ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2022

பரலோகம்...! அது ஒரு உலகமாகத் தான் இயக்கிக் கொண்டுள்ளது

ஒருவன் தவறு செய்கின்றான் என்று நாம் பார்க்கின்றோம் அந்த உணர்வு நமக்குள் பதிவாகிறது. அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது உணர்வாக நாம் (சுவாசத்தின் வழி) நுகர்கின்றோம். உணர்வின் தன்மை நம்மை இயக்குகின்றது.

ஆக... மனிதனில் விளைந்த உணர்வுகள் தீயவையாக இருந்தாலும் நல்லவையாக இருந்தாலும் அது அனைத்தும் நம் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவி உள்ளது.
1.அதைத்தான் பரலோகம் என்பது.
2.இது ஒரு “உலகமாக” இயக்கிக் கொண்டுள்ளது.

பூமியில் உருவான தாவர இனங்கள் தனது சத்துக்களை வெளிப்படுத்தும் போது சூரியன் அதை எடுத்து இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக வளர்க்கின்றது. பரலோகத்தில் உருவாகும் நிலையாக அது மாறுகின்றது.

அதிலே விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது தன் தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அது உருப்பெறுகின்றது. இந்தப் பரலோகத்தில் தான் அந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

பரலோகத்தில் எந்தச் செடியின் சத்தை இது நுகர்ந்து கொண்டதோ நமது உயிர் அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அந்த உணர்வுக்கொப்ப ஈசனாக இருந்து ஓ... என்று ஜீவ அணுவாக மாற்றி ம்... என்று உடலாக மாற்றி விடுகின்றது.

இப்படி மாற்றுவதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத் தான்
1.பரலோகத்தில் இருந்து நாம் சுவாசிக்கும் பொழுது இமயம்
2.இரு இமைகளுக்கு மையமாக இருக்கும் நம் புருவ மத்தியில் இயக்கி
3.அந்த இமயத்திலிருந்து நாம் நுகர்வது அனைத்தையும் சிவலோகமாக மாற்றுகின்றது.

ஆனால்...
1.நாம் நுகர்வது சூட்சமமாக இருக்கின்றது (கண்ணுக்குத் தெரியவில்லை)
2.இருந்தாலும் உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

அடுத்து இந்திரலோகமாக மாற்றி இந்த உணர்வின் தன்மை உடலாக்கப்படும் பொழுது “உணர்வுக்கொப்ப செயலும்... செயலுக்கொப்ப உடலும்... உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பும்...” என்ற நிலையில் அமைக்கின்றது.

பரலோகத்தில் இருந்து நாம் எடுக்கும் உணர்வுகள் சிவலோகமாக “உடலாக” மாறுகிறது. அதைத்தான் “என் இசையில் நீ இசைப்பாய்... என் நினைவில் நீ வருவாய்...” என்று உயிரிடம் சொல்வது.

ஆகையினால்
1.நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் எதுவோ அதுவே உடலாக... சிவமாக மாறுகின்றது
2.இந்த உடலான சிவத்தை இயக்குகின்றது... உணர்வின் தன்மை கருவாக்குகின்றது
3.கருவின் தன்மை உருவாகும் போது பிரம்மம் ஆகின்றது
4.அதாவது எதனின் உணர்வு கருவாகின்றதோ மீண்டும் அது அணுவாக மாறும் பொழுது பிரம்மமாகிறது.
5.பிரம்மத்தின் நிலைகள் அடைந்த பின் அந்த அணுவின் மலம் உடலாக்கப்படும் பொழுது சிவமாக மாறுகின்றது.

சிவத்தின் தத்துவத்தை நமது ஞானிகள் இப்படித் தெளிவாக கூறியுள்ளனர். எங்கோ இருந்து யாரும் இயக்கவில்லை...
1.நமக்குள் நின்று உயிர் தான் இயக்குகின்றான்
2.நாம் ஏங்கிப் பெறுவதை உணர்த்துகின்றான்
3.உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றான்
4.உணர்வின் செயலாக அந்த உணர்வுகளே உடலாகின்றது
5.உடலின் உணர்வுகள் அதற்குத் தக்க தான் இயங்குகின்றது.

இது எல்லாம் இந்தப் பரலோகத்தில் பரவி இருப்பதை நாம் நினைவு கொண்டு வந்து எடுக்கும் போது நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.