1.கண்ணின் கருவிழிக்குப் பேர் “ருக்மணி (படமாக்குவது)” என்றும்
2.கண்ணின் காந்தப் புலனறிவுக்குப் பேர் “சத்தியபாமா (உண்மையை உணர்த்துவது)” என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.
3.அந்த இரு சக்திகளையும் சேர்த்துத் தான் “கண்ணன்” என்றும் காரணப் பெயர் வைத்தனர்.
உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே ஒரு பஸ் வேகமாக வருகின்றது... நம் கண்களின் கருவிழி அதை நம் உடலில் பதிவாக்குகின்றது.
நம் மீது மோதும் நிலைகள் கொண்டு வருவதை அந்த உணர்வலைகளைக் கவர்ந்து உயிருடன் இயக்குகின்றது. அப்போது “பஸ் நம் மீது மோதி விடுமோ...!” என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
1.அதனின்று விலகிச் செல்ல கண்கள் நமக்குப் பயன்படுகின்றது.
2.விபத்து ஏற்படாமல் அந்த நேரத்தில் காப்பது நமது கண்களே.
ஆகவே கண்ணன்... கண்கள் நம்மை வழி நடத்துகின்றது. தீமையான உணர்வுகளைக் கண்டபின் அந்தத் தீமையிலிருந்து விடுபட விபத்துகள் வரும் என்று கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து விபத்திலிருந்து நம்மைக் காக்கின்றது.
அப்படி விபத்திலிருந்து காத்தாலும் பஸ்ஸின் வேகத்தைக் கண்டு அந்த அச்ச உணர்வு உயிரிலே பட்டு வேகமாகப் படும் பொழுது “பயத்தை ஊட்டும் அதிர்வுகள்...” ஏற்படுகின்றது.
1.கண்கள் அந்த உண்மையை உணர்த்தினாலும்... நம்மைக் காத்தாலும்
2.நாம் நுகர்ந்த பயமான உணர்வை உயிர் இயக்கி உடலைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும்
3.நுகர்ந்த பயமுறுத்தும் உணர்வை ஓ...ம் நமச்சிவாய... என்று ஜீவ அணுவாக... நம் உடலாக மாற்றி விடுகின்றது.
ஒரு இடத்தில் இருவர் சண்டை இடுகின்றனர்... கடுமையாக மோதுகின்றனர். பயங்கரச் சொல்களையும் விபரீதப் பேச்சுகளையும் பேசுகின்றனர்.
நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் கண்ணின் கருவிழி அதைப் பதிவாக்குகின்றது. அவர்கள் செயல்களை உற்றுப் பார்த்துச் சண்டையிடும் உணர்வின் தன்மை நுகரச் செய்கின்றது.
அவர்கள் தவறு செய்கின்றனர்... பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாம் நுகர்ந்ததைக் கண் உயிருடன் இணையச் செய்கின்றது
2.உயிரோ அந்த உணர்வினை ஓ...ம் நமச்சிவாய... என்று ஜீவ அணுவாக உடலாக மாற்றி விடுகின்றது.
இது எல்லாம்... நாம் தவறு செய்யவில்லை என்று இருந்தாலும்
1.தவறு செய்பவருடைய நிலைகளை நம் கண்கள் உணர்த்துகின்றது.
2.ஆனால் பதிவாக்கிய பின் உயிரோ அதை உடலாக மாற்றி விடுகின்றது.
அச்சுறுத்தும் உணர்வு உடலுக்குள் அணுக்களாக மாறிவிட்டால் அந்த பயமுறுத்தும் உணர்வைச் சுவாசிக்கும்போது “உயிரிலே படும்போதெல்லாம்” நாமும் பயந்து அதற்குத் தக்கவாறு வாழ்க்கை அங்கே நடக்க நேர்கின்றது
பயமுறுத்தும் உணர்வுகள் அதிகமாகி அந்த அணுக்கள் பெருகத் தொடங்கினால்...
1.நம்மை அறியாமலே அடிக்கடி பதட்டமடையும் அல்லது நடுக்கம் அடையும் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.
2.ஒரு காரியத்தையோ தொழிலையோ செய்ய வேண்டும் என்று வலுவாக எண்ணினாலே பதட்டமும் பயமும் வரும்... மன உறுதி இழக்க நேரும்.
அதனால்... சோர்வும் சஞ்சலமும் அடைந்து “என்னால் முடியவில்லையே...” என்று வேதனைப்படும் பொழுது - வேதனை என்பது விஷம்...! நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் இந்த உடலில் விஷமான அணுவாக மாற்றி விடுகின்றது.
அதனால் தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை” என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
நாம் எதையெல்லாம் எண்ணிச் சுவாசிக்கின்றோமோ அதனின் உணர்வினை உணர்த்தினாலும் அதனதன் அணுவாக உருவாகித் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.
நாம் தவறு செய்யாமலேயே பல நிலைகள் இப்படி வருகின்றது.
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் பல கோடிச் சரீரரங்களில் தன்னைக் காட்டிலும் வலுவான மிருகங்களின் உணர்வுகளை எடுத்து ஒவ்வொன்றில் இருந்தும் பாதுகாப்பான உணர்வுகளை எடுத்துத் தப்பிடும் உணர்வுகளை எடுத்துத் தான் மனிதனாக வந்துள்ளோம்.
அதாவது வலுவான உணர்வை நுகர்ந்து நுகர்ந்து தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து... இன்று வந்துள்ளோம்..
முதலிலே சொன்ன மாதிரி இன்றைய மனித வாழ்க்கையில் பயமான உணர்வுகளையோ... சண்டையிட்டோர் உணர்வுகளையோ... அல்லது நோயாளியின் உணர்வுகளையோ எடுக்க நேரும் போதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.அதிலிருந்து வரும் உணர்வுகளை உயிர் வழியாக நுகர்ந்து
3.நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.
காரணம் அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சினை வென்றது... உணர்வினை ஒளியாக மாற்றியது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.
தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதிலே இரண்டறக் கலந்த செம்பு பித்தளையும் ஆவியாக மாறித் தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துன்பப்படுத்தும் உணர்வுகளை நம் கண் கவர்ந்தாலும்
2.அந்த உண்மைகளை உணர்த்தினாலும்
3.அதிலிருந்து விலகிச் சென்றாலும்
4.நுகர்ந்த உணர்வு நம் உடலுக்குள் ஜீவ அணுவாக மாறுவதற்கு முன்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
விபத்துக்களோ அல்லது அது போன்ற அதிர்ச்சியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலோ அந்தக் காலங்களில் எல்லாம் ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். பயமான உணர்வலைகள் நீங்க வேண்டும்... என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்... நாங்கள் மன பலம் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று எண்ணினால் நம் எண்ணத்தை வலுவாக்கும். அனுபவத்தில் பார்க்கலாம்...!