ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2022

நம்மை ஒளியாக மாற்றும் பொறுப்பு உயிருக்கு இருக்கிறது

விண்ணிலே ஒளியின் சரீரமாகச் சுழன்று கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்தும்… அதனைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும்… வெளி வரும் ஒளிக் கற்றைகளை நமது பூமி துருவப் பகுதியின் வழி கவர்ந்து பரமான நம் பூமியில் பரலோகமாக மாற்றிக் கொண்டே வருகின்றது.

இந்த பரமான பூமியில் பரலோகமாகக் காற்றிலிருப்பதை நுகர்ந்தவர் அவரவர் உணர்வுகளுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.மனிதனான பின் அரும்பெரும் சக்தி பெற்ற அந்த உணர்வுகள் பூமியில் படர்ந்து இருப்பதை நமது குருநாதர் காட்டி
2.அருள் ஒளியினை எனக்குள் பதிவு செய்தார்… அதை உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.

அந்தப் பதிவினை மீண்டும் நினைவு கொண்டு நுகர்ந்தறியப்படும் போது அந்த அருள் ஒளியை அனைவரும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுதல் வேண்டும்.

தன்னம்பிக்கை கொண்டு இந்த வாழ்க்கை வாழும் போது
1.நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ அதை நமக்குள் உருமாற்றம் செய்வதும் உயிரே.
2.ஆக… உயிரே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது
3.நாம் நுகரும் அருள் உணர்வுகளை உடலில் பரவச் செய்கின்றது… இந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது
4.உணர்வுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.

இது உயிரின் வேலை.

நம் கண்ணின் வேலையோ நாம் எதிரில் இருப்பதைப் படமாக்கிப் பதிவாக்கி விடுகின்றது உடலுக்குள். ஆனால் நாம் செல்லும் பாதையில் இது பிழையான இடம்… இது தவறான இடம்… என்பதனை நம் கண் வழிகாட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி நம்மைக் காக்கின்றது.

நமது கண்களால் உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மை உயிரிலே கொடுக்கப்படும் பொழுது நுகர்ந்த உணர்வை அறிகின்றோம். நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலை உயிர் இயக்குகின்றது.

தீமை என்று கண் உணர்த்தினாலும்… அப்போது அந்தச் சமயத்தில் தீமையிலிருந்து விடுபட்டாலும்… நுகர்ந்த உணர்வு தீமையின் அணுக்களாக உருவாகி விடுகின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வுகளை… உயிர் அந்த உணர்வுகளின் வழி நம்மை வழி நடத்தினாலும் அந்த உணர்வின் சத்து ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாறுகிறது.

பரலோகத்தில் இருப்பதை - உயிரணு தாவர இனச் சத்துக்களை எல்லாம் நுகர்ந்த பின் தாவர இனச் சத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் வந்து உடல்கள் பெற்றது.

இதைப் போன்று பல பல எண்ணிலடங்கா தாவர இனத்தின் உணர்வுகளை நுகர்ந்து… பல பல உடல்கள் மாற்றம் அடைந்து… மனிதனாக உருவாக்கும் தன்மை பெற்றது… தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்றது.

இருந்தாலும் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் இந்தப் பிரபஞ்சத்தின் ஆற்றலையும் அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அவைகளின் இயக்கங்களையும் கண்டுணர்ந்தவன் “அகஸ்தியன்…”

1.அவனுக்குள் விளைந்த அந்த உணர்வுகளை நாம் கவர்ந்தால்
2.நமது நினைவாற்றல் அகஸ்தியன் கண்ட அந்த அகண்ட அண்டத்திலும் பரவி
3.அதை நாம் நுகர்ந்து பேரருள் பேரொளி என்ற உணர்வினை நமக்குள் உருவாக்கிட முடியும்.

தாவர இனங்களுக்கு உரமிட்டு அதனை எப்படிச் செழிப்பாக வளர்க்கின்றோமோ அதே போன்று
1,அகஸ்தியன் உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு வீரிய சக்தியை ஊட்டி
3.ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த மெய் ஞானி கண்ட உண்மையைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் பாய்ச்சுகிறோம்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து அகஸ்தியன் உணர்வை வளர்த்தால் வாழ்க்கையில் நீங்கள் நுகர்வதை எல்லாம் உங்கள் உயிர் ஒளியின் சரீரமாக மாற்றி அமைத்து விடுகின்றது.

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சியை ஊட்டி… நஞ்சு புகாது தடுத்து நிறுத்தும் நிலையாகவும் இது அமைகின்றது.