டு எல்லோரும் சேர்ந்து தியானித்து இந்த அருள் சக்திகளைப் பெருக்கி அதை நமக்குள் அடிக்கடி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போன்று வளர்ந்து வந்தாலும் கூட... சில சந்தர்ப்பங்களில் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வெறுப்பு வேதனை என்று ஏற்பட்டால் அதைக் கவர்ந்தால்... அது நாம் போகும் பாதையைத் தடைப்படுத்தும் நிலையாக வந்து விடுகின்றது.

1.தடைப்படுத்தும் நிலையாக வரும் பொழுதெல்லாம்... அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி... தடைகளை நீக்கி
2.நம்முடன் இணைந்து வாழும் நிலைகளை வளர்த்து அருள் ஒளியின் உணர்வாக உருவாக்கி
3.அருள் ஒளியின் சுடராக மாற்றி அமைத்தல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் நரகவேதனைப்படுத்தி ஒன்றுக்கு உணவாகி அதிலிருந்து மீண்டு... நஞ்சினை வென்றிடும்... வேதனையை அகற்றிடும்... சொர்க்க பூமியாகத் தான் இந்த மனித உடல் வளர்ந்து வந்துள்ளது.

நம் உயிரே சொர்க்கவாசலாக உள்ளது. சொர்க்கம் என்ற நிலையாக என்றும் எதனையுமே வென்றிடும் தன்மை பெற்று... அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை ஒளியின் சுடராக மாற்றி அமைக்கும் வேகாநிலையை நாம் அடைய முடியும்.

நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து அந்த அருள் சக்தியைப் பெருகுதல் வேண்டும். ஒருங்கிணைந்து அந்தச் சக்திகளைச் சேர்த்தது தான் துருவ நட்சத்திரம்.

நாம் அனைவரும்... “அனைவரும் நலம் பெற வேண்டும்...” என்று தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை வளர்க்க வளர்க்க... பகைமைகள் நமக்குள் சேராது நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பத்தை நாம் வளர்த்தல் வேண்டும். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை உருவாக்குதல் வேண்டும். உடலை விட்டு அகன்ற பின் பெரு வாழ்வாக அமைகிறது.

ஆகவே... இந்த உடல் வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் தெளிவாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1.இந்த உடல் நமக்கு சொந்தமல்ல... இந்த உடலை வைத்து அருள் ஒளியை நமக்குள் சொந்தமாக்குதல் வேண்டும்
2.ஒரு விளை நிலம் இருப்பினும் அதிலுள்ள மணலை நாம் உட்கொள்வதில்லை.
3.விதைகளை மண்ணிலே விதைத்து நமக்கு வேண்டியவைகளாக விளைய வைத்து உருவாக்குகின்றோம்
4.அதில் விளைந்ததைத்தான் சமைத்து உணவாக உட்கொள்கின்றோம்... உட்கொண்ட பின் உயிருடன் ஒன்றி வாழுகின்றோம்.

இதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மையை நமக்குள் விளைய வைத்து... அந்த ஒளியுடன் ஒன்றினால் அந்த உணர்வுக்குத் தக்க நாம் ஒளியின் சரீரம் பெறுவது உறுதி...!

ஆகவே...
1.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து
2.இந்த வாழ்க்கையில் வரும் துன்பங்களை நமக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டாதபடி
3.அதைத் தடைப்படுத்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.