ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2022

நான் செய்வது எப்படித் தவறாகும்... என்று கேட்பது நாம் தானா...! அல்லது சுவாசித்ததா...?

மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன...?

எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது - நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.

நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.

ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.

உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்... அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்... அகங்காரம் கொள்ளுகின்றது.

அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்...? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்... தான் நுகர்ந்த உணர்வுகள்... தான்... தனது... என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா...?

ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்... “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்...” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.

இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை... துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்...” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.

இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்...
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்... அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.